பட்டாபிஷேகம்

அமெரிக்கா வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. நாட்கள் எல்லாம் நத்தை வேகத்தில் சென்றாலும் மாதங்கள் மனோவேத்தில் பறக்கின்றன. ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரி மாதிரி.. ஆனால் மல்டி லெவல் ரிலேட்டிவிட்டி.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், பணம் செய்யப் பணம், செல்போன், லேப்டாப், இன்டெர்னெட், பக்திக்கு பிள்ளையார் படம், குளிருக்கு க்ளவுஸ், தலைவலிக்கு டைகர்பாம், மக்குக்கு பதிலாக காலியான தயிர் டப்பா.. என ஜபர்தஸ்தாக ஒருவழியாக சென்னையில் வாழ்ந்த வாழ்க்கைமுறையை இங்கேயும் நிலை நாட்டிய நேரத்தில்... தலைமுடி கண்ணை மறைத்தது.

பள்ளி நாட்களில் அதிகப்படியாக முடி வளர்த்து வாயின் நுணியைக் குவித்து, மூக்குக்கு வெளியே நகர்த்தி மேல் நோக்கி ஊதினால், ஒரு கொத்து மயிர்கள் காற்றில் இலகுவாக பறந்து மறுபடி வந்து கண்ணை மறைக்கும்.. கொஞ்ச நாட்களுக்கு அது பேஷனாக இருந்தது. பயாலஜி மாஸ்டர், முன்னம் பெஞ்சில் அமர்ந்திருந்த நண்பனை, முடியைப்பிடித்து தூக்கி பளேரென்று அறைந்த அடுத்த நாளிலிருந்து க்ளோஸாக முடி வெட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். பேஷனை விட தற்காப்பு முக்கியமானது.

"தலைக்கு மேல வேலை" என்று சும்மா வெறும் ஜோக்காக இருக்கும் சிகை திருத்தும் செயல், கொஞ்சம் சீரியசானது என்பது சிலபேருக்கு மட்டும் தெரிந்தது. அம்பட்டனின் (இது ஏன் இழிசொல்லாக மாறியது என்பது எனது உண்மையான வருத்தம்) ஒரு தவறான கீரலில் ஒரு மாதம் நரகமாகும். One bad whip of a Scissor and there's no going back... unless there's a fast growing back.

சலூன் என்பது சுடுகாடு மாதிரி. "சமரசம் உலாவும் இடமே !"... அதாவது, நான் போகும் சலூன்கள்... அதாவது, வட சென்னையில் இருக்கும் சலூன்கள்..

டிப்பிக்கல் (அருமையான ஆங்கில வார்த்தை) சலூன் எப்படி இருக்கும் ? ஒரு பத்துக்குப் பதினைந்து அடி ரூம்.. துரு பிடித்த ஷட்டருக்குப் பின்னால் ஒரு சன் ஸ்க்ரீன் கண்ணாடி தடுப்பு, அதன் ஒரு ஓரத்தில் கதவு... எப்பொழுதும் திறந்தே இருக்கும்.. உள்ளே நுழைந்ததும் ப்ரதானமாக இரண்டு சுழல் நாற்காலிகள் (அதில் சிறுவர்களுக்கென்று தனியாக ஒரு ஃப்ளோர் இருக்கும்.. ஷேவிங் செய்கையில் தலை சாய்த்துக்கொள்ள ஒரு வசதி.. உள்ளங்காலை அமர்த்திக்கொள்ள ஒரு குஷன் சீட் என பிரமாத சொகுசாய் இருக்கும்), அதன் முன்னேயும் பின்னேயும் பூதாகாரமான கண்ணாடிகள்... அதில் ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித் படங்கள்.. (ஆண்கள் மட்டுமே வரும் சலூனில் ஸ்த்ரீக்களின் படங்க்ள் வைப்பது ஒரு மிகப்பெரிய சைக்காலஜி ட்ரிக்).. சுவற்றில் ஒட்டினாற்போல் நீள வாக்கில் அலமாரி.. அதன் மேல், பத்துப் பதினைந்து சீப்புகள், (ஒன்றிரண்டு பளிச்சென்று இருக்கும்.. பாக்கி எல்லாம் ஹரப்பா மொஹஞ்சதாரோ காலத்தவை).. அப்புறம் தலையில் தண்ணீர் தெளிப்பதற்கென்று கொக்கு மாதிரி கழுத்து வளைந்த பச்சைக்கலர் பாட்டில் (தலைமுடி வெட்டும் வைபவத்தில் எனக்குப் பிடித்தது இந்த தண்ணீர் தெளிக்கும் விளையாட்டு).. பவுடர் டப்பி, அப்புறம் சின்னச்சின்னதாய் பாரின் டப்பாக்கள்.. என்ன இருக்குமோ தெரியாது.. அதை யாருக்கும் பயன்படுத்திப் பார்த்ததில்லை.. ஈசான்ய மூலையில் ஒரு டி.வி இருக்கும்.. ரொம்பவும் வசதி குறைந்த சலூனில் ரேடியோ இருக்கும்.. இடது ஓரத்து கப்போர்டுதான் கல்லாப் பெட்டி.. வலது ஓரத்தில் சரைக்கும் கத்தி + டோபாஸ் பிளேடு பேக்கட்..

பின்னங்கண்ணாடியின் கீழே நீளமான பென்ச்.. கொஞ்சம் வசதியான சலூன்களில் குஷன் போட்ட பென்ச்.. அதன் மீது குவிந்து கிடக்கும் தினத் தந்தி பேப்பர்... சினிமா மலர்.. தினத்தந்தி செய்திகள் எல்லாம் எமோஷனலாக இருக்கும்.. 'கதறக் கதறக் கற்பழிப்பு !!".. "கத்தியால் கோரமாக வெட்டிப் படுகொலை !!" (ஒரு செய்தியை மிக அழுத்தமாக சொல்லவேண்டுமென்றால், வல்லின மெய்களை பயன்படுத்திப் பாருங்கள்).. இப்படி சில பேப்பர்கள்.. முழு பக்கத்துக்கு சினிமா நடிகைகள் பொஸ்டர் நிறைந்த பேப்பர்கள்.. ஆண்டியார் பதில்கள் என்று கேனத்தனமான பேப்பர்கள் என்று .. தினத் தந்தி கலர்ஃபுல்லாக இருக்கும்.. மக்கள் இப்படியும் செய்தி வாசிக்கிறார்களா என்று தோன்றும்..

பெஞ்சின் மெறுமூலையில் ஒரு அட்டைத் தடுப்பு.. அதற்கு அந்தப்புறத்தில் ஒரு தண்ணீர் டாங்க்.. ஷேவிங் செய்யும்போது, க்ரீமையும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரையும், ஒரு கெமிக்கல் ப்ராஸஸ் மாதிரி தயார் செய்யும் இடம் அது... நடுவில் ஒரு ஷெல்ப்.. அதில்தான் ப்ரேதங்களைப் போர்த்தும் போர்வைகளன்ன துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சன்னமான வேகத்தில் சுழலும் ஃபேன்.. காற்றில் பறக்காத துண்டிக்கப்பட்ட ப்ரோட்டீன் முடிகள்.. வளைவு வளைவாய்... கொத்துக் கொத்தாய்..

இப்படித்தான் இருக்கும் - எங்க ஊர் சலூன்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை என்பது சலூன் கடைக்காரருக்கு தீபாவளி மாதிரி.. எவ்வளவு வேகமாக வெட்டினாலும், குறைந்த பட்சம் இருபது நிமிடங்கள் எடுக்கும்.. "என்ன சம்முகம்... லேட்டாகுமா.. வெளியூருக்கு போனும்" என்று ஒருவர் எட்டிப்பார்த்து விசாரிப்பார்.. சலூன்காரர், பெஞ்சில் இருப்பவர்களை ஒரு நோட்டம் விடுவார்.. தலைக்கு இருபது நிமிடம் (literally) என்ற கணக்கு போட்டு ஒரு எஸ்டிமேஷன் கணக்கு போடுவார். நானும் சில சமயம் இந்த மாதிரி நோட்டம் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவேன்.. இல்லையானால், ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தினத் தந்தி படிப்பதிலேயே கழிந்துவிடும்.. சிறுவர்கள் இருந்தால்.. தக்குனூண்டு மயிருக்கு எத்தனை நேரம் ஆகப்போகிறது என்று தப்புக்கணக்கு போடக்கூடாது... அவர்கள் அரங்கேறினால் ஒவ்வொரு கீறலுக்கும் முடிந்துவிட்டது போலவே தோன்றும்.. ஆனால், பெரியவர்களுக்கு ஆகும் அதே நேரம்தான் இவர்களுக்கும்.. லேசாக வழுக்கை விழுந்தவர்களுக்கு, ironically, வழக்கத்தைவிட அதிக நேரம் பிடிக்கும்..

