Friday, October 31, 2008

தமிழன் என்றோர் இனம்

"தமிழன்" என்றும் "இந்தியன்" என்றும் உணர்வு பொங்கப் பேசும் மக்கள் ரொம்ப அதிகமாகிவிட்டனர். குறிப்பாக "தமிழினம்" அடிபடாத பத்தியே பத்திரிக்கைகளில் இல்லை.

இனம் என்றால் 'வகை' என்று பொருள். ஜாதி என்றும் சொல்லலாம். அது ஒரு வகையான Classification - அவ்வளவே. ஆண் இனம்.. தாவர இனம்.. முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இனம்.. பறக்கும் இனம்.. இப்படி ஒரு வகைப்பாடு தான் இனம். தமிழ் பேசும் மக்கள் எல்லாம் தமிழ் இனம் என்பது இவர்கள் கருத்து. அவர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும் சரி. இலங்கை குடிமக்களாக இருந்தாலும் தமிழ் பேசினால் தமிழர்தான். அஃப்கானிஸ்தானில் இருந்தால்கூட தமிழர்தான். அவர்கள் கஷ்டப்பட்டால், இங்கே இருப்பவர்கள் குரல் கொடுக்கிறார்கள் - (பின்னர் கைதாகிறார்கள்.)

அதெல்லாம் தெரிந்ததே. நேற்று இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர்கள் 'தமிழ் உணர்வு உள்ள இயக்குனர்கள் குழு'என்ற பெயரில் தினமலர் அலுவலகத்திற்குச் சென்று அந்தப் பத்திரிக்கையில் வெளிவரும் செய்திகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். (செய்தி இங்கே) 'தமிழ் உணர்வு உள்ள இயக்குனர்கள் குழ' என்ற பெயரைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இன்னும் உணர்வுகளை வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்களே இவர்கள். இந்தப் பெயரைப் படித்தவுடன் எனக்கு ஒரு யோசனை - எனக்கு தமிழ் உணர்வு இருக்கிறதா ?

என்ன பைத்தியக்காரத்தனம். தமிழ் உணர்வு என்றால் என்ன ? அதே எனக்குப் புரியவில்லை. அதன் விஸ்தாரம் எவ்வளவு.. ஸ்கோப்பில் உள்ளது என்ன ? யார் யார் ? உணர்வு என்றால் புரிகிறது. தமிழ் உணர்வு என்பது விளங்கவில்லை. சமுதாய உணர்வு என்று சொல்வதுகூட புரியவில்லை. சமூகப் ப்ரஞை என்று சொன்னால் ஓரளவு விளங்குகின்றது. சமுதாய உணர்வு என்றால் ? வெற்று வார்த்தையில் நாமாக அர்த்தம் கற்பித்துக்கொள்கிறோமோ ? நமக்குப் புரிந்த, தெரிந்த அர்த்தத்தை நாம் அதற்கு பொருளாகக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன்.

எது எப்படியோ.. எனக்கு அந்த உணர்வு - அதாவது பாரதிராஜா அளவுக்கு உணர்வு இருக்காது என்றே நினைக்கிறேன். அது எனக்கு அவசியம் இல்லை என்றும் நம்புகிறேன்.

அது அவசியம் என்று எனக்குத் தோன்றினால் - அதாவது ஒரு இனத்தின் மீது பற்றும் அதன் மீது அக்கறை கொள்வதும் அவசியம் என்றால், நான் சார்ந்திருக்கும் - அல்லது நான் என்ன classificationகளிலெல்லாம் வருவேனோ அந்தந்த வகைகளின் மீது பற்று கொள்வதும் நியாயம்தானோ ? அந்த வகையில் என் ஜாதி மீது நான் பற்று கொள்வதில் தவறொன்றும் இல்லையே. தவறு ஜாதிப் பற்றில் இல்லை - பிற ஜாதி துவேஷத்தில்தான் இருக்கிறது.

அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த இயக்குனர்களுக்கு இந்த உத்வேகம் பீறிட்டுக்கொண்டு கிளம்பியுள்ளதுதான் விந்தை. நெய்வேலி சென்று போராடியது, ஒக்கேனக்கலில் சொதப்பியது, இராமேஸ்வரத்தில் குரல் கொடுத்தது - இம்மூன்றும் தான் என் நினைவுக்கு வருகிறது. ஒருவேளை நல்ல உள்ளத்துடன் தான் இப்படிச் செய்கிறார்களோ ! அவர்கள் உணர்வு அப்படியென்றால் அதை அவர்கள் வெளிக்காட்டுவதில் தவறொன்றும் இல்லை. ஆனால் அவர்கள் கருத்து இந்திய அரசு தடை செய்த ஒரு இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தால் அவர்கள் மீது சட்டம் பாய்வதும் சரியே.

ஆனால், ஒருவிதமான பப்ளிசிட்டி இதற்குக் கிடைத்ததனால் பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இங்கே ஒருவர் இலங்கைத் தமிழருக்காக ஷூ பாலிஷ் செய்து நிதி வசூல் செய்து தருகிறார். ஏனோ இதிலெல்லாம் ஒரு போலித்தனம் ஒட்டிக்கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. பொதுவாகவே உணர்ச்சிவயப்படக்கூடிய நிலையில் தயாராக இருக்கும் நமக்கு இந்த நிகழ்வுகள் பெரும் வியப்பை ஏற்படுத்துவதில்லை. இன்னும் என்னென்ன உணர்ச்சிப் பிழைகள் நடக்க இருக்கிறதோ ... பார்ப்போம்.

ஹ்ம்.. அநியாயமான முறையில் பொதுமக்களை கொன்று கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்தை நிறுத்தச் சொல்லி இலங்கை அரசிடம் இந்தியா கேட்டுக்கொண்டது. இருந்தாலும் தாக்குதல் தொடர்வது கொடூரம். இந்த மடத்தனம் ஓரளவேனும் குறைய, முட்டாள்களின் அலட்சியங்களுக்கும் வெறித்தனத்திற்கும் உயிர்ப்பலி நிகழாமல் இருக்க இறைவன் அருள் புரியட்டும்.

No comments: