Saturday, June 06, 2009

ஓம் ஷாந்தி ஓம்

கதை முடிவதற்குள் திலீப்பும் வசந்தியும் சந்திக்கவேண்டும். எப்படி சந்திக்க வைப்பது ? திலீப் சென்னையில் இருக்கிறான். வசந்தி ஸ்ரீவில்லிப்புத்தூரில்.

"பார்த்து ! ஜாக்கிரதையா போயிட்டுவாடிம்மா ! கோபி.. உங்களை நம்பித்தான்டாப்பா வசந்தியை தனியா மதறாஸுக்கு அனுப்பறோம். போனோன்ன பக்கத்தாத்துக்கு ஒரு ட்ரங்க் கால் பண்ணி சொல்லிடு. நம்பர் குறிச்சிண்டியோன்னோ ?" வசந்தியின் அப்பா.

"கவலைப்படாதீங்கோ பெரிப்பா. அதான் சொன்னேனோல்லியோ. ஆத்துலேர்ந்து அஞ்சு நிமிஷ நடைதான் பின்னி மில்ஸ். பொழுது சாயரத்துக்குள்ளே ஆபீஸிலிருந்து வந்துடலாம். நான் பார்த்துக்கறேன்" என்றான் கோபி. ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸில் வேலை பார்க்கும் துறுதுறுப்பான இன்ஞ்சினியர். பஸ் ஸ்டாண்டில் இந்த சமயத்தில் இவன் மட்டும்தான் பேண்ட் போட்டிருந்தான் என்பதால், இவர்களைக் கடந்து சென்றவர்கள் எல்லாம் ஒரு நோட்டம் விட்டுச்சென்றனர்.

வஸந்தியும் அவள் அம்மாவும் சற்று தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தனர். வஸந்தி அம்மா வாங்கிக்கொடுத்த மல்லிகைப்பூச்சரத்தை தலையில் சூடிக்கொண்டிருந்தாள். சிகப்புத்திலகம் இட்டு நெற்றி ப்ரகாசமாய் இருந்தது. பர்மா பவுடர் கன்னத்தில் போட்டு, கண்ணோரத்தில் மை இட்டு முகம் லட்சனமாக இருந்தது. கண்களில் மட்டும் ஒருவிதமான மிரட்சி.

"சித்தப்பா கிட்டே ஜாக்கிரதையா நடந்துக்கோ. நாழிக்கு எழுந்து வாச தெளிச்சு ஆத்து காரியம் எல்லாம் பாரு. மகாராணியாட்டம் நடந்துக்க நம்ம ஆம் இல்லே. பிரத்தியார் ஆத்துல நல்ல பேர் வாங்கிக்கொடு."

"ம்ம்.."

பஸ் வந்துவிட்டது. "போயிட்டு வரேன் பெரிம்மா. வரேன் பெரிப்பா... "

சர்வ நிச்சயமாகப் போகப்போகிறோம் என்று தெரிந்தவுடன், தொண்டையை அடைத்துக்கொண்டது துக்கம். "கடுதாசி போடுடி..." என்றாள் அம்மா. சரி என்று சொல்லக்கூட முடியாமல் தலை ஆட்டினாள். தலை கனமாக இருந்தது. அப்பா நெற்றியைத் தடவி ஆசிர்வாதம் செய்தார். "ஜாக்ரதை கொழந்தெ !"

ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து பஸ் கிளம்பியது.

அப்பாடா. வசந்தி நாளை சென்னை வந்துவிடுவாள். அதற்குள் இந்த திலீப் பயல் எங்கும் சென்றுவிடாதவாறு கதையில் பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு. எங்கே அவன் ?

கிண்டி ஒலிம்பியா வாசலில் நின்று அரட்டைக்கச்சேரி.

"இதெல்லாம் வேஸ்டு டா. ட்ரிப்லிக்கேன் போய்ப்பாரு. க்ளாஸிக் ஃபுட் மேன்.."
"அப்போ.. அங்கே வெச்சுக்கலாம் ட்ரீட்டை"
"தோடா ! இன் யுவர் ட்ரீம்ஸ் ! மெரிடியன்ல கொடுத்தாத்தான் ஆச்சு !"
"ரிடிகுலஸ்.. !!"

ப்ரமோஷன் ட்ரீட் பற்றி பேரம் பேசிக்கொண்டிருந்தான் திலீப்.

"மச்சி. கிளம்பறேன். லாங் டே... சீ யூ கைஸ் டுமாரோ !!"
"ட்ரீட் ?"
"நாளைக்கு பீச்ல முடிவு செஞ்சுக்கலாம்.."

வெரிகுட். வஸந்தியை நாளை எப்படியாவது பீச் கூட்டிக்கொண்டு வர வேண்டும்.