எல்லாம் முடிந்துவிட்டது.. அப்பாடா.. அடுத்து நாம்தான் என்று நினைக்கும்போது, சலூன்காரர் ஒரு business proposition செய்வார்.. "ன்னா.. சொற சொறன்னு இருக்கு... ஷேவிங் பண்ணிக்கலாமா.. ?" என்று என்னமோ கூட்டுமுயற்சி மாதிரி கேட்பார்.. முடி வெட்டிக்கொண்டவர், அந்த "மாயக்கண்ணாடியில்" ஒரு சினிமா நட்சத்திரம் தன் ஒப்பனை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதைப் போல பார்த்துவிட்டு.. "எழவு... ஆமாம்லே.. செஞ்சிடு" என்று உத்தரவிடுவார்.. வெட்டப்படும் ஒவ்வொரு ரோமத்துக்கும் ரோமாஞ்சனமாகும் சலூன்காரர் (மன்னிக்கவும்.. கொஞ்சம் அதிகப்படியாக எதுகை மோனையில் எழுதிவிட்டேன்),... குஷியாகி க்ரீமை குழைக்க ஆரம்பிப்பார்.. நாம் நேற்றைய தினத்தந்தியை படிக்க ஆரம்பிக்கவேண்டியதுதான்.

நிற்க.. இந்தப் பதிவிற்கு ஏன் பட்டாபிஷேகம் என்று நாமகரணம் சூட்டினேன் ?

சலூன்கடையிலிருந்து வெளியே வந்து வீட்டுக்கு நடக்கும்போது, ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும்.. காதுக்கு இடுக்கில் அதிகமாக காற்று வீசுவதுபோல இருக்கும்.. எங்கோ வலிப்பது போல இருக்கும்... சட்டையில் முடி பிசுபிசுப்பாய் ஒட்டி இருக்கும்.. முடிவெட்டிக்கொண்டு வீடு திரும்பும் நாட்கள் மட்டுமே, அழுக்காய் தெருவில் நடமாடும் உரிமை கொண்டவை. You have a right to remain dirty.

அப்படி ஒரு நாளில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, எதிர்த்தவீட்டு மாமா எட்டிப்பார்த்துக் கேட்டார் - "என்னப்பா.. பட்டாபிஷேகமா ?" என்று.. வினோதமாக இருந்தது.. சலூனுக்குப் போய் வந்த சர்வ லட்சண அடையாளங்களைப் பார்த்துப் புரிந்துதான் கேட்டார் என்பதால், .. " ஹெ ஹெ ! ஆமாம் மாமா !" என்றேன்.. "அமாவாசையாச்சே ! அம்மா சொல்லலையா ?" என்று கலாச்சாரக் கேள்வி கேட்டார்.. அதற்கு என்ன சொல்லி மழுப்பினேன் என்று நினைவில்லை.. ஆனால், முடிவெட்டிக்கொள்ள செல்வதற்கு இன்னுமொரு நிக் நேம் கிடைத்தது அங்கேதான்.

மறுபடி, விட்ட இடத்துக்கு வருவோம். ஷேவிங் எல்லாம் செய்து முடித்தபின் அவரை விடுதலை செய்துவிட்டு, அவர்மேல் போர்த்தப்பட்ட துணியை உதறுவார்.. இந்த சமயத்தில்தான், பெஞ்சில் இருப்பவர்கள், அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கம் பார்ப்பார்கள்.. யார் அடுத்து, என்று.. அடுத்து நாம்தான் என்றால், thats the moment of truth ! பேப்பரை பக்கத்தில் இருப்பவரிடம் கொடுத்துவிட்டு மஹாராஜா அரியணையை நோக்கி நடக்கும் கம்பீரத்தில் நடந்து எந்தக்காலை வைத்து ஏறுவது என்று தயங்கி, ஒரு மாதிரியாக ஏறி, கொஞ்சம் வளைந்து நெளிந்து சிம்மாசனத்தில் அமர்ந்தபின் எதிரே தெரியும் நம் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.. என்னதான் நல்லதாக கண்ணாடி வாங்கி வீட்டில் வைத்தாலும், அந்த சலூன் கண்ணாடியில் தெரியும் முகம், அந்தப் பொலிவு, வீட்டில் நிச்சயமாக இருக்காது. மஹாராஜவின் அங்கியை போர்த்திவிட்டு மந்திரியின் பணிவுடன் "ஷார்ட்டா, மீடியமா ?" என்று கேட்பார்.

கிட்டத்தட்ட புதிதாக ஒரு மன்னனுக்கு முடிசூட்டு விழா நடந்து முடிந்தது போல இருக்கும்.. நல்ல பொருத்தமான பெயர்தான் - பட்டாபிஷேகம்.

மீடியம் என்று சொன்னால், முடி வெட்டியதே தெரியாது.. சும்மா காதுக்கு அருகில் கத்திரிக்கோலால் சப்தம் எழுப்பிவிட்டு, "போதுமா சார் !" என்று கேட்டால், நிஜம்மாக மீடியமாக வெட்டியது போல்தான் தோன்றும்.. ஒருதடவை அப்படி ஏமாந்தபின், எப்பொழுதுமே "ஷார்ட்" அல்லது "நல்லா ஷார்ட்" அல்லது "சம்மர் கட்".

கொஞ்ச நேரத்துக்குத்தான் மஹாராஜோபசாரம் எல்லாம்.. கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை தேய்ந்து மோவாய்க்கட்டையில் கைவைக்கப்படும்.. அதற்கப்புறம் சலூன்காரரின் கைப்பாவையாக மாறியாகவேண்டும்.. அஃதே நலம்.

ரொம்ப நேரம் நம்மை கண்ணாடியில் தோன்றும் நம் சுந்தர வதனத்தைப் பார்க்க விட மாட்டார்.. கன்னத்தில் கைவைத்து இடது மூலையைப் பார்க்கவைத்துவிட்டு வலது பக்க ரோமங்களை வெட்டிக்கொண்டிருப்பார்.. இப்பொழுதுதான் ஸ்ரீதேவிக்கும் மாதுரி தீக்ஷித்துக்கும் வேலை.. சலூன் கடையில் மட்டும் பெண்களின் படங்களை வெறித்துப் பார்ப்பதில் தவறேதும் இருக்கப்போவதில்லை.. ஆனால் அச்சிற்றின்பமும் சொற்ப நேரத்துக்குத்தான்.. இடதுபக்கம் வெட்ட வருகையில் வலது பக்கம் திருப்பினால், பார்ப்பதற்கு எதுவுமே இருக்காது.. வெறுமென கத்திரிக்கோலின் வீச்சை காதில் வாங்கியபடி உட்காரவேண்டியதுதான்..

உங்கள் வயதையும், அந்த சலூனில் அனுபவத்தையும் பொறுத்து, உரையாடல் ஆரம்பமாகும்.. "ஜாப்ல இருக்கீங்களா ?".. "ஆமாம்... !" .. "கம்ப்யூட்டரா.. ?" .. "ஆஹ்.. ஆமாம்.. !".. "எம் மச்சான் பொண்ணுகூட அதுல தான் வேல செய்யுது.. காலேல போனா.. ராத்திரிக்குதான் வருது.. புழியறானுங்கல்ல ?" என்று உரையாடல் நீளும்.. கொஞ்சம் வயதானவராக இருந்தால் அரசியல்.. "பே கமிஷன் எல்லாம் ஐவாஷ் சார்.. சொம்மனாங்காட்டிக்கு வோட்டு வாங்க.. ".. வட சென்னை சலூன் கடைக்காரர்கள் எல்லாரும் Politically active.

எல்லாம் முடிந்தபின் முகம் பேயறைந்தார்ப்போல் இருக்கும்.. இப்பொழுதுதான் பவுடர் போட்டு ஸ்பாஞ்சால் மூஞ்சியைத் துடைப்பார்.. பின்னர், நம்மைக் கட்டிப்போட்ட அந்த துணியிலிருந்து விடுதலை செய்வார்.. வேட்டி கட்டிக்கொண்டு செல்லும் சில நாட்களில், இந்த துணியை எடுக்கும்போது கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

இனிமேல் மஹாராஜா பதவி விலக வேண்டியதுதான்.. "போதுமா சார் ?".. மெதுவ்வாக இறங்கி முன்னும் பின்னும் பார்த்து.. நம்ம லட்சணம் அவ்வளவுதான் என உணர்ந்துகொண்டு, பாக்கெட்டில் கைவிட்டு இருபத்து ஐந்து ரூபாயை (1996) எடுத்து கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிக்கொள்வார்.. நாவிதர் !

இங்கே !! ?

நாளைதான் செல்கிறேன்.. Wish me luck !

ஐ ஹேவ் அ ட்ரீம்

Rosa Parks

இன்று அமெரிக்காவில் "மார்டின் லூதர் கிங் ஜூனியர் தினம்". விடுமுறை.

படத்தில் நீங்கள் காண்பது "ரோஸா பார்க்ஸ்" என்ற பெண்மணியின் முழு உருவச்சிலை. டேலஸ் டௌன்டௌனில் நிறுவப்பட்டிருக்கும் இந்தச் சிலைக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

1955 வருடத்தில், நிறபேதங்களின் உச்சக்கட்ட நாட்களில், ரோஸா பார்க்ஸ் என்பவர் மான்ட்கோமரி என்ற அலபாமா நகரத்தில் ஒரு பஸ்ஸில் ஏறினார். அமர்ந்தார். அவர் அமர்ந்த இருக்கை, கறுப்பு நிற மக்களுக்கா ஒதுக்கப்பட்டது.. பேருந்தின் முன் பக்க இருக்கைகள் பத்து - வெள்ளை நிற மக்களுக்கானது.. அவர் ஏறியபின் பேருந்து நின்ற மூன்றாவது நிருத்தத்தில் சில வெள்ளை மக்கள் ஏறியதில் சிலருக்கு இருக்கை இல்லாமல் நிற்க நேர்ந்தது.. இதனால், அந்தப் பேருந்தின் நடத்துனர் ரோஸா அமர்ந்திருந்த இருக்கை வரிசை முழுவதையும் எழுந்திருக்கச் சொன்னார். மூன்று பேர் எழுந்துகொண்டனர். அந்த நொடியிலிருந்து வரலாற்றின் பக்கங்களிலிருந்தும், அந்த இருக்கையிலிருந்தும் பிரிய மறுத்தார் - ரோஸா பார்க்ஸ்.

"When that white driver stepped back toward us, when he waved his hand and ordered us up and out of our seats, I felt a determination cover my body like a quilt on a winter night."

அந்த நிகழ்வின் பின்விளைவாக அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு முன்னால் பல கறுப்பு மக்கள் இதே போல கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்த நிகழ்வு பெரிது படுத்தப்பட்ட அளவினால் வரலாறாகின்றது.

இந்தப் ப்ரச்சனைகளுக்கு குரல்கொடுக்கப் புதிதாக ஒரு எழுச்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது - மான்ட்கோமெரி இம்ப்ரூவ்மென்ட் அசோசியேஷன் என்ற அந்த இயக்கத்துக்கு புதிதாக அங்கே குடிபெயர்ந்திருந்த மார்டின் லூதர் கிங் ஜூனியர் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அமெரிக்க காலத்தின் பாதையில் இந்நிகழ்வுகள் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தன.

இந்த நிகழ்வின் எதிரொலியாக கறுப்பு மக்கள் பேருந்தில் பயணிப்பதை புறக்கணித்தனர். சும்மா ஒன்றிரண்டு நாட்களுக்கு இல்லை... முழுதாக முன்னூற்று எண்பத்தோரு நாட்கள். அதன் அதிர்வலையாக நடந்த பல சட்ட மாற்றங்கள், மன மாறுதல்கள், சமுதாய மாறுதல்கள் - இன்றைய அமெரிக்காவை செதுக்கின.

மார்டின் லூதர் கிங் - நம்ம ஊர் மஹாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அதே மாதிரி சுதந்திர ய்த்தத்தை அமெரிக்காவில் அரங்கேற்றினார். Non-violent resistance !

இவரது சொற்பொழிவுகள் வரலாற்று சிறப்புவாய்ந்தவை. வாஷிங்டன்னில் இவர் அரங்கேற்றிய "I have a dream" என்ற உரை இன்றளவும் பிரபலமாக உள்ளது. அதில் எனக்குப் பிடித்த வரி - ""I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin, but by the content of their character.""

இவரது உரைகள் பிரபலமாக ஆரம்பித்தன.. இவர் உரைகளைக் கேட்க ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடியது.. ஊடகங்களின் கவனம் அதனால் கிடைத்தது.. அதன் மூலம், அமெரிக்க தேசத்தையே அவர் கருத்து சென்றடைந்தது. இந்த கூட்டங்கள், அமெரிக்காவின் முக்கியமான சட்ட சீரமைப்புக்கள் அமைய உதவின.. அந்த சட்ட மாற்றங்கள், கறுப்பு நிற மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தின..

இன்று பேரக் ஒபாமா என்ற கறுப்பர் அமெரிக்காவை ஆள்கிறார்.

இவர் தேர்தலுக்காக போட்டியிட்டபோது யாரோ ஒருவர் எழுதியது இங்கே குறிப்பிடத்தக்கது.

Rosa Parks sat so Martin Luther King could walk
Martin Luther King walked so Obama could run
and Obama is running so our children can fly

சுபம்

குளிர்

டேலஸ் நகரில் குளிர் வாட்டி எடுக்கிறது, குறைந்தபட்சம் என்னை. அவஸ்தை என்பதை விட, போர் அடிக்கிறது என்றே சொல்லவேண்டும். சுளீர் என்று வெய்யில் பார்த்து ரொம்ப நாளாகிறது. இதை டைப் செய்யும்போது வெளியே -14 டிகிரி... வெளியே சென்று லேப்டாப்பை வைத்தால், குளிரில் தானாக டைப் அடித்துக்கொள்ளும். இந்த ஊரில் எல்லாரும் ஃபாரன்ஹீட் கணக்கில் டிகிரியை குறிக்கிறார்கள். அப்படிச் சொன்னால் எனக்கு உறைக்க மாட்டேன் என்கிறது. 7 டிகிரி ஃபாரென்ஹீட் என்பதைவிட -14 டிகிரி செல்சியஸ் தான் உண்மை நிலையை குறிப்பதுபோல உணர்கிறேன்.

சும்மானாச்சும் வெளியே போய்விட்டுவந்தால், முகம் சில்லிட்டுக்கிடக்கிறது. சிரிக்க முடியவில்லை.. வாய் திறக்கமுடியவில்லை... இப்பொழுதெல்லாம் வெளியே பனியில் போய்விட்டுவந்தால், கண்ணாடிமுன் நின்று பார்த்து எல்லா ரியாக்ஷன்களும் வேலை செய்கின்றனவா என்று ஊர்ஜிதப்படுத்திக்கொள்கிறேன்.

இந்த ஊர்க்காரர்களுக்கு இது பழக்கமான விஷயம் என்றாலும், இந்த வருடம் போல் எப்போதும் இருப்பதில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள். "செ ! இந்த வருஷம் வெய்யில் பிளக்குது.. போன வருஷத்தைவிட இப்பொ ஜாஸ்தி" என்று மே மாதத்தின் வெகுஜன டையலாக் நினைவு வந்தது.

பனியன், ஜட்டி, சட்டை, பேன்ட், ஸ்வெட்டர், ஜெர்க்கின், ஸ்கார்ஃப், க்லவுஸ், குல்லா... எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு, நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் நடந்தது போல ரோட்டில் நடந்து செல்கிறேன். அந்த ரோட்டில் பெரும்பாலும் யாரும் நடந்து செல்வதில்லை.. இந்த ஊரிலேயே பொதுவாக நடப்பதில்லை... ஆபீஸ் வந்துவிட்டால் ப்ரச்சனையில்லை.. உள்ளே கதகதப்பாக இருக்க ஹீட்டர் முழுவீச்சில் ஓடும்.

எப்படியோ, இன்றைய சீதோஷ்ணத்திற்கு ரோட்டில் ஐஸ் தேங்கிக் கிடக்கிறது என்பதால் அலுவலகம் செல்லப்போவதில்லை. இன்னுமொரு போரிங் டே !

ஏரோப்ளேன்

Dreams in the Air

சனிக்கிழமையன்று டேலஸ் விமான நிலையத்துக்கு அருகே (கிட்டத்தட்ட உள்ளே) அமைந்துள்ள ஏர்போர்ட் அப்ஸர்வேஷன் ஏரியாவிற்குச் சென்றிருந்தோம். விமானங்கள் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டுக்குள் நுழைவது போல இருக்கும் லேண்டிங் காட்சிகளை வெகு அருகில் இருந்து பார்க்க முடிந்தது.

எவ்வளவு அருகில் என்று இங்கே க்ளிக் செய்து பாருங்கள்.

Dreams in the Air

Dreams in the Air

களி & சாம்பார்

களி & சாம்பார்

ஜனவரி ஒன்று - ஆருத்ரா தரிசனம் என்று அம்மா சொன்னவுடன், களி & சாம்பார் ஞாபகம் வந்தது. ஞாபகம் வரும்போதெல்லாம் பெருமூச்சு வருகிறது, இங்கே அமெரிக்காவில் (அமெரிக்காவில் இருந்து ப்ளாக் எழுதினால், குறைந்தபட்சம் மூன்று முறை அமெரிக்கா என்ற வார்த்தை இடம்பெற வேண்டும் என்பது சட்டம்).

புது வருடத்தை ஒரு விஷப்பரிட்சையுடன் (சரியாகச் சொல்வதானால், பலகாரப் பரீட்சை) ஆரம்பிக்க தீர்மானித்தேன். அம்மா ஸ்கைப்பில் சொல்லச் சொல்ல டேலஸ் நகரத்தின் ஒரு மூலையில் திருவாதிரை களி தயார் ஆனது. அக்டோபர் மாதக் கடைசியில் அமெரிக்கா (அப்பாடா, மூன்று முடிந்தது) வந்ததிலிருந்துதான் என் சமையல் ப்ரதாபங்கள் ஆரம்பம். ஆனால், அது ஒரு இனிமையான + வெற்றிகரமான நிகழ்வாகிக்கொண்டிருப்பதை நினைத்தால் மகிழ்வாக இருக்கிறது.

நியூ யார்க் ஏர்போர்ட்டில் ஆரம்பித்தது அதிர்ச்சி... சென்னையில் ஹோட்டலுக்குள் மெனு கார்டை படிக்கும் பழக்கம் அவ்வளவாக எனக்கு இல்லை. உத்தேசமாக "தோசை" என்று சொன்னால், "சாதா தோசையா ?" என்று கேட்பார். "வேற என்ன தோசை இருக்கு" என்று புத்திசாலித்தனமாக கேட்டால், தமிழ் நாட்டின் ஜாதி எண்ணிக்கையை விட அதிகமான வகைகளை பட்டியலிடுவார். அவர் ஒப்பிக்கும் வேகத்தில் மனதிலேயே தோசை வார்த்துப் பார்ப்பேன்.. மனம் அலைபாய ஆரம்பிக்கும்... எதை எடுப்பது, எதை விடுவது... நூற்றுக்கு எண்பது தடவை, வெயிட்டர் கடைசியாகச் சொன்ன தோசை ஜாதியைத் தான் ஆர்டர் செய்வேன்.. "இந்த ஹோட்டல்ல கோபி மசாலா தோசை நல்லா இருக்கும்" என்று சொல்லிக்கொள்வேன்.

நியூ யார்க்கிலிருந்து டேலஸுக்கு போகக் காத்திருந்த வேளையில், பசித்தது. அங்கே இருந்த ஒரு கடைக்குள் நுழைகையில், என்ன வாங்கலாம் என்று யோசித்தேன். அந்த நிமிடத்தில் இருந்து "வெஜிடேரியன்" என்பது எனது முக்கியமான அடையாளம் ஆனது. நம்ம ஊரில், எந்த மாமிச உணவாக இருந்தாலும் , அதற்கு ஈக்குவெலண்ட் காய்கறி உணவு வகை உண்டு.. என் நண்பன் சிக்கன் 65 வாங்கினால், நான் கோபி 65 வாங்குவேன். ட்ரேகன் சிக்கனுக்கு ட்ரேகன் பொட்டேட்டோ... என்று போட்டிக்குப் போட்டி ஐட்டம் இருக்கும்.. இங்கேயும் அப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து, மேலே பட்டியலிட்டிருந்த உணவு வகைகளின் பெயர்களை எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன். "பேக்கன், பீஃப், சிக்கன், ஸ்டீக், பெப்பரோனி, போர்க், ஷ்ரிம்ப்" இவை இல்லாத உணவுவகைகளே காணோம். ஒன்று இரண்டு இருந்தது.. அவைகளை நம்ப மனம் மறுத்தது. ஒரு ஹெர்ஷீஸ் சாக்லேட் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். "இனிமேல் சமைக்க ஆரம்பிக்க வேண்டும்".

என் நண்பன் நன்றாகச் சமைப்பதால், ஒரு தமிழனின் அடிப்படைத் தேவைகளான சாம்பார், ரசம், கூட்டு , கறி எல்லாம் நிம்மதியாகக் கிடைத்தன. அவனிடம் குருகுல வாசம்.. காய்கறி நறுக்கிக் கொடுப்பது.. சாதம் வடிப்பது... காப்பி போடுவது என்று ஒத்தாசையாக செய்து கொண்டிருக்கிறேன்.

திடீரென்று ஒரு நாள், பெரும் விஞ்ஞானிகளுக்குத் தோன்றும் ஒளிக்கீற்று எனக்குள் தோன்றியது.. ஐஸக் நியூட்டன் ஒரு ஆப்பிளைப் பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்தாரோ, அதே மாதிரி. என் விஷயத்தில் அது ஒரு பீட்ரூட். இதை வைத்து அல்வா செய்யலாமே, என்று எண்ணம் - சபலம் - ஆசை - பேராசை - திட்டம் - முடிவு போன்ற பல கட்டங்களைத் தாண்டி செயலில் இறங்கினேன். இரண்டு மணி நேர முதலீட்டில் என் வாழ் நாளின் முதல் அல்வா "பொளுக்" என்று இனிப்பாக சத்தம் போட்டது. அட்டகாசம்.

அன்றிலிருந்து இன்றுவரை என் சமையலறை சகாப்தத்தில் வெளிவந்த சக்ஸஸ்ஃபுல் ஐட்டங்கள்
- ரவா உப்மா
- பீட்ரூட் அல்வா
- ரவா கேசரி
- பால் பாயசம்
- பயத்தம் பருப்பு பாயசம்
- சர்க்கரைப் பொங்கல்
- வெண் பொங்கல்
- புளி கொஸ்து
- வெஜிடபிள் மேகி
- குடமிளகாய் / கேரட் / உருளைக்கிழங்கு கறி

இப்பொழுது, களி & சாம்பார்.

தனி ஒருவனுக்கு உணவில்லையேல், ஜகத்தில் சமைத்திடுவோம் !

நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்த புதிய ஆண்டு, மகிழ்ச்சி நிறைந்ததாக அமையட்டும்.

One more snowfall, in Dallas


Created with Admarket's flickrSLiDR.

தொழில் நுட்பம்

காலை எழுந்தவுடன், நேராக கிச்சனுக்குப் போய் எலக்ட்ரிக் ஸ்டவ்வில் தண்ணீர் வைத்து கொதிக்கவைத்து, French Press Coffee makerரில் Star Bucks House Blend காப்பிப் பொடி போட்டு,கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கலக்கி, கொஞ்சமாக நுகர்ந்து வாசனை கரைவதற்குள் அதை மூடி வைத்துவிட்டு, கொழுப்பில்லாத பால் கேனை எடுத்து, கப்பில் ஊற்றி, மைக்ரோவேவில் வைத்துவிட்டு.. கிச்சனிலிருந்து வெளிவந்து ஹாலில் சோபாவில் நேற்றிரவு விட்டெரிந்துப் போயிருந்த ரிமோட்டுகளை துழாவி எடுத்து, LCD TVயையும், ப்ளூ ரே ப்ளேயரையும் சொடக்கிவிட்டு, நேராக இன்டெர்னெட்டிலிருந்து YouTube, Netflix, Blockbuster, Pandora எல்லாவற்றையும் Blu Ray Playerரிலிருந்தே மேய்ந்துவிட்டு, கடைசியாக Pandora ரேடியோவில் Fireflies பாடலை ஓடவிட்டு, திரும்பவும் கிச்சனுக்கு செல்லும் வழியில், ஹீட்டரை அட்ஜஸ்ட் செய்துவிட்டு, மைக்ரோவேவிலிருந்து கப்பை எடுத்து, டிக்காஷனை ஊற்றி, சர்க்கரை போட்டு, Hand blenderல் விப் செய்து கலக்கி, நுரை மேவ, காப்பி எடுத்துக்கொண்டு ஒரு Dunkin Donut Glazed எடுத்துக்கொண்டு, அது ஒரு கடி, காப்பி ஒரு சிப் என காலை ஆரம்பமாக, அவசரமாக காலைக் கடன் கழிக்கப் போனேன்..

"டேய்... மக்கை எங்கே வெச்சிருக்கே !!! ?"

ஓற்றுமை / வேற்றுமை


ஒற்றுமை - இரண்டும் நம்ப முடியாத கதை (வேட்டைக்காரன் கதை தெரியாது.. இருந்தாலும் நிச்சயமாக அப்படித்தான் இருந்தாக வேண்டும்). இரண்டுமே கலர் கலராக காதில் ரீல் பூவை சுற்றும். கடைசி வரைக்கும் பில்ட் அப் இருக்கும். ஜிகினா ஹீரோயின்கள் இரண்டிலும் உண்டு. அவ்தார் படத்தின் பின்னணி இசையை எடுத்து வேட்டைக்காரனில் போட்டால் நன்றாகவே எடுபடும்.

அடிப்படையில், இரண்டு படத்தின் ஜெனெர் ஒன்றுதான். மசாலா ! (அவ்தார் படத்தின் குழுவினரின் அபரிமிதமான உழைப்பு இந்த வார்த்தையை பொய்யாக்கக்கூடும்.. பார்த்துவிட்டு சொல்கிறேன்).

இரண்டு படத்தையும் டிரெய்லர் பார்த்து கதை சொல்லிவிடலாம். அப்புறம் எதற்குப் படம் பார்க்கவேண்டும் என்றால், அந்த அனுபவத்திற்காக..

நீங்கள் பிறந்த இடம், வளர்ந்த வளர்ப்புக்கு ஏற்ப உங்கள் ரசனை வேறுபடும் என்பதால், இவ்விரு படங்களின் ஒற்றுமையை உங்களால் உணரமுடியாமல் போகலாம். இரண்டையும் ஒரே தளத்தில் பதிப்பிட்டு ரசிப்பீர்களேயானால், நல்ல முதிர்ந்த நிலையை அடைந்துவிட்டீர்கள் என்று பொருள். ஒரே தளத்தில் வைத்து மதிப்பிட்டு, ஆனால், இரண்டையுமே ரசிக்காமல் இருந்தால் டூ பேட். அவ்வப்போது ஜோதியோடு ஐக்கியமாக கற்றுக்கொள்ளுங்கள்.

