சட சட என்று ஜன்னலுக்கு வெளியே மழை பெய்து கொண்டிருந்தது.
காற்றில் அடித்து ஜன்னல் வழியே வந்த சாரலை எல்லாம், ஜன்னல் கம்பியைப் பிடித்து ஆனந்தமாய் அனுபவித்துக் கொண்டிருந்தான் அர்சித். ரோட்டில் வழிந்தோடும் மழை நீர் தெரிய எம்பி எம்பி பார்த்துக் கொண்டிருந்தான். இதுவல்லவோ ஏகாந்தம் - பள்ளி விடுமுறையில் மழையை அனுபவிப்பது. வெளியே செல்லக் கூடாது என்பது அம்மாவின் கட்டளை.
"அம்மா ! சாப்பிட ஏதாச்சும் இருக்காம்மா ?"....
கூட நின்று இதையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த செளம்யாவிற்கு அர்சித் கேட்ட கேள்வி மனதில் ஏறவில்லை.
"என்னடா ?"
"சாப்பிட ஏதாவது...."
ஆஹா ! கொட்டும் மழையில் சுட சுட ஏதாவது உள்ளே சென்றால்.. பரமானந்தம் !
"செய்யலாமே... நீ பார்த்துண்டு இரு.. நான் செஞ்சு கொண்டு வரேன்... " -சமையலறைக்குள் மறைந்தாள்.
மழைத்தூரலிட்ட போது ஒரு மண்வாசனை வந்து மறைந்து போனது. அதனோடு கலந்து இப்பொழுது பக்கோடா வாசனையும் வந்தது..
"ஹய்ய்ய்யோ !!! அம்மா.. பக்கோடாவா ? ஹெஹேய் " என்று அர்சித் குதித்துக் கொண்டே கேட்டான். ஒரு தட்டில் வெங்காய முறுவல்களோடு கொதிக்கும் பக்கோடா (பக்கோடா - தமிழ்ச் சொல்லா ?) வந்து கொண்டிருந்தது. சிறிது நேரம், இருவரும் ஏக வயதினராய் மழையை ரசித்து, பக்கோடாவை ருசித்தனர்.
சடாரென்று நின்றது மழை. கடைசி பக்கோடாவும் தட்டிலிருந்து விடை பெற்றது.
"அம்மா.. மாடிக்குப் போகலாம்மா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. மழைதான் நின்னுபோச்சே.. போலாம்ம்மா..."..
செளம்யாவிற்கும் ஆசைதான்.. "வா போலாம்.. "
பச்சை பாசி படர்ந்து சில இடங்கள்... உதிர்ந்த இலைகள்.. அந்த இலைகள் மீது தூய நீர்த்துளிகள்.. மெல்லிய காற்று... மழை நின்றுவிட்டதா என்று கையை நெற்றிக்குமேல் வைத்து நோட்டம் பார்க்கும் காக்கா.. கொத்தனார் செய்த பிழையால் நீர் தேங்கி நிற்கும் சில இடங்கள்.. என்று மாடி காட்சி அளித்தது.
அர்சித் தேங்கி நின்ற தண்ணீரில் காலை விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அவனது குட்டி குட்டி சந்தோஷங்களையெல்லாம் பார்த்து புன்னகைத்தாள் செளம்யா. சோம்பல் முறித்து வெளியே எட்டிப்பார்த்தாள். மனித நடமாட்டம் மீண்டும் தெருவில். அது பல சிந்தனை ரேகைகளை அவளது முகத்தில் எழுதிச் சென்றது.
ஒடிவந்து அம்மாவின் கையை இழுத்தான் அர்சித். அம்மா வரவில்லை.. "என்னம்மா பாக்கறே ?". அவனும் எட்டிப் பார்த்தான். அவன் கைகளை இறுகப் பிடித்து.. "எட்டிப் பார்க்காதே.. விழுந்துடுவே..."...
"இந்த மழை.. லீவ்.. அம்மா.. வீடு.. எல்லாம் இன்னிக்கு ஜாலியா இருக்குல்லே.." என்றாள், வெளியே பார்த்தபடியே...
அர்சித் தலை ஆட்டினான். அவள் பார்க்கவில்லை.
"ஆனா இந்த மழை எத்தனை பேருக்கு ப்ரச்சனை கொடுக்குது... ப்ளாட்ஃபாரத்துல இருக்கறவங்களுக்கு இந்த மழை நல்லது இல்லேல்ல ?"
அர்சித்துக்கு புரியவில்லை.
"சிலருக்கு நல்லதுன்னு நடக்கறது.. சிலபேருக்கு கெட்டதா முடிஞ்சுடுது.. "
"...."
"இல்லே ?......"..
சில வினாடிகள் போயிற்று. செளம்யா பார்வை நகற்றி அர்சித்தைப் பார்த்தாள்.
அண்ணாந்த்து அவள் பேசுவதை புரியாத முகபாவத்தில் வைத்துக்கொண்டிடருந்த்தான்.
"என்ன ?" என்றாள் அம்மா.
"கீழே போய் இன்னும் கொஞ்சம் பக்கோடா சாப்பிடலாமா ?" என்றான், அர்சித்.
2 comments:
very nice..reminds me of the times i enjoyed the rains and loved to sleep cozily without going to school
but woudl also feel very bad for all those animals that were getting wet in the rain with nowhere to hide
:)
What to say keerti :)
Post a Comment