Thursday, May 28, 2009

சித்தப்பு..

மு.கு. : "சித்தி" படத்தில் பத்மினி உருகிப்பாடும் கண்ணதாசனின் வரிகள் பெண்களின் வாழ்க்கைப்பதிவைக் காட்டி தாலாட்ட வைத்தது. ஆண்களுக்கும் இப்போது கிட்டத்தட்ட அதே நிலைமைதான். ஆகவே என் கற்பனைப் படமான "சித்தப்பு.." படத்தில் வரும் இந்தப் பாடல், எங்கள் ஆண்கள் சமூகத்திற்கு உண்டானது.

ஸ்டார்ட் மீஸிக்..

ஆணாகப் பிறப்பவற்கு கண்ணுறக்கம் இரண்டு முறை..
பிறப்பில் ஒரு தூக்கம், இறப்பி்ல் ஒரு தூக்கம்..
இப்போது விட்டுவிட்டால் எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய சிங்கக்குட்டியே, கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ

காலமிது காலமிது, கண்ணுறங்கு மகனே..
காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகனே..
தூக்கமில்லை மகனே.

நாலு வயதான பின்னே, பள்ளி விளையாடல்..
ஆசானுக்கு பயந்துகொண்டே முட்டிக்கால் போடல்
எண்ணிரண்டு வயதுவந்தால், கண்ணுறக்கம் இல்லையடா
ஏகப்பட்ட சப்ஜெக்டுகள் உயிரை எடுக்குமடா
தீராத தொல்லையடா

மாறும்.. பிள்ளை மனம் மாறும்.. குழப்பங்கள் நேரும்
கன்னிமுகம் கண்டுவிட்டால், கண்ணுறக்கம் ஏதடா
கவிஞன் தானென்று கவிஎழுதச் சொல்லுமடா
தான் நினைத்த காதலியை சேர வரும்போது
காதலியே அதை மறுத்தால், கண்ணுறக்கம் ஏதடா
இரவெல்லாம் கண்ணீர் விட்டு தாடி வளர்க்கனும்டா

ஆபிஸுக்கு போகணும்டா, நாயா உழைக்கணும்டா
லேட் ஹவர்ஸ் போட்ட பின்னே, கண்ணுறக்கம் ஏதடா
மாலையிட்ட மனைவி வந்து மனையில் புகும்போது
பழைய காதலியை இரவோடு மறக்கனுமடா..

ஐயிரண்டு திங்களிலும் (மனைவி) பிள்ளைபெறும்போது
துணையாக நீ இருந்து ஒத்தாசைகள் புரியனும்டா
அழுகிற குழந்தைக்கு டையப்பர் மாத்தனும்டா
அதன் அழகுப் புன்னகையின் சுகத்தை உணரனும்டா

ஊடல்கள், கூடல்களில் குடும்பம் உருளுமடா
சந்தோஷம் ஏமாற்றம் இரண்டும் இருக்குமடா
இரண்டுக்கும் ஒற்றுமையாய் கண்ணுறக்கம் இல்லையடா
கண்ணுறக்கம் இல்லையடா..

கை நடுங்கி கண் சுருங்கி கால்களும் தளரும்
காணாத தூக்கமெல்லாம் பின்பு வந்து சேரும்
வாழ்ந்த வாழ்க்கையை ஓட்டிப் பார்த்தால்,
கண்கள் தானாய் மூடும்.
கண்கள் தானாய் மூடும்..

3 comments:

பிச்சைப்பாத்திரம் said...

nice one. :-)

KRTY said...

சுரேஷ் கண்ணன், நன்றி.

Sreeram said...

Wow; hilarious yet potrays reality... a rare combination... well written Keerthi :-)