வேற்றுமை - ஹீரோ பில்ட் அப். பன்ச் டையலாக். குத்துப் பாட்டு. இன்ன பிற..

பனி மழை

டேலஸ் நகரத்தில் பனி மழை என்பது அபூர்வமான ஒரு சம்பவம். அரைக்கை சட்டை அணிந்துகொண்டு ஒரு புதன்கிழமை காலை, சாலையைக் கடக்கையில் அது நிகழ்ந்தது. துகள் துகளாய், வெள்ளையாய் கும்பலாய், மெதுவாய், இலகுவாய் வந்து என் ஸ்பரிசத்தை தொட்டது - பனி.

பெரிதாக குளிரவில்லை.. சென்னை வெய்யிலில் கால் நூற்றாண்டு கடந்த உடம்பு, இந்த தட்பவெட்பத்துக்கு அடிபணியவில்லை. பச்சை பசேலென்றிருந்த புல்வெளிகள் வெள்ளையாகிக்கொண்டிருந்தன. இலைகளிலிருந்து உயிரை உறிஞ்சிக்கொண்டிருந்தது, பனி. சுற்றிப்பார்த்தால், சாலையில் நடந்துகொண்டிருந்த ஒரே ஜீவராசி நான் மட்டும்தான். இன்னும் கொஞ்ச நேரம் அதே அரைக்கை சட்டையில் இருந்திருந்தால், அந்த தகுதியை இழந்திருப்பேன் என்று நண்பர்கள் பின்னர் சொன்னார்கள்.

சீக்கிரம் ஆபீசுக்குள் வந்து ஜன்னல் வழியாகப் பார்த்தேன். மொத்தமாக மாறிப்போயிருந்தது. மறுபடியும் பச்சைப்பசேல் என்றிருந்தது. பனி உருகி சாலைகள் ஈரமாக இருந்தன. மேனேஜர் வந்து சொன்னார்.. இங்கேயெல்லாம் இவ்வளவு பனி பொழிவதே அதிகம் என்று.

லேசாக குளிர ஆரம்பித்தது.

நிலாவுக்கு அருகாமையில்

dreamworks

என்னுடைய புதிய கேமராவின் 70-300mm லென்ஸ் தூள் கிளப்புகிறது.

பூமியின் நிழல் படிந்து அழகாகத் தெரிந்தது நிலா. நிலாவைக் கூட அழகாக்குவது பூமிதான். போட்டோ எடுக்கும்போது கையைத் தூக்கியிருந்தால், அந்த நிழல்கூட நிலாவின்மீது தெரிந்திருக்குமோ !

மிஷன் அல்வா

The Halwa

மெதுவ்வ்வாக சாம்பார் ரசம் வைக்க கற்றுக்கொண்டு வருகிறேன். உருளைக்கிழங்கும் ஹெய்ன்ஸ் தக்காளி கெட்ச்சப்பும் 'சர்வ ரோக நிவாரணி' மாதிரி, என்ன செய்தாலும் காப்பாற்றிவிடுகிறது..

நேற்று அனாதையாக இருந்த ஒரு பீட்ரூட்டை என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில், ரொம்ப நாளுக்கு முன் அம்மா செய்துகொடுத்த பீட்ரூட் அல்வா நினைவுக்கு வந்தது. குருட்டு தைரியத்தில் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

பீட்ரூட்டைத் திருவி, பால் ஊற்றி கிளர ஆரம்பித்தால், முடிவதாகவே தெரியவில்லை. நொடிகள் நிமிடமாகி பெரியமுள் பொறுமை இழக்க ஆரம்பித்தது. இன்னும் பால் சுண்டவே இல்லை. ஆனது ஆகட்டும் - மினிமம் கேரண்டி - பீட்ரூட் கீர். ஆனால், ஒன்றரை மணி நேர கிளரலுக்குப் பிறகு, பொளுக் என்ற ஒரு சப்தம் கேட்டது. கரைப்பார் கரைத்தால் பீட்ரூட்டும் அல்வா ஆகும். ஹா !

ஒரு ஸ்பூன் நெய்விட்டு முந்திரிப்பருப்பு வறுத்து அல்வா ஆகப்போகும் பீட்ரூட்டுக்கு கம்பெனி கொடுத்தேன். இரண்டு நிமிடங்களில் என் வாழ்க்கையின் பல இனிமையான பகுதிகளில் அந்த சமயமும் இணைந்து கொண்டது.

ஏ க்ளாஸ்.. !

FELL

Fell

புது கேமரா வாங்கியாச்சு !

2012



இந்த ஹாலிவுட் படாதிபதிகளுக்கு உலகத்தை அழித்து அழகுபார்ப்பதே வேலை. அப்படிப்பட்ட படங்களை ஒன்றுவிடாமல் வாய்பிளந்து பார்ப்பது என் வேலை. ஆனால் இதெல்லாம் ரொம்ப அலுத்துப்போய் இனிமேல் இந்த மாதிரி படங்கள் பார்ப்பதில்லை என்று கட்டுண்டிருந்தேன். ஆனால் 2012 ரிலீஸான சில நொடிகளில் சில விமர்சனங்களைப் படித்தேன். Roger Ebert என்பவர் எனக்கு ஏற்றார்போல் விமர்சனங்கள் எழுதுவார். இவரது தர அளவுகோலுக்கு ஹாலிவுட் வட்டாரங்களில் அதிக மரியாதை உண்டு.

அவர் சொன்னது - "You think you've seen end-of-the-world movies? This one ends the world, stomps on it, grinds it up and spits it out". இது படித்த சில மணி நேரங்களில் தியேட்டரில் இருந்தேன். நேற்றுதான் ரிலீஸ் ஆகியிருந்ததால், தியேட்டரில் கொஞ்சம் கூட்டம் இருந்தது.. அதனால் நாச்சோஸ் எதுவும் இல்லாமல், மரியாதையாக சீட்டில் சென்று உட்கார்ந்துவிட்டேன்.

படம் இரண்டரை மணி நேரம்.. போனதே தெரியவில்லை.. வழக்கமான பில்ட் அப்.. வழக்கமான பிரிந்துபோன குடும்பம்.. வழக்கமான அதிபர் மாளிகை.. வழக்கமான சென்டிமென்ட்.. வழக்கமான "கடைசி நிமிட மாட்டிக்கொள்ளுதல்".. அச்சு அசல் ஒரு ஃபார்முலா படம். ஆனால், இந்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இருக்கிறதே ! யம்மா !! என்ன ஒரு ப்ரம்மாண்டம். 200 மில்லியன் டாலர்களை இறைத்து, ரிலீஸான ஒரே நாளில் 23 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கக்கூடிய மார்க்கெட் உள்ளவர்கள் மட்டுமே எடுக்கக்கூடிய ரிஸ்க்.

"Earth's crust replacement" என்ற ஒரு உல்லுலாங்க்காட்டியை படம் நெடுக காரணம் காட்டி, இந்த உலகத்தையே தலைகீழாக (நிஜம்மாகவே !) புரட்டி எடுக்கிறார்கள். இந்தப் பூச்சுற்றல் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்த உலகம் அழியும் அழகு இருக்கிறதே !! ஆஹா.. அபாரம். தியேட்டரில் எல்லாரும், அடுத்த காட்சியில் என்னென்ன கட்டடங்கள் விழப்போகின்றன.. எந்த முக்கியமான ஸ்தலம் சிதிலமடையப்போகிறது.. எத்தனை பேர் உயிரிழக்கப்போகிறார்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இனிமேல், நிஜம்மாகவே உலகம் அழிந்தால் கூட.. இந்த அளவுக்கு தத்ரூபமாக இருக்குமா என்பது சந்தேகம்தான். "இதெல்லாம் நாங்க முன்னாடியே பார்த்தாச்சு.." என்று காலரை மடக்கிவிட்டுக்கொள்ளலாம்.

இம்மாதிரி படங்களில் நம் எதிர்பார்ப்பை கொஞ்சம் சமன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். காரணம், அச்சு அசலாக என்ன நடக்கப்போகின்றது என்று காண்பித்தால் பிசுபிசுப்பாக இருக்கும்.. பேரழிவுக்கு நடுவில் ஒரு குடும்பத்தின் / குடும்பத்தலைவனின் கதை என்பது கலிங்கத்துப் பரணியிலிருந்தே ஒரு சக்ஸஸ் பார்முலா... அது சோடை போனதே இல்லை. இந்தப்படத்திலும் அப்படியே.

நல்ல effect உள்ள தியேட்டராக சென்று ரூபாயைக் கொடுங்கள். இரண்டரை மணி நேரப் பொழுதுபோக்கு - உத்தரவாதம்.

