Saturday, March 29, 2008

சொல்ல மறந்த கதை & வாங்க மறந்த உதை

"ராஜகோபாலும் திருடனும்" அப்படியே நிற்கிறது. ஏற்கனவே ப்ளாக் இருக்கிற பவிஷுக்கு இந்த ப்ரேக் வேறு ஒரு கேடா ? கொஞ்ச நாளைக்கு இந்தக் கதையை நான் தள்ளிப் போடுகிறேன். ஒன்றுமில்லை.. ஒரு ஸ்வாரஸ்யமான ஹாஸ்யம் கலந்த உரையாடல், திருடனுக்கும் ராஜகோபாலுக்கும். ஆனால் எழுத உட்கார்ந்தால், திசை மாறிப்போய்விடுகின்றது.

காரணம் சொல்வதற்கு முன், நீங்கள் முயன்று முடித்து அனுப்புங்களேன்.. கதையை.. அவ்யுக்தாவில் ப்ரசுரம் செய்து பரவசவரம் தருவோம். !

காரணம் இதுதான். என் நண்பன் "வேர்ப்பற்று" என்ற இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலைத் தந்து.. "ஐயர் தானே நீங்க.. இதை படிச்சுட்டு கருத்து சொல்லுங்க பாஸ் !" என்றான். கொஞ்சம் கேள்விகள் எழுப்பிய இக்கதையைப் படித்த சூட்டில் நம்ம உடுமலை.COMமில் இரண்டு புஸ்தகங்கள் வாங்கினேன். அதில் ஒன்று "குருதிப்புனல்" - இந்திரா பார்த்தசாரதி.

ராவும் பகலும் படித்து புஸ்தகத்தை முடித்துவிட்டேன். பழைய ப்ளாகைத்தான் முடிக்க முடியவில்லை. வாசகர்கள் உதைக்காமல் பொறுத்தருள்க.

"குருதிப்புனல்" நாவலைப் படித்ததிலிருந்து சுய சிந்தனை, சமூகப் பார்வை என்பது குறித்த எண்ணங்கள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. அது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, கம்யூனிஸ்டுகள் எதிர்த்ததாகவும்.. பிற்காலத்தில் இ.பா விடம் கம்யூனிஸ்ட் அமைப்பே மன்னிப்பு கேட்டதாகவும் முன்னுரையில் படித்தேன். இதுதான் விசித்திரமாகப் பட்டது. அப்படி ஒன்றும் எதிர்க்கும்படி இல்லையே..ஒரு வேளை, புஸ்தகம் வந்த காலம் அப்படி இருந்திருக்கக் கூடும்.

சொல்லப்போனால், "வேர்ப்பற்று" புஸ்தகத்தில்தான் கம்யூனிஸ்டுகள் வாயில் விரல் வைத்து யோசிக்கும்படி விஷயங்கள் கூறியிருப்பார். ஆனால், குருதிப்புனலில் சித்தரிக்கப்பட்ட சூழல் சர்ச்சையானது. புஸ்தகத்தில் ஐயர், நாயுடு, பள்ளர், பறையர், தேவர் என்ற வார்த்தைகள் தெளித்தால் போதும்.. சர்சைக்குள்ளான விஷயமாகும் யோக்யதை வந்துவிடுகின்றது.

நாவலில் ஒரு இடம் வரும். லைப்ரரியன் ஒருவர் கேட்பார். "... அந்த புஸ்தகம் படிச்சியா ?" என்று. "உம்.. படிச்சேன். ப்ரில்லியன்ட் புக்". அதற்கு எதிர்முனை கேலியாகச் சிரிக்கும்.

"ஏன் ?"...
"இல்லை.. ப்ரில்லியன்ட் என்பதற்கு அதில் ஒன்றும் இல்லை. அது படித்தது ஒரு சுகமான அனுபவம். அவ்வளவுதான்."

என்றபடி உரையாடல் செல்லும்.

அதே போலத்தான். இந்தப் புத்தகங்கள் ஒன்றும் பேரர்ப்புதமான கதைகள் இல்லை. ஆனால் படித்ததில் மனதில் பதிந்து, உறைந்து, வேரூன்றி - கேள்விகளாகவும், பதில்களாகவும், தெரிவுகளாகவும் வெளி வருகின்றன. அப்படியென்றால் அது நல்ல புஸ்தகம் தானே ?

புஸ்தகங்களை www.Udumalai.com மூலமாக வாங்கினேன். வெள்ளியன்று ஆர்டர் செய்து சனிக்கிழமை மதியமே கையில் கிடைக்கும் படி குரியர் செய்துவிட்டார், உடுமலை.காம் நடத்திவரும் சிதம்பரம். சபாஷ் and நன்றி.

பி.கு - மூன்றாவது புஸ்தகம் - தேவன் எழுதிய ராஜத்தின் மனோரதம்.

2 comments:

Anonymous said...

krty,

i miss a lot of good posts in your blog simply because im not fluent in reading tamizh da... :(

Anonymous said...

udumalai.com pathi theriyaama irundhudhu ivlo naala.. rembo danks ba!