எடை குறைக்கும் முயற்சியில் ஒரு ஜிம் சென்று சேர்ந்திருக்கிறேன். (ஜிம் சென்று சோர்ந்திருக்கிறேன் என்றும் சொல்லலாம்). ஆபீஸ் கிளம்பும் அலறலான அந்த அரை மணி நேரத்துக்கு முந்தைய ஒரு மணி நேரத்தை இந்த உடற்பயிற்சி கபளீகரம் செய்வதால், ப்ளாக் பக்கம் வர முடிவதில்லை.
ஒரு நல்ல சுபயோக சுபதினத்தில், ஜிம்முக்கு பணத்தைக் கட்டிவிட்டு ஜிம் போவதற்குத் தேவையான உபகரணங்களையெல்லாம் வாங்கிக்கொண்டும், அந்த காமெடியான டிராக் சூட்டையும் ஷூவையும் மாட்டிக்கொண்டும் உள்ளே நுழைந்தேன்.
ரிசெப்ஷன் வரை மட்டும்தான் அன்பான மனிதர்கள் இருப்பார்கள். அதற்கப்புறம் தசையை எலும்பை வதைக்கும் மெஷின்களும் அதைக் கண்காணிக்கும் மனிதர்களும்தான். நல்ல ஜிலுஜிலு ஏ.சி, டி.வி பொருத்தப்பட்டுள்ள டிரெட்மில்கள், அலறும் இசை என சகல வசதிகள் இருந்தாலும் "வொர்க் அவுட்" செய்யும்போது எல்லாமே துச்சம்தான்.
டிரெட்மில் : ஐந்தரை மணிக்கு பத்துப் பதினைந்து பேர் ஒன்றாகக் கிளம்பி ஒரே இடத்திலேயே நடந்துகொண்டிருப்போம். ஒரு சிலர் வேகமாக ஓடுவர்.. அவர்கள் ஓடுவதைப் பார்க்கும்போதே எனக்கு சில கேலொரிக்கள் குறைவதாகத் தோன்றும். ஒரு சிலர் வெகு காஷுவலாக நடப்பர். ஒரு அரை மணி நேரம் நடையாய் நடந்துவிட்டு இறங்கினால், காலுக்கு அடியில் பூமி சுழல்வதை உணரலாம்.
கொஞ்சம் டிரெட்மில்லை விட்டுத் தள்ளி வந்து கண்ணாடி முன் நின்று தொப்பையைத் தடவிப்பார்த்துக்கொள்வேன். "அரச மரத்தைச் சுத்திவந்து அடிவயித்தைத் தொட்டுப்பார்த்தாளாம்" என்கிற கதையாய், அரை மணி நேரத்தில் தொப்பை குறைந்துவிட்டதா என்று ஊர்ஜிதப்படுத்திக்கொள்வேன்.
ஆனால், கால் நூற்றாண்டுகள் வளர்த்த தொப்பை அரை மணி நேரத்தில் கரைகிறதென்றால் அந்த தொப்பைக்கு என்ன மரியாதை என்று சமாதானப்படுத்திக்கொண்டு சைக்கிள் மிதிக்கப் போய்விடுவேன்.
பார்க்கலாம்..
அதிகாலை நாலரை மணிக்கு விழிப்பு...
ஒரு மணி நேரம் கடும் உழைப்பு
கொஞ்சம் கொஞ்சமாய் கரையுது கொழுப்பு
ஜாலியோ ஜிம்கானா !
2 comments:
Kutti Rangarajanuku kalai vanthanam
Let the fire in you burn all those calories :)
Post a Comment