ஸ்தல புராணம் - ஓரிக்கை.
காஞ்சியில் திருமழிசை ஆழ்வார் தங்கியிருந்தபோது, கணிகண்ணன் என்பவரும் அங்கே இருந்து தொண்டு செய்து வந்தார். கனிகண்ணனுக்கு ஒத்தாசையாக ஒரு வயதான மூதாட்டியும் தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் அந்த மூதாட்டியின் சேவையில் அகமகிழ்ந்த கணிகண்ணன் அவர் முதுகில் தட்டிப் பாராட்ட, அம்மூதாட்டி முதுமை விலகி மறுபடியும் இளமையானாள்.
இதைக் கேள்விப்பட்ட மன்னன் எண்ணிலடங்காப் பொருள் கொடுத்து, கணிகண்ணனை, தன்னையும் இளமையாக மாற்ற வேண்டினார். கணிகண்ணன் மறுத்ததனால் ஆவேசமடைந்த மன்னன் அவரை காஞ்சியைவிட்டு வெளியே போக உத்தரவிட்டார்.
கணிகண்ணன் செல்கையில், திருமழிசை ஆழ்வாரும் அவருடன் கிளம்பிச் சென்றார். அப்படிச் செல்கையில், அங்கே திவெஃகா என்னும் ஊரில் இருந்த யதோத்காரி பெருமாளைப் பார்த்து பாடுகிறார்.
கணிகண்ணன் போகின்றான்
காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா
துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்
நீயும் உன் பை நாகப்பாயைச் சுருட்டிக்கொள்
என்கின்றார். அஃதாவது, கணிகண்ணன் போகிறான், நானும் போகிறேன், நீயும் உன் நாகப் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு எங்களுடன் வந்துவிடு என்கிறார்.
பெருமாளும் அவர்களுடனே வந்துவிடுகிறார். அவர்கள் வந்து அந்த இரவு தங்கிய இடம்தான் ஓரிக்கை.
திருமாலே ஊரை விட்டு அக்ல்வதைக்கேட்டு பதறிய மன்னன், அவர்கள் இருக்கும் இடம் வந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதன் பின், திருமழிசை ஆழ்வார் மீண்டும் பெருமாளிடம் பாடுகின்றார்.
கணிகண்ணன் போக்கொழிந்தான்
காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டும்.
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்
நீயும் உன் பை நாகப்பாய் படுத்துக்கொள்
சுபம்.
இப்படி அவர்கள் "ஓர் இரவு இருக்கை" ஊர் பின்னர் ஓரிக்கை ஆனது.
திருமழிசை ஆழ்வார் சொன்னதையெல்லாம் செய்த பெருமாள், "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" ஆனார். அதாவது யதோத்காரி !!
காஞ்சி பரமாச்சாரியார், தனது இறுதி நாட்களில் ஒரு சொப்பனம் கண்டதாகவும், அதில் ஒவ்வோர் இடமாகச் செல்வதாகவும் சொன்னபோது, "கடைசியா ஒரு இடத்துக்குப் போறேன்டா.. அது ஒரு கிராமம். குடியானவா பசங்கள் எல்லாம் சிரிச்சு விளையாடிண்டிருக்கு.. நல்ல ஒரு நீரோடை பக்கத்துல வயல் வரப்பெல்லாம் இருக்கு. அங்கேயெல்லாம் நான் போறதா கனவு.." என்கிறார். அப்புறம் என்ன நடந்தது என சீடர் கேட்க, "அப்புறம் என்ன ஆறதுன்னா.. நான் அங்கேயே இருந்திடறேன்.. !" என்றாராம்.
யதேச்சையாக அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட இருக்கும் இடமும், அவர் சொப்பனத்தில் சொன்ன வண்ணமே அமைந்துள்ளது. இப்படிப்பட்ட இடத்தில்தான் மஹாபெரியவாளுக்கு மணிமண்டபம் அமைகின்றது.
கணபதி ஸ்தபதி என்பவர்தான் சிற்பங்களை வடிவமைத்து மேற்பார்வையிடுகிறார்.
முன்பதிவில் (!) சொன்னதுபோல், சிற்பக் கலையில் சிறந்து விளங்கப்போகும் இந்த மணிமண்டபம், இப்பொழுது பாதிக்கு மேல் பூர்த்தியாகிவிட்டது. பெருங்கற்கள் அழகான சிற்பங்களாக உருவாவதை சிறிது நேரம் கண்டு களிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. எனது கேமராவுக்கும். அதனால், உங்களுக்கும்.

ஓரிக்கையின் மீது படர்ந்திருந்த அழகான மேகக் கூட்டம்.


மணிமண்டபத்தின் அமைப்பு. முன்னே அமையப்போகும் நூறு தூண்கள்.

கர்பக்ரஹம். ப்ரகாசமாக ஒளிக்கீற்று வீசும் இந்த இடத்தில்தான் மஹா பெரியவரின் விக்ரஹம் ஸ்தாபனமாக இருக்கிறது.

மணிமண்டபத்தின் கோபுரம் எழுப்பப்படுகிறது.





பல்வேறு சிற்பங்கள், தூண்கள் மற்றும் சிற்பங்கள் செதுக்கும் சிற்பி.
நல்லதோர் ஞாயிற்றுக்கிழமை அமையக் காரணமான அனைவருக்கும் நன்றி. ஒரு மஹானுபாவருக்கு அமைக்கப்படும் இந்த மண்டபத்தை, கட்டிமுடித்தபின், காண லென்ஸ் கோடி வேண்டும்.
2 comments:
அருமையான பதிவு. அழகான புகைப்படங்கள். ஸ்ரீ ஸ்ரீ பரமாச்சாரியாளின் மணிமண்டபம் உலகின் வழிகாட்டியாய் விளங்கட்டும்.. அவரைப்போலவே..
ஜெயக்குமார்
thanks..
Post a Comment