Sunday, March 09, 2008

ராஜகோபாலும் திருடனும்

இத்தனை வருடங்களுக்குப்பின் தனிமை கொஞ்சம் புதுமையாக இருந்தது ராஜகோபாலுக்கு. ஆயிரத்து முன்னூறு சதுர அடிகளில் ஆறு பேர் உண்டு உறங்கி வளர்ந்த வீடு. இன்று ராஜகோபால் மட்டும் நான்கு சதுர அடிகளில் காலை நீட்டிக்கொண்டு டீ.வி. பார்த்துக்கொண்டிருந்தார்.

எல்லோரும் அவர் மருமகளின் சொந்தக்காரத் திருமணத்துக்காக மங்களூர் சென்றிருந்தனர். அவருக்கு உடம்பு அலைச்சல் தாங்காது என்பதாலும் ஏழாயிரம் ரூபாய் விமானத்துக்கு கூடுதலாக செலவாகும் என்ற உண்மைக் காரணத்தினாலும் அவர் மகன், சென்ற வாரம், கனிவாக அவரிடம் "நீ பத்திரமா இங்கியே இரு.. பாபுவ அடிக்கடி வந்து பாத்துக்க சொல்லறேன். போயிட்டு ரெண்டே நாளில வந்துர்ரோம்.. என்ன ?" என்று சொல்லிவிட்டான்.

இன்று காலையில் மேங்களுரிலிருந்து போன் செய்தான். வாசல் கேட் பத்திரமாக பூட்டப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம்.

இன்று பல விஷயங்கள் புதுமையாக இருக்கப் போகின்றன என்று ராஜகோபாலுக்குத் தெரிந்தது. யாரும் படிக்காத பேப்பரை இன்று காலை அவரால் படிக்க முடிந்தது. எட்டு மணி ஆகியும் யுத்தம் எதுவும் இன்னும் ஆரம்பிக்காத ஒரு ஹால். நிம்மதி என்று ஒன்று இருந்தால், மதிய உணவுக்குப் பிறகு கண்ணயரும்போதுதான். இன்று விழித்து எழுந்ததிலிருந்தே நிலவியது.

இந்தத் தனிமை கொஞ்சம் தன்னை சந்தோஷப்படுத்தியிருப்பதை உணர்ந்தார், ராஜகோபாலன். தனிமை அவர் வயோதிகத்தை குறைத்துக் காண்பித்தது.

தன் இஷ்டத்துக்கு சேனல்கள் மாற்றினார். அடேயப்பா.. இத்தனை சேனல்களா ? என்று வியந்தார். சோபாவில் தன் இஷ்டத்துக்கு படுத்துப் புரண்டார். அரை மணி நேரம் ஷவருக்கு அடியில் ஜலக்கிரீடை செய்தார்.

இன்று கேள்வி கேட்க மகன் இல்லை. அதட்ட மருமகள் இல்லை. மூகம் சிடுசிடுக்கும் சம்மந்தியம்மாள் இல்லை. சதா இம்சிக்கும் பேரன் இல்லை. குட்டிச் செல்லம் அக்ஷயா மட்டும் இல்லை என்ற குறைதானே தவிர, பாக்கி பேர் இல்லாதது நிம்மதியாக இருந்தது.

காலிங் பெல் அடித்தது. பாபுவாக இருக்க வேண்டும்.

- தொடரும்

1 comment:

Narayanan Venkitu said...

Wonderful start Keerthi ....Viru..Viru.nnu irukku..

Waiting for more

PS - First I thought this is something about HSB - Annachi! LOL :()