ஐமேக்ஸ் அனுபவம்



இங்கே வந்து கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம் பஸ் பிடித்து சினிமா தியேட்டர் செல்லுவது எப்படி என்று. வீட்டுவாசலில் பஸ் ஏறி சினிமா தியேட்டர் வாசலில் போய் இறங்கிவிடலாம். கொள்ளை விலை என்று சொல்கின்றனர். இன்னும் மல்டிப்ளை செய்யாமல் செலவு செய்கிறேன். அப்படி ஒரு பதினைந்து டாலர்கள் செலவழித்துப் பார்த்த படம், "A Christmas Carol"

வால்ட் டிஸ்னியின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப்படத்தில் பல வித்தியாசங்கள் (புதுமைகள் அல்ல). ஏற்கனவே "The Polar Express" படத்தில் வந்தது போல "Performance Capture" முறையை இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்னொன்று 3D. முக்கியமாக IMax. இம்மூன்றினாலும் ஈர்க்கப்பட்டு பஸ்ஸேறி பத்து மைல் கடந்தேன். நம்ம ஊர் சத்யம் மாதிரி 3D கண்ணாடிகளுக்கு இன்னும் அதிகமாக இருபது டாலர் கேட்பார்களோ என்று பயந்தேன். நல்லவேளை, ஒன்றும் கேட்காமல் ஒரு பெரிய கண்ணாடி ஒன்றைக் கொடுத்தார்கள். கண்ணிலிருந்து மேல் உதடுவரை மறைத்து உட்கார்ந்தது கண்ணாடி. மூக்கு கூட வெளியே நீட்டவில்லை என்று நினைக்கிறேன். மரத்தில் மறைந்தது மாமத யானை.

தியேட்டர் எல்லாம் தம்மாத்தூண்டு சைஸில் இருந்தது. அதைவிடக்கொடுமை, ஈ காக்கா இல்லை. ஒரு ஓரத்தில் ஒரே ஒரு வயோதிகர், கஷ்டப்பட்டு டீலக்ஸ் நாச்சோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் இந்தப்படம் 200 மில்லியன் டாலர் செலவழித்து வந்த படம். எந்த லட்சனத்தில் கல்லா கட்டுகின்றனர் என்று புரியவில்லை. நானும் என் பங்குக்கு ஆலப்பினோஸுடன் கூடிய சீஸ் நாச்சோஸை ஒரு கட்டு கட்டினேன்.

ஆனால், இந்த ஐமாக்ஸ் (IMax - Image Maximum) சமாச்சாரம் ஆரம்பமானதும், இரண்டு மணி நேரம் உலகம் மறந்தேன். இந்தப்படத்தின் டைட்டில்கார்டைப் போடும்போது நீங்கள் பறப்பதைப்போல உணர்வீர்கள் - ஐமேக்ஸில் பார்த்தால். கொடுத்த பணத்திற்கான முழு பலனையும் பத்து நிமிடத்தில் அடையலாம். பாக்கிக்கு கொஞ்சம் அரதப்பழைய சார்லஸ் டிக்கன்ஸின் கிருஸ்துமஸ் கதை இருக்கிறது.

பணத்தின்மீது மட்டுமே குறியாக இருக்கும் ஒரு மையப் பாத்திரம். கிருஸ்துமஸுக்கு முந்தைய இரவு, அவரை சந்திக்கும் மூன்று விதமான பூதங்கள். ஒன்னொன்றும் ஒவ்வொரு காலத்தைக் காட்டி பயமுறுத்தி (சொற்ப சில சமயம் நம்மையும்) க்ளைமாக்ஸில் "மெர்ரி க்ரிஸ்ட்மேஸ்" என்று பாட வைக்கின்ற ஒரு மசாலாப் படம். ஆனால், நீங்கள் குழந்தையாக இல்லாமல், டெக்னாலஜியை ரசிப்பவராக இருந்தால், உங்களை வெகுவாகக் கவரக்கூடிய படம்.

3டி இருந்தால், அதில் சென்று பார்க்கவும். ஐமாக்ஸ் இருந்தால் அவசியம் ஐமாக்ஸில் பார்க்கவும்.

Essential Services

Annadhanam Closed

படியளக்கும் தெய்வத்தின் மடப்பள்ளியில்
படி அரிசி பாக்கியில்லை
படிக்கத்தெரியாத வயிறுகள் பசியோடு வாசலில்
ஏழ்மை இருபுறத்திலும்

அமெரிக்காவில் அவ்யுக்தா

ஒரு சில நொடிகளில் தீர்மானமாகிவிட்டது.. நான் அமெரிக்கா கிளம்பவேண்டியது என்று. அதற்கு அடுத்த நொடியிலிருந்து வயிற்றில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. பல நாட்கள் சேர்ந்தார்ப்போல், வீட்டைவிட்டு இருந்தது கிடையாது. சமைக்கத் தெரியாது. துணிதோய்த்தது கிடையாது. அனேகமாக புதிதாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம். எல்லாவற்றையும்விட அம்மா அப்பாவை இனிமேல் சில காலத்துக்கு கம்ப்யூட்டர் திரையின் அந்தப்பக்கத்திலும், செல்போனின் ஸ்பீக்கரின் மறுமுனையில்தான் சந்திக்கமுடியும் என்ற உண்மையை உணரும்போதெல்லாம் அழுகை வந்தது (வருகின்றது). எல்லாவற்றையும் எதிர்கொண்டு கிளம்பிவிட்டேன், அக்கரைக்கு. ஊரே கோலாகலமாக வானத்தில் தீபாவளிக்கோலங்களை பட்டாசுகளில் வரைந்துகொண்டிருக்கையில், புள்ளிகளை இணைக்கும் ஒரு விமானத்தில் ஏறி இனி சிலமாதங்கள் பார்க்க முடியாத சென்னையை, ஜன்னலோர இருக்கை கிடைக்காததால், எட்டிப்பார்த்துக்கொண்டேன். எண்ணங்களை அங்கேயே வட்டமிட வைத்துவிட்டு ப்ரஞ்ஙையில்லாமல் பயணம் தொடர்ந்தேன். பல மணி நேரங்கள், பல மைல் தூரங்கள்..

எல்லாவற்றையும் கடந்துவந்தால், இன்னுமொரு உலகம். நான் பார்த்திராத உலகம்.

இனி.

பயணம்


மா தவன் - தொடர்ந்து, சாயைபோல்,
பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான்

Thus spake

Leopard Saw

Wanted to capture him
Behind the Cage
I tried hard to make the cage invisible
So, I can lay my focus on him
And shoot at him.

But, So thought the leopard.

கம்ப ராமாயணம் - படிக்க முற்படுதல்

பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்;
'அழிந்தது, வில்' என, விண்ணவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள், முப் பகை வென்றார்.

யக்யத்தில் வளர்த்த அக்னியில், நெய்யை ஊற்றி ஆகுதி செய்தவுடன் திகுதிகு என எழும் நெருப்பின் வேகத்தையும் கம்பீரத்தையும் கொண்டு இராமபிரான், வில்லை வளைக்க முற்படுவதற்காக எழுகின்றான். அவன் எழுந்த தோரணையையும், முன்னரே வியந்திருந்த அவன் தோளின் வலிமையையும் உணர்ந்திருந்த விண்ணவர், அந்த சிவதனுசு இவன் கையில் அழியப்போகின்றது என்று ஆர்ப்பரித்து ஆசிகள் மொழிந்தனர். கடைசியில் கூறியிருக்கும் "முப்பகை வென்றார்" என்பதற்கு உள் அர்த்தம் தெரியவில்லை.

உன்னைப்போல் ஒருவன்



சென்ற வருடம் "A Wednesday" பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.. ஒரு பெரிய ஸ்டார் கேஸ்ட் இல்லாமல், ரொம்பவும் சிக்கலான ஒரு கதையை இலகுவாக நகர்த்திச்சென்று ஒரு ஆச்சரியமான எதிர்பாராத முடிவுடன் நிறைவு செய்திருப்பார்கள். பாட்டு இல்லை.. ஃபைட்டு இல்லை... காமெடி இல்லை.. ஆனாலும் விறுவிறுவென படு சுவாரஸ்யமாக இருந்தது. பலே ! இப்படியல்லவோ கதைக்களம் காண்போரைக் கட்டிப்போடவேண்டும் ? சே ! இப்படி ஒரு படம் தமிழில் வரக்கூடாதா என்று பலபேரிடம் பொருமியிருக்கிறேன்.

மர்மயோகி பல தெரிந்த / சில தெரியாத காரணங்களால் கைவிடப்பட்டு அடுத்து "A Wednesday" படத்தை தமிழில் எடுக்கப்போகிறார்கள் என்று தெரிந்தவுடன், மேலே சொன்ன ஆச்சரியங்களின் "ஆன் தி காண்ட்ராரி"க்கள் என் மனதில் ஓடியது. முக்கியமானது - ஸ்டார் காஸ்ட்.

கமல்ஹாசனும் மோஹன்லாலும் அபாரமாக நடித்துவிடுவார்கள் என்பது ப்ரச்சனை இல்லை.. எப்படி அடக்கி வாசிப்பார்கள் என்பதுதான் ப்ரச்சனை. அதாவது படம் அறிவித்திருந்த நாளிலிருந்து சத்யம் தியேட்டரின் திரையில் டைட்டில் கார்டு போடும் வரை, அந்தப் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பும் கொஞ்சமாக தாடியும் வளர்த்துவந்த எனக்கு, மனதோரம் அந்தப் ப்ரச்சனை ஒரு பயமாக ஒட்டிக்கொண்டு இருந்தது.

ஹப்பாடா !...ப்ரச்சனை விட்டது.

படம் சூப்பர் ஃபென்டாஸ்டிக்.

ஒரு கடற்கரையோரத்தில், தன் கடந்தகாலத்தின் மிக முக்கியமான ஒரு நாளை மோஹன்லால் விவரிப்பதில் ஆரம்பிக்கிறது படம். தன் வாழ்வின் ஒரு நாளில் சுனாமி போல மாற்றிய ஒருவனைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும்போது டைட்டில் போடுகிறார்கள். ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான நரம்பு புடைக்கும் இசையுடன். படம் டைட்டில் முழுக்க ஆங்கிலத்தில்.. ஏனென்று தெரியவில்லை (ஆனால் தமிழ் நாடு அளிக்கும் வரி விலக்கு வாங்கியிருப்பார்கள்). போட்டதில் தவறில்லை.. ஆனால், ஆங்கிலத்தில் வருவது, no fancy.

இப்பொழுது வருகிறது விசில் சத்தம். கமல்ஹாசன் தனது பேஸ்மண்ட் ரூமில் நெருப்பு பொறி பறக்க எதையோ செய்து கொண்டிருக்கிறார். சில நிமிடங்களில் அது பாம் என்று தெரிகிறது.. டைட்டில் முடிவதற்குள் நகரத்தின் முக்கியமான இடங்களில் மர்மமான முறையில் ஒரு பக்கத்தில் வெங்கடாஜலபதியின் படமும் மறுபக்கம் "I Love India" என்ற வாசகமும் இருக்கும் கறுப்புப் பையை ஆங்காங்கே வைத்துவிட்டுக் கிளம்புகிறார். (சென்னை சென்ட்ரலைக் காண்பிக்கிறார்கள்.. அதன் தொடர்ச்சியில் வெளிவரும் ஒரு காவலர் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெளியே நிற்கிறார்.. பிசகு). பின் கூடை நிறைய தக்காளியை வாங்கிக்கொண்டு
பின்னர் சாவகாசமாச் சென்று மார்க்கெட்டில் கூடை நிறைய தக்காளி வாங்குகிறார். கொஞ்ச நேரத்தில் பரபரப்பான நகரததைவிட்டு உயர வாக்கில் தள்ளி கட்டப்பட்டுவரும் ஒரு உயரமான அடுக்கு மாடி கட்டடத்தின் மொட்டைமாடிக்கு வந்து அசால்ட்டாக ஒரு கன்ட்ரோல் ரூமை ரெடி செய்கிறார்.

என்ன நடக்கிறது என்று ஊகித்து முடிப்பதற்குள் ஒரு முக்கியமான தருணம் கடக்கிறது. ஓஹோ ! இந்தப்படத்தில் இவர் ஹீரோ.. இவர் வில்லன்... இது ஒரு வீடு, அது ஆடு அனில் என்றெல்லாம் அறிமுகம் செய்யப்போவதில்லை.. சடாரென்று நேரே கதைக்கு சென்றாகிவிட்டது என்று தெரிந்தவுடன்.. அந்த வேகத்தை உள்வாங்கிக்கொள்ளத் தயாராகிறோம். சீட்டில் கொஞ்சம் கவனமாக உட்கார்ந்துகொள்கிறோம்.

சிறிது நேரத்தில் சென்னையில் முக்கியமான இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தான் சொல்லும் தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்காவிட்டால் "அமைதிப்பூங்கா"வாக இருக்கும் சென்னை நாசம் செய்யப்படும் என்றும் மிரட்டல்விடுக்கிறார், பெயர் சொல்லாத கமல்ஹாசன். மறுமுனையில் திண்டாடும் ஐ.ஜி.ஆர். மாரார் என்கிற மோஹன்லால், முதலமைச்சருக்குத் தெரியப்படுத்தி போனில் மிரட்டும் ஆசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை லட்சுமி வாயிலாகப் பெறுகிறார். இதற்கு நடுவில் அந்த மர்மக் குரலை கண்டுபிடிக்கப் பல அடைவழிகளில் எத்தனிக்கிறார். எதுவும் சோபனமாகாத நிலையில் அந்த மர்மக்குரலுக்குப் பணிந்து தீவிரவாதிகளை தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான இரண்டு போலீஸ்காரர்களுடன், சோழாவரம் விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கிறார்.

இதற்குப் பின் தான் அந்தக் க்ளைமாக்ஸ். படம் பார்க்காதவர்களுக்கு சொல்லக்கூடாது.. பார்த்தவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. ஆனால் அந்தத் திருப்பம்தான் கதையின் உச்சம்.

இந்தப் படத்தை அவ்வளவு பாராட்டாமல் நேராக "A Wednesday" படத்தையே பாராட்டலாம் என்று நினைப்பவர்கள், மூலக்கதையையே பாராட்டிவிட்டுப் போகட்டும். என்னதான் வால்மீகி ராமாயணம் எழுதினாலும், தமிழில் கம்பன் எழுதினால் அது கேட்கும்போது எவ்வளவு ஆனந்தம் அடைவோமோ அப்படித்தான் என் மொழியில் ஒரு நல்ல படத்தை ரீமேக் செய்ததை ரசிக்கிறேன்.

மோஹன்லால், கமல் நடித்தது போக படத்தில் எல்லாருமே அருமையாக நடித்திருக்கிறார்கள். கேமரா கோணங்களும் நிறங்களும் A-Class. டிஜிட்டல் சினிமேட்டோக்ரஃபியில் கேமராமேன் மனோஜ் பின்னியிருக்கிறார்.

இசை.. விறுவிறுப்பான படத்துக்கு ஸ்ருதிஹாசனின் இசை பக்கபலம். நல்லவேளை, பாடல்கள் இல்லை. (கேசட்டில் இருக்கும் பாடல்கள், வெகு சுமார் ரகம்).

படத்தொகுப்பு - ரமேஷ்வர் பகத். வழக்கமான இன்றைய தமிழ் சினிமா கற்றுக்கொண்ட கௌதம் மேனன் ஸ்டைல் எடிட்டிங்.

கலை - தோட்டா தரணி. "வார் ரூம்" கொஞ்சம் பாஷ் கம்மி. There was a lot of scope, unattended.

இதில் சில விஷயங்கள். படத்தின் கதை சென்னையில் நடக்கிறது என்பது தோன்றவே இல்லை. ( அதிகப்படியான காட்சிகள் ஹைதராபாதில் படப்பிடிக்கப்பட்டதால்).. ஒரு புல்லட்டைத்தவிர எல்லாவற்றிற்கும் AP ரெஜிஸ்ட்ரேஷன் வண்டிகள். அண்ணா மேம்பாலம், கோயம்பேடு மார்க்கெட் மாதிரி, சென்ட்ரல் ரயில் நிலையம் தவிர எல்லாமே பழக்கப்படாத சென்னை இல்லாத இடங்கள்.

வசனம் - இ.ரா.முருகன். ஐயா ! வெளுத்துவாங்கியிருக்கிறீர்கள். உங்கள் வசனத்தின் தாக்கம் சனிக்கிழமை படம்பார்த்ததிலிருந்து இப்பொழுதுவரை இருக்கிறது.

மோகன்லால், உயிரை பலிவாங்கக்கூடிய ஒரு காரியத்துக்கு ஒரு போலீஸ் ஆபீஸரை நியமிக்கும் போது, வந்த உரையாடலில் என் ஞாபகத்தில் இருப்பது.
"Married ?"
"Yes Sir"
"Child ?"
"Yes Sir. 1 kid"
"Sorry.. I mean, Congrats."

கமல் க்ளைமாக்ஸில் சொல்லும் அத்தனை டையலாகுகளும் க்ளாஸ்.
"நீ என்ன சூப்பர்மேனா ?"
"சூப்பர்மேனா.. நான் என்னை இன்விசிபிள் மேன்னு இல்லே நினைச்சுட்டு இருக்கேன்.. வோட்டுப்போடப்போனா என் பேருல நான்ங்கற ஒருவன் இல்லைன்னு சொல்லிட்டாங்களே !" என்று சொல்லும்போது தியேட்டரில் புரிந்தவர்கள் கைதட்டினார்கள்.

பல உரையாடல்கள் ஆட்சியில் இருப்பவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் நக்கலடித்திருப்பது கைத்தட்டல் வாங்கித் தருகிறது.. இன்னும் சிலதடவைகள சென்று சில டையலாகுகளை மனப்பாடம் செய்யவேண்டும்.

இந்தப்படத்தை தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஒப்புவதற்கு கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார்கள், வசங்கள் மூலமாக. இருந்தாலும், இந்த தீவிரவாதம் என்பது நம் தமிழ் மண்ணுக்கு இன்னும் (அதிர்ஷ்டவசமாக) உரைக்காத நிலையில் மீனம்பாக்கத்தையும், கோயமுத்தூரையும் அடிக்கடி ஞாபகப்படுத்தவேண்டிய கட்டாயம் வசனகர்த்தாவிற்கு. "மறதி.. அது இந்த தேசத்தோட வியாதி" என்ற வசனம் உட்பட.

