பெரும்பாலான நிறுவனங்கள் தத்தம் தொழிலாளர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை க்ரூப் இன்ஷூரன்ஸ் (குழுக் காப்பீடு) என்ற திட்டத்தில் செலுத்துகிறது. இதனால் என்ன பிரயோஜனம் ?
இந்த நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் சமயத்தில், நமக்கோ அல்லது நம்மைச் சார்ந்து இருப்பவருக்கோ (Dependants) ஏதேனும் உடற் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கையில் ஆபத்பாந்தவனாக வரும் இருவரில் ஒருவர் இந்த மருத்துவக் காப்பீடு. (மற்றொருவர் மருத்துவர்). மருத்துவமனையில் ஆகும் செலவுகளை இந்தக் காப்பீடு பார்த்துக் கொள்கிறது. எனவே பாக்கி கவலைகள் இல்லாமல் நிம்மதியாக வலியைப் பற்றி மட்டும் நாம் கவலை கொள்ளலாம்.
சரி.. இதுதான் தெரிந்த விஷயம் ஆயிற்றே ! இதற்கு என்ன வந்தது இப்போது ??
விஷயம் இதுதான். சுமார் நான்கரை வருடங்களாக வேலை(!) பார்த்து வருகிறேன். இதில் இரண்டு முறை இந்த மெடிக்கல் இன்ஷூரன்ஸை முழுமையாகப் பயன் படுத்தவேண்டிய துர்பாக்கிய சந்தர்ப்பங்கள் நேர்ந்தன. இரண்டு முறையும் இந்தக் காப்பீடு பேருதவியாக செயல்பட்டது.
என் தந்தை லூகாஸ் டி.வி.எஸ்ஸில் பணி புரிந்தார். அங்கு அவருக்கு இருந்த இந்தக் காப்பீடு அவருக்கும் என் அம்மாவுக்கும் அவரது ரிட்டையர்மென்டுக்கு அப்புறமும் தொடர்கிறது. ரிட்டையர்மென்டுக்கு அப்புறம் அவர் ப்ரீமியம் செலுத்தவேண்டும், அவ்வளவே. ஆனால் ஒரு வித்தியாசம். வாழ்க்கை முழுவது என் அப்பா லூகாஸில் மட்டுமே பணி புரிந்தார். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள். நான் முன்னர் சொன்னது போல் நான்கரை வருடங்களில் இரண்டு கம்பெனிகள். இப்பொழுதுள்ள பெரும்பாலான தனியார் துறை அலுவலகங்கள் போஸ்ட்-ரிட்டையர்மென்ட் பெனிஃபிட்ஸ் எதுவும் தருவதில்லை.
சோ ! நான் இப்பொழுது அனுபவிக்கும் இந்தக் காப்பீடு இம்மாதிரி கம்பெனிகளில் வேலை பார்க்கும் போது மட்டும்தான். ஒருவேளை நான் சொந்தமாகத் தொழில் தொடங்கினால் அவை இருக்கப் போவதில்லை.
எனவே, கம்பெனியில் தருவதோடு நில்லாமல், நாமாக ஏதாவது காப்பீடு செய்து கொள்ளலாம் என்று சில மெடிக்கல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு "என்ன ரேட் ?" என்று ஈமெயில் அனுப்பினேன். இரண்டு நிறுவனங்களிலிருந்து நேற்று எனக்கு அழைப்பு வந்தது, என்னுடைய மொபைலுக்கு.
"சார்.. உங்களுக்கு அடிபட்டுச்சுன்னா ஹாஸ்பிடலைசேஷன் தவிர ஃப்ளாட்டா டூ தவுஸன்ட் ருபீஸ் வரும் சார். ஒரு நாளைக்கு. அதுவும் ரெண்டு கண்ணோ, இல்லே ரெண்டு கையோ, இல்லே ரெண்டு காலோ போயிடுச்சுன்னா இன்னும் நிறைய பெனிஃபிட்ஸ் வரும் சார். நீங்க செத்துட்டீங்கன்னா மேக்ஸிமம் பெனிஃபிட் சார் ! " என்று அடுக்கிக்கொண்டே போனார்.
எனக்கு கேட்கவே "ஏண்டா கேட்டோம்" என்று தோன்றியது. என்னென்ன வியாதிகள் வந்தால் என்னென்ன பெனிஃஃபிட்ஸ் வரும் என்று அவர் காப்பீடு சம்பந்தமாகச் சொல்லும் போது, அந்தந்த வியாதிகள் ஷண வினாடிக்கு வந்து சென்றதுபோல் இருந்தது.
இந்த விஷயங்கள் எக்ஸ்ட்ரீம்லி சென்சிடிவ். என்னதான் அவர் சொன்னது பாலிஸிப்படி ப்ராபர் இன்ஃபர்மேஷந்தான் என்றாலும், அதை இப்படி க்ரெடிட் கார்ட் மார்கெட் செய்வது போல செய்யவேண்டாம் என்று தோன்றுகிறது.
"சார்.. உங்களுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சுன்னு வெச்சுக்குங்களேன்.. இன்னும் நிறைய பெனிஃபிட் சார்... டெய்லி த்ரீ தவுஸண்ட் ருபீஸ் வரும் சார்.."
"சாரி சார்.. எம் நாட் இன்ட்ரஸ்டட் !" என்று ஃபோனை வைத்துவிட்டேன்.
2 comments:
Certain things are better read in fine print than heard!
Good one Keerthi!
உங்களுடைய கத்திரிக்காய் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது எனக்கு.
Post a Comment