Sunday, November 25, 2007

நமஸ்காரம் / ஆசிர்வாதம் / உபயக்ஷேமம்

"அப்பா இருக்காரா தம்பி ?" என்று சாயங்காலம் ஒரு பெரியவர் வீட்டுக்குள் வந்தார் என்றால் ஒன்று அவர் பையனுக்குக் கல்யாணம். இல்லையென்றால் அவர் தெருவில் ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை என்று அர்த்தம். ஸ்ட்ரீட் லைட் மேட்டர் என்றால் வாசலோடு முடிந்துவிடும். "நாளைக்கு கார்ப்பரேஷன் ஆஃபீஸ்ல சொல்லி வர சொல்லிடரேன். சேஷாத்ரி வீட்டுக்கு பக்கத்து வீடு தானே நீங்க ?".

ஆனால் மேற்படி சொன்ன முதல் விஷயம் என்றால் பேச்சு கொஞ்சம் சுவாரஸியமாக இருக்கும். "பையனுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன்" என்று சிரிப்பார். என்னமோ பையனுக்கு குண்டு வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல... "வெரிகுட் ! வெரிகுட் !"

பத்திரிக்கையில் பெருமாள் அல்லது பிள்ளையார் எந்த வடிவத்தில் இருப்பார்கள் என்று பார்ப்பதில் எனக்கு கொஞ்சம் அளவு கடந்த ஆர்வம். ரூமிலிருந்து எட்டிப்பார்ப்பேன். இல்லை. இன்னும் பத்திரிக்கை அஷ்டகோனலாக மடித்து வைத்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கவரிலிருந்து வெளியே வரவில்லை. பத்திரிக்கை கொண்டு வரும் பைகள் ரிட்டையர்மெண்ட் வயதிற்கு ஏற்ப மாறுபடும். இரண்டு காது வைத்த மஞ்சப்பை (இந்த மஞ்சப்பையைப் பற்றி தனி பதிவே போடலாம்), அல்லது கக்கத்தில் இடுக்கிக்கொள்ள வசதியான ஃபோம் லெதர் பை ஒன்று, அல்லது சரவணா ஸ்டோர்ஸ் பை.

அப்பாவுக்கு இது பழகிப்போய் விட்டதால், அதே கேள்விகள் கேட்பார். "பொண்ணு என்ன பன்னறாங்க ?" "எந்த ஊரிலே வெச்சிருக்கீங்க ?" "எல்லாம் வாங்கியாச்சா ?" "அப்படியா ?!" என்று வரிசை மாறாத அதே கேள்விகள். அப்புறம் கவர் சப்தம் கேட்கும்.

"கண்டிப்பா வந்துடனும்.. கிழக்கு எது?" என்று திசை பார்த்து சரவணா ஸ்டோர்ஸ் பையைப் பிரிப்பார். அப்பா எழுந்து நின்று "தோ ! இந்தப்பக்கம்" என்பார். பயபக்தியுடன் இரண்டு கைகளிலும் பத்திரிக்கையை ஏந்தி "கண்டிப்பா வந்திடுங்க.." என்று பத்திரிக்கை கை மாறும். இந்த "கண்டிப்பா வந்திடுங்க" சுமார் எட்டு அல்லது பத்து தடவை ரிப்பீட் ஆகும். எனக்கென்னவோ "வந்துடாதீங்க !" என்று சொல்வது போலவே இருக்கும்.

மறுபடியும் யதாஸ்தானத்தில் உட்கார்ந்து கொள்வார்கள். அப்பா பத்திரிக்கையை கவரிலிருந்து வெளியே எடுத்து கணக்கு வாத்தியார் பேப்பர் திருத்துவது போல கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து கொண்டு படிப்பார். பத்திரிக்கை கொடுத்தவர் போகும் வீடுகளிலெல்லாம் இதையே அனுபவித்து வந்ததனால் பழகிப்போய் இருக்கும். முப்பது வினாடிகளுக்கு முன் இவர்கள் பேசிய அதே விஷயங்கள்தான் பத்திரிக்கையில் போட்டிருக்கும் என்றாலும் படிக்கவில்லை என்றால் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அப்பாவும், "எல்லாம் நான் சொன்னதுதான் இருக்கு. மெதுவா படிச்சுக்குங்க. நான் வர்ரேன்" என்று சொன்னால் அப்பா தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று வந்திருப்பவரும் பரஸ்பரம் யோசித்துக்கொள்வர்.


"ஓஹோ! எம்.சி.ஏ. படிச்சுருக்காங்களா ?" "ஆமாம். எம்.சி.ஏ. படிச்சிருக்காங்க".
"ஓஹோ! சவுத் போக் ரோடா !" "ஆமாம். நம்ம சிவாஜி வீடு பக்கத்துல தான். இங்க கிட்டக்கதான் இருக்கு. அதனால கண்டிப்பா வந்திரனும்".

பத்திரிக்கை முழுவதும் ஸ்கேன் செய்துவிட்டு பத்திரிக்கையை மூடிவிட்டு பின்பக்கம் பார்ப்பார். "மேனகா கார்ட்ஸா ! நல்லா இருக்கு." "ஆமாம் ! மேனகா கார்ட்ஸ். நம்ம கோயம்பேடுல இருக்கே !".

"வெரிகுட். வெரிகுட்.".

"அப்போ நான் கிளம்பறேன். வீட்டுல எல்லாரையும் கூட்டிட்டு வந்துடனும். உங்க பையங்க ரெண்டு பேரையும் அழைச்சுக்கிட்டு வாங்க" என்று எழுந்திருப்பார். "எனக்கு ஒரு பையன் தான்" என்று சிரித்துக்கொண்டே சொல்வார் அப்பா.
"ஓ. சாரி. நான் கன்ஃப்யூஸ் பண்ணிக்கிட்டேன். அவசியம் வந்திடுங்க. போயிட்டு வ்ர்ரேன்ம்மா. நீங்களும் வந்திருங்க.. " என்று வாசலில் செருப்புப் போட்டுக்கொண்டு கிளம்புவார்.

நான் என் ரூமைவிட்டு வெளியே வந்து பத்திரிக்கையைப்பிரித்தால், பெருமாள் - அலர்மேல் மங்கை படம் டாலடிக்கும். தக தக வென்று ஜிகினா பேப்பரில். உள்ளேதான் அதிர்ச்சி காத்திருக்கும். பத்திரிக்கை தெலுங்கில் ப்ரிண்ட் ஆகியிருக்கும். அதில் இருக்கும் வெகு குறைவான ஆங்கில வார்த்தைகள் - எம்.சி.ஏ, செளத் போக் ரோடு, தி. நகர் மற்றும் ஜனவரி.

1 comment:

Adaengappa !! said...

Last para/few lines...too good !!

wonderful keerthi !!