காலையிலேயே ஓட்டு போட்டுவிட்டேன். அங்கே கைவிரலில் மை தடவ உட்கார்ந்திருந்தவர், சிரத்தையாக ஒவ்வொருவர் நகத்தையும் க்ளீன் செய்துவிட்டு, அதற்குப் பிறகு மை தடவி விட்டார். என்னுடைய முறை வந்த போது, நமுட்டு கடித்துக்கொண்டு நக பாலிஷ் இடுவதுபோல இட்டார். விரல் நுணி முழுவதும் கரு நீலத்துக்கு மாறியது. ஜாதகம் எழுதும்போது ஒரு கணக்கு போடுவார்கள்... அதாவது கர்ப காலத்தில் நாம் கழித்த காலம் என்றும் எஞ்சி இருக்கும் தசா புக்தி என்றும் கணக்கு போடுவார்கள். அப்படி அந்த கர்ப காலத்தில் கழித்த காலம் அத்தனைக்கும் சேர்த்து மை இட்டது மாதிரி இருந்தது, என் இடது கை ஆட்காட்டி விரல்.
பின்னர் மறைவாக வைக்கப்பட்டிருந்த வோட்டு இயந்திரத்தின் முன் நின்று, பட்டனை அமுக்குவதற்கு முன் சாமி கும்பிடவேண்டுமா என்று யோசித்து, பின் ரஜினிகாந்த் சொன்ன "ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது !" என்ற டையலாக் ஞாபகம் வந்து அனிச்சையாக அந்த மூன்றாவது பொத்தானை அமுக்கிவிட்டேன்.
பல கரைவேட்டிகளின் எதிர்காலத்தைத் தீர்மானம் செய்யும் ஒரு காரியத்தில், என் எதிர்காலமும் அதில் அடங்கியிருக்கும் காரணத்தால் கலந்து கொண்டேன். வீட்டிற்குச் சென்று பார்த்தால், கமலஹாஸனுக்கு வோட்டு இல்லை என்று செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது.
அதைப் பார்த்தவுடன் எந்தவிதமான சமுதாயக் கோபமும் ஏற்படாமல், அவரை மாதிரி தாடி வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கேற்றார் போல் தாடியும் கொஞ்சமாக வளர்ந்திருந்ததால், ஒரு அரை மணி நேரப் ப்ரயாசையில் "உன்னைப்போல் ஒருவன்" ஸ்டைல் முகத்தில் தென்பட்டது. தைரியம் உள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்யவும்.
அதன் பின் சிகையை இன்னும் கொஞ்சம் சீரமைத்தால் தேவலை என்று தோன்றி அந்த வேளையில் திறந்திருக்கும் ஒரு சலூனுக்குள் நுழைந்தேன். முடிவெட்ட ஆரம்பித்தவர் பேச ஆரம்பித்தார். "என்ன சார் ! பலம்மா வோட்டு போட்டுட்டீங்க போல.. !" என்றார்.. வேளியே நீட்டிக்கொண்டிருந்த அந்தக் கருநீல விரலை உள்ளே இழுத்துக்கொண்டு, ஆமோதிப்பதுபோல சிரித்தேன்.
"எனக்கு ஓட்டு திண்ணனூர்ல சார்.. காலேல கடைய திறந்துட்டு ஒரு எட்டு கஸ்டமர்ங்கள பார்த்துட்டு, பதினோறு மணிக்கு கடைய சாத்திட்டு அங்கே போய்ட்டு ஓட்டு போட்டுட்டு... திரும்ப வந்து இப்பொதான் கடைய திறக்கறேன்... கரெக்டா நீங்க வந்தீங்க.."
"ஓ.." என்று சொல்லிவிட்டு.. "கொஞ்சம் மீடியமா கட் பண்ணிடுங்க" என்றேன்.
ஒருவேளை என் கம்பெனியில் இன்று லீவு விடவில்லை என்றால் நான் வோட்டு போட்டிருப்பேனா என்பது சந்தேகமே..
சலூன் கடைக்காரர் விடாமல் தான் வோட்டுப்போட்ட அனுபவங்களை அளவளாவிக் கொண்டிருந்தார். தான் எப்போதுமே வெற்றி பெறும் கட்சிக்குத்தான் வோட்டுப் போடுவார் என்றும், இந்த முறையும் அது நடக்கும் என்றும் சொன்னார்.
"அவுரு வந்தாருன்னா, நல்லது செய்வாருங்க.." என்று நம்பிக்கையோடு சொன்னார். அவர் வோட்டின் பிரதிபலன் நாளையிலிருந்தே அவருக்குக் கிடைக்கப்போவது என்ற எண்ணம் அவருக்கு இருப்பதாகத் தோன்றியது. அவரைப் போல எனக்கும் நம்ப வேண்டும் என்று ஆசை.
பைசா கொடுத்துவிட்டு வெளியே வந்தால் அந்த அமைச்சர் தலைக்கு மேல் கைகளால் கும்பிட்டபடி நின்றிருந்த போஸ்டர் தென்பட்டது. சலூனுக்கு உள்ளே பார்த்து சிரித்தேன்.. "போய்ட்டு வாங்க சார் !" என்றார்.
மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது என்பது இல்லை. ஏமாற்றமும் மாற்றமில்லாதது என்று தோன்றியது.
7 comments:
The last line in the article is a class! Well written.
Arun Prashanth
Punch....
saar kalakareenga.
Oru sujatha sirukadhai paditha effect...Piniteenga....Kalakarey keerthi
//
ஒருவேளை என் கம்பெனியில் இன்று லீவு விடவில்லை என்றால் நான் வோட்டு போட்டிருப்பேனா என்பது சந்தேகமே..
//
தேர்தலன்று எல்லா நிறுவனங்களும் விடுமுறை கொடுத்தாக வேண்டாம், மீறினால் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். (இந்த நாட்டில் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா என்பது வேறு கேள்வி)
Arunprasanth, thank you
Sreeka, :0
Lazy, nandri :)
Vas, thank you
Joe, oh !
Wondeful post Keerthi...
//மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது என்பது இல்லை. ஏமாற்றமும் மாற்றமில்லாதது என்று தோன்றியது - impactful lines...
Post a Comment