சாயம் ஐந்தரை.
ஜன்னல் வழியாக க்ரோம்பேட் ஸ்டேஷன் ப்ளாட்பாரமும், அவசர மனிதர்களின் பரபரப்பும் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. மந்தமான சாயங்கால வேளை. பளீரென்ற வெளிச்சமும் இல்லாமல், இருட்டும் இல்லாமல், விளக்கு போடலாமா வேண்டாமா என்ற குழப்பம் உள்ளடங்கிய மந்தாரச்சாயங்காலம். பொழுதின் இந்த நேரத்தில் உற்சாகம் சுத்தமாகவே இருப்பதில்லை. வெள்ளிக்கிழமைகளில் ஒரு சில பேருக்கு ஒரு வேளை இருக்கலாமோ என்னவோ. ஆனால், பாக்கி நாட்களில்.. ? பாக்கி பேருக்கு ?
குளித்து ஏழு மணி நேரத்திற்கு மேல் கடந்த வியர்வை உடல்கள் ஒன்றோடொன்று கைகள் உராசியபடி, தலைமுடி வியர்வையைப் பகிர்ந்து கொண்டு, துர்நாற்றத்தை காற்றில் தூவி விட்டுக்கொண்டே நகரும் இந்த சாயங்கால வேளைகள் சுகமானதானதாக இருக்க முடியாது. நீண்ட நெடிய பயணத்தின் முடிவில் படுக்கையுடன் வீடு இருக்கிறது என்ற ஆறுதல் ஒன்றுதான் சுகம்.
இரயில் மெதுவாக சென்று கொண்டிருப்பதை, பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த இன்னொரு தண்டவாளம் கோள் மூட்டிவிட்டுச் சென்றது. "இந்த இடம் வந்தாலே ஸ்லோ பண்ணிடறானுங்க.. ப்ச்ச்ச்சேய் !" என்று அலுப்புக் குரல்கள்.. ஒன்றுமே தெரியாவிட்டாலும் ஜன்னல் வழியாக கண்ணைப் பிதுக்கி எட்டிப் பார்க்க முயலும் முகங்கள். யாரும் அந்த நொடிப் பொழுதுகளை சுகமாக அனுபவிக்கவில்லை. எப்படி முடியும்.. அவஸ்தையில் சுகம் காண யாராலும் முடியாது தான்.
என்னால் முடியும் என்று நினைக்கிறேன். இந்த ஐந்து ரூபாய் பொட்டலம் மிக்ஸர், உதடுகளின் ஓரத்தில் காரத்தால் எரியச் செய்தாலும், அடுத்த வாய் கேட்கிறது நாக்கு. க்ஷண நேர நாக்கின் துளி இன்பத்துக்காக பத்து நிமிடம் பரிதவிக்கும் உதட்டோரத்