-----

"வா வா வா !! பெரிய மனுஷி !" என்று வரவேற்றாள் சித்தி. பேப்பர் படித்துக்கொண்டிருந்த சித்தப்பா "வாடி !! அப்பா அம்மால்லாம் நன்னாருக்காளா !" என்று கேட்டபடியே கேட்டை பார்த்தார். "கோபி எங்கே !".. "ஆட்டோக்கு பணம் கொடுத்துண்டுருக்கான். சித்ரா எங்கே சித்தி ?"... "உள்ளே போ ! உனக்காகத்தான் காத்துண்ட்ருக்கா..."

-----
"டேய்.. வேக் அப். ஒன்பது மணியாயிடுச்சு !"
"இன்னிக்கு லீவ் பா.. அம் டையர்ட்..."
-----

"என்னிலர்ந்து ட்யூட்டி ?" கேட்டார் சித்தப்பா.
"திங்கக்கிழமை லேர்ந்து சித்தப்பா".
"ம்ம்.. பின்னி மில்ஸ் ல தான் கோதண்டபானி வேலை பார்க்கறான். சொல்லியிருக்கேன்.. செவ்வா புதன்ல அவனைப்போய்ப்பாரு.. என்ன வேலை உனக்கு"
"ஸ்டெனோக்ராஃபர்".
"ம்ம்.. பீ.யூ.சி யெல்லாம் முடிச்சாச்சோன்னோ ?"
"ஆச்சு சித்தப்பா"..
"ம்ம்ம்... பொம்மனாட்டியெல்லாம் சம்பாதிக்கற காலம் வந்துடுத்து."
யாரும் பதில் பேசவில்லை.

"உனக்கென்னடி.. இன்னிக்கு லீவுதானே ?" என்றார் சித்ராவிடம்.
"ஆமாம்ப்பா.."
"கோபி. ரெண்டு பேரையும் அழைச்சிண்டு மெரினா போயிட்டு வா.. சாரதி கோயிலுக்கும் போயிட்டுவா. சனிக்கிழமை வேற"
"இல்லேப்பா.. 'ஆரதனா' சினிமாவுக்கு... வஸந்தியும் போலாம்ன்னா"
"அதெல்லாம் நீ தனியா போய்க்கோ.. எக்கேடு கெட்டுப்போ... இவாளையும் கெடுத்துடாதே. நான் சொன்னதை மட்டும் செய் போதும்."
"சரிப்பா.."
------

பீச்.

இங்கே முடித்துவிட வேண்டும். ஏற்கனவே கதை பிசி பிசு என்று ஆகிவிட்டது. இங்கே முடித்தால்தான் சிறுகதை.. இல்லையென்றால் தொடரும் போட்டு நாளை முடிக்க வேண்டும். வஸந்தி என்ன முடிவு செய்கிறாள் என்று பார்ப்போம்.
-----

பேருந்தில் ஏறுவதற்கு முன் வாங்கிய மல்லிகைப்பூவை சரி செய்துகொண்டாள் வஸந்தி. "ஆஹா. பட்டணம் எவ்வளவு விஸ்தாரமாக, வித்தியாசமாக இருக்கிறது. அவள் ஊரில் சப்-ரெஜெஸ்திரார் மாமாதான் கார் வைத்திருந்தார். இங்கே ஜட்கா வண்டி என்ன, ப்ளைமெளத் கார் என்ன, டாக்ஸி என்ன.. ஜிவுஜிவு என்று இருந்தது.

வாழ்க்கையை வென்று விட்டோம் என்ற பெருமிதம் அவள் கண்களில் தெரிந்தது. பி.யூ.சி யில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று டைப்ரைட்டிங் ஹையர் படித்ததும் மதறாஸில் விண்ணப்பித்தவுடன் வேலை கிடைத்துவிட்டது. மதறாஸில் கிடைத்ததுதான் சந்தோஷம். இங்குதான் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். சொந்தக்காலில் சொந்தப்பணத்தை இங்கேதான் அனுபவிக்க முடியும். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இப்படியெல்லாம் நடக்காது. ஆராதனா பார்க்கலாம் என்றானே கோபி. நம்ம ஊருக்கெல்லாம் அந்தப்படமே வராது." என்றெல்லாம் நினைத்துக்கொண்டே வந்தவள், சடாரென்று தான் நினைத்ததையெல்லாம் மீண்டும் நினைவுபடுத்திப்பார்த்தாள். பெருமாளை எங்கேனும் நிந்தனை செய்துவிட்டோமோ என்று. இல்லை.. இங்கேயும்தான் பெருமாள் இருக்கிறார். பார்த்தசாரதியாமே.

-------
ஐந்தே முக்கால்.
"வேர் இஸ் த பாஸ்" என்று ஹோண்டாவை ஆஃப் செய்தபடி கேட்டான் திலீப்
"வந்துக்கிட்டு இருக்கான். ஃப்ளையோவராண்ட இருக்கான்"
"ஹ்ம்ம்.. டேய் மெரிடியன் ஹோட்டல் எல்லாம் ஓவர்டா.. சிக்ஸ் ஹண்ட்ரட் ஆகும்.. பெர் ஹெட்"
"அவன் வரட்டும் பேசி முடிவு பண்ணிக்கலாம்"
------

"கோபி. பசிக்கறது. சாப்டுட்டு பீச் போலாமே !"
"கொஞ்சம் பொறுத்துக்கோ.. பீச் போயிட்டு, போலாம். இல்லேன்னா திரும்பவும் பசிக்கும்.. இங்கே சோளா பூரி நன்னா இருக்கும்.. வாங்கித்தரேன் பாரு."
குதூகலமான மனோனிலையில் மிகச்சந்தோஷமாக இருந்தாள் வஸந்தி.

------
"ரெண்டு பேரும் பின்னாலே வாங்கோ. சித்ரா.. வாடி பின்னால.. எனக்கு பயம்மா இருக்கு"
"நீயும் வாட கோபி. கடற்கறை பார்த்து எவ்வளோ நாளாச்சு.. "
அலைகளைப்போலவே வசந்தியின் மனதிலும் துள்ளல் அதிகமாக இருந்தது. முன்னே முன்னே மார்பளவுக்கு முழுகும் வரை சென்றுவிட்டாள். சித்ரா கூட பயந்து பின்னே சென்றுவிட்டாள். சுதந்திரத்தின் உச்சத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாள் வஸந்தி.

போதும் என்ற கட்டத்துக்கு வந்தபின் திரும்பி கோபியையும் சித்ராவையும் பெருமிதத்துடன் பார்த்தாள். "நீயும் வா சி"........ ராட்சஸ அலை ஒன்று மண்டையில் விழுந்து அமுக்கியது.

-----

திலீப் கனுக்கால்வரை மட்டும் நனைத்துக்கொண்டு, கையில் ரீபாக் ஷூவுடன் நின்று கொண்டிருந்தான். இன்னுமொரு அலைவந்தது. முகத்தில் அமைதியாக ஒரு காற்று வந்து அடித்தது. சட்டென குணிந்து பார்த்தான். கால் கட்டைவிரலில் ஏதோ மாட்டிக்கொண்டிருந்தது. பட்டம் பறக்கவிடும் மாஞ்சா கயிறோ.. அல்லது, பூ தொடுக்கும் நாறாக இருக்கும்.

-----
"ஏண்டா உம்முன்னு இருக்கே.. "
திலீப்பும் நண்பர்களும் ட்ரிப்லிக்கேன் மெஸ்ஸில் உட்கார்ந்திருந்தனர்.
"சரிடா.. உனக்கு எங்கே தோனுதோ அங்கே குடு போதும்.. இப்பொ என்ன சாப்புடுறே?"

"சோளா பூரி" என்றான் விறைப்பாக.
"மச்சி.. இது சரவண பவன் இல்ல.. சங்கரன் மெஸ்.. இட்லியா தோசையா ?"
"சோளா பூரீ !!!!" என்று கத்தி கண்களால் மிரட்டினான் திலீப். பார்வையில் குரூரம் இருந்தது.

திலீப்பும் வஸந்தியும் சந்தித்து ஒன்னேகால் மணினேரம் ஆகிவிட்டது.

---
சுபம்.

11 comments:

KB said...

B..E..A..utiful!!

If my interpretation is right, its a perfect Sujatha meets Shyamalan :-)

Shobana said...

Kathi konjam puriyala...enna maathiri makkungulum sillathu unga kathaiya padikuthu...athukaaga unga stda koraika vendaam...ana konjam explain panna nanna irrukkumay...please pa..eh, please pa.

monu said...

OK...so dilipukku pey puduchiruchaa???

i really loved the story..really really nice and i liked the surprise ending...i didnt guess it woudl end this way
:)

Shobana said...

I re read the story...is it a multiple personality disorder story? Or a simple ghost story? Kathai ellutharavanga konjam comments sectionum paddingappa....onnumay puriyala..thalaya pichikittu irruku.

Shivathmika said...

nanna irukku... aana konjam puriyala... explain pannungonnaa...

KRTY said...

KB, Gayathri, thanks.

Shobana, Shivathmika, the answers are coming. :)

சென்ஷி said...

:)))

மனுநீதி said...

Good one da Keerthi. Munnadiye sonna maadhiri second time carefula padichappuram thaan purinjuthu :)

Anonymous said...

Hi Keerthi,

Is this a re-post? Feel like I have read this already.

Arun.

Subha said...

Nice story.

But is this story set in 2 different time periods? I noticed some insconsistencies, if that is the case.

Sreeram said...

veru veru kaala kattathil vazhdavargal 2 kadaa paatirangal kadarkaraiyil sanditu pinnar mudiyum climax - konjam dasavadaarathai ninaivu padutiyadu :)

- Good knot at the end :)