அதே கதை, அதே விறுவிறுப்பு, கிட்டத்தட்ட அதே வசனங்கள், அதே திருப்பம், அதே முடிவு.. சே ! அந்த ஹிந்திப் படத்தை மெனக்கெட்டு முதலில் பார்த்திராமல் இருந்திருந்தால் இன்னும் அதிக அளவில் ஆனந்தப்பட்டிருக்கலாம்.

முதல் முறையாக இந்தக்கதையை தமிழில் பார்ப்பவர்கள் பாக்கியசாலிகள்.

நிற்க.

விறுவிறுப்பான மசாலா இல்லாத சினிமா தமிழில் வெற்றிபெறக்கூடும் என்பதற்கு இது ஒரு உதாரணம். "ரசிகர்கள் அப்படித்தான் விரும்பிப் பாக்குறாங்க" என்று சாக்கு போக்கு சொல்ல முடியாது. புத்தம்புது பென்ஸ் கார்களை கருக வைத்து ப்ரம்மாண்டம் காட்டத்தேவையில்லை.. மரத்தை சுற்றிவந்து பாட்டுப்பாட வேண்டாம். வடிவேலுவை ஊளையிடச்செய்து கிச்சுகிச்சு மூட்டவேண்டாம்.

கதாசிரியருக்கு மட்டும் மகுடம் சூட்டினால் போதும். நல்ல சினிமாவின் ஆட்சி அமோகமாக அரங்கேறும்.

பி.கு :

இந்தப்படமும், இதன் ஹிந்தி ஒரிஜினலும் "Aam Adhmi" என்கிற ஒரு சாதாரணப் ப்ரஜையின் சமுதாயக் கோபத்தை ப்ரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

எனக்கென்னமோ, தீவிரவாதியின் அச்சுறுத்தலைவிட, தண்ணீர் லாரிக்காரனின் அழுச்சாட்டியத்தில்தான் அதிகமாக எங்கள் காமன் மேனின் கோபம் இருக்கும்.

"எவனோ ஒருவன்" பார்த்திருக்கிறீர்களா ?

உன்னைப்போல் இன்னொருவன்

Oruvan

Now, thats a smile

Now, thats a smile

Golden Eye

எனிக்மா

Enigmatic

DSC05876இந்த ப்ளாஸ்டிக் பூ முப்பது ரூபாய்க்கு விற்றார்கள்.. மணத்தைத் தவிர பாக்கியெல்லாம் இயற்கையை சவால் விடுவது போல இருந்தது. வாங்கிவந்து வைத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்திருந்தேன்.. ஒரு நல்ல போட்டோவுக்கு ஆச்சு.. !

ஆய பயனென்கொல்


ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டிபோட்டுக்கொண்டு சிலை வைக்கின்றார்கள். நேற்றைய செய்திகளில், மஹாராஷ்ட்ராவில் 300 அடிக்கு சிவாஜி சிலை ஒன்றை 350 கோடி ரூபாய் செலவில் நிறுவப்போகிறார்களாம். பேஷ் ! மேடம் மாயாவதியின் சிலைகளை வைப்பதற்கு கோர்ட் தடைவிதிக்க முடியாது போலுள்ளது. அவர் சிலையை அவரே திறந்துகொள்ளும் இந்த இரண்டாவது படம் என்னுள் சிரிப்பைத் தாண்டி ஒரு அருவருப்பை உண்டாக்கியது.

நம்ம ஊரில் கர்நாடகக் கவிஞர் சர்வக்ஞர் சிலை திறந்து, அங்கே போய் திருவள்ளுவர் சிலை திறந்து 'புரட்சி' (!) செய்துவிட்டனர். இதனால் என்ன நேர்ந்துவிடப்போகிறது என்பது என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதிகபட்சமாக என்னால் யோசிக்க முடிந்த ப்ரயோஜனம் என்னவென்றால் கலவர நாட்களில் சேதம் செய்ய இரண்டு புதிய சிலைகள் கிடைத்துவிட்டன. அவ்வளவே.

சிலைவைப்பதனால் ஆய பயனென்கொல் அச்சிலையின்
தலை கொய்தல் கலவரத்தின் வினையாம்

ஹ்ம்ம்.. இன்னும் என்னென்ன சிலை வைக்கலாம் என்று மல்லாக்காகப் படுத்து விட்டத்தைப்பார்த்தபடியே யோசித்தேன்.

தமிழக மக்களின் நன்மைக்காக, அண்ணா அறிவாலயத்தில் ஒரு அதிமுக சிலையும், அதிமுக செயலகத்தில் ஒரு திமுக சிலையும் ஒருவருக்கொருவர் திறந்துவைத்துக்கொள்ளலாம்.

ஜின்னாவைப் பற்றி பேசி பேஜாராக மாட்டிக்கொண்ட ஜஸ்வந்த் சிங், ஜின்னாவின் சிலையை டில்லியில் எங்காவது திறந்துவைக்க கோரிக்கை வைக்கலாம். அப்படியே பால கங்காதர திலக்கின் சிலையை லாஹூரில் திறந்துவைத்துவிட்டால் இந்தியா-பாகிஸ்தான் ப்ரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று ஐடியா கொடுக்கலாம்.

அதுசரி, சிவாஜி சிலை முன்னூறு அடி என்றால் நாம் தமிழகத்தில் ஏதாவது செய்யவேண்டுமே.. முன்னூற்று ஒரு அடியாவது கட்டியாக வேண்டும். குமரியில் திருவள்ளுவர் சிலை 133 அடி தான் இருக்கிறது. யோசித்து ஏதாவது செய்வோம்.

மூ-வர்ணம்

Orange White Green

நிறபேதம் தெரிகிறவரையில் கண்ணுக்கு நல்லது.
வர்ணங்கள் தெரியாதபோது மண்ணுக்கு நல்லது.

-கீர்த்தி.



பசி - The one and only omnipresent and omnipotent.

பன்றிக் காய்ச்சல்

சென்னையில் நான் பார்த்தவரையில், பொது மக்கள் அனைவரும் கொஞ்சம் பதட்டத்துடனேயே காணப்படுகின்றனர். பேருந்தில் பயணம்செய்யும் ஜன்னலோரவாசிகள் மூக்கை கைக்குட்டையால் மூடியபடியே பயணம் செய்கிறார்கள். சிலபேர் சர்ஜிகல் மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு டாக்டராகவும், நர்ஸாகவும் வலம் வருகிறார்கள். பொது இடத்தில் யாராவது "ஹச் !" என்று தும்மிவிட்டால், சுற்றி இருப்பவர்கள் ந்யூக்லியர் பாம் வந்து பக்கத்தில் விழுந்துவிட்டதுபோல் ரியாக்ஷன் கொடுக்கின்றனர்.

இந்த விழிப்புணர்ச்சி நல்லதுதான். ஆனால் என்ன ஒரு ப்ரச்சனை என்றால், இந்தக் காய்ச்சல் நமக்கு வந்துவிட்டதா என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஜலதோஷம், தும்மல், இருமல், காய்ச்சல் எல்லாம் சராசரி இந்தியனுக்கு வருடத்துக்கு நாலு முறை வந்துவிட்டுப் போகிற சமாச்சாரங்கள். இதையே காப்பி அடித்து 'பன்றிக் காய்ச்சலுக்கு' சிலபஸாகப் போட்டதால், குழப்பமாக இருக்கிறது..

என் நண்பர் சொன்னார்.. "சிம்ப்டம்னா பளிச்சுனு தெரியறமாதிரி இருக்கணும். இருமினா கண்ணுல இருந்து ரத்தம் வர்ர மாதிரி.. அப்படி ஒரு யுனீக் சிம்ப்டம் இருந்திருந்தா ஈசியா கண்டுபிடிச்சுடலாம்".. அது சரி !!

குழந்தைகளிடம் இது எளிதாகப் பரவுகிறது என்று டி.வி.க்கள் சொன்னதால், பள்ளி செல்லும் வசதியான குழந்தைகள் எல்லாம் மாஸ்க் அணிந்துள்ளனர். இந்த மாஸ்க் தற்போது விலை ஏறியுள்ளது. பல இடங்களில் இது கிடைப்பதும் இல்லை.. கடும் தட்டுப்பாடு.. நல்ல பிசினஸாக இது மாறியுள்ளது..

Some people die of Swine Flu.. Some people make a living out of it.

ஹ்ம்ம்.. சில விஷயங்களில் இந்தியா உலக நாடுகளோடு அப்-டு-டேட்டாக இல்லாமல் இருப்பதே நல்லது எனத்தோன்றுகிறது. இந்தியா இந்த H1N1 விஷயத்தில் என்ன செய்யவேண்டும் என்ற இந்தச் செய்தி பாஸிடிவ்வாக இருக்கிறது.

எப்படியோ.. எல்லோரும் மூக்கை மூடிக்கொண்டு ஷேமமாக இருங்கள்.

லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து !