Wednesday, July 25, 2007

ஏதாவது தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள்

எலக்ட்ரிக் ட்ரெயின் பயணம்.
ஏகாந்தமாய் ஜன்னலோர இருக்கையில் வாசு.
இரண்டு ஸ்டேஷன் கழித்து ஒரு குருட்டு மாணவன் அவன் அருகில் அமர்ந்தான்.

வாசுவின் சந்தோஷம் பாதிக்கப்பட்டது. நெருடல்.
ஒரு பக்கம் பரிதாப உணர்ச்சி. இன்னொரு பக்கம் பயம்.
பயல் பர்ஸை அடித்துவிடுவானோ !! பேப்பரில் படித்திருக்கிறோமே.
சே ! சே! இப்படி நினைப்பதே தவறு. பாவம்.

ஆனால் எவ்வளவு சமாதானப் படுத்திக்கொண்டாலும், ஜன்னலுக்கு வெளியில் வாசுவின் கவனம் செல்லவில்லை.

"சார் ! கொரட்டூர் வந்தா சொல்லுங்க சார்.." என்றான் வாசுவிடம்.
"ஆங் ! வர்ர ஸ்டாப்தான்.. இறங்கிக்கோப்பா !!" என்றான் வாசு.

அவன் அகன்று சென்றவுடந்தான் நிம்மதியானான் வாசு.

கொரட்டூர் ஸ்டேஷனில் ஜன்னலுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த அந்த குருட்டு மாணவனை பார்வையிலிருந்து மறையும்வரை பார்த்தான்.

ஸ்டேஷன் மறைந்து, ஜன்னலுக்கு வெளியே உலகம் வேகமாக பின்னோக்கி சென்றுகொண்டிருந்தது.

சே ! அவனல்லவா நம்மிடம் அமர பயப்பட்டிருக்க வேண்டும் !!

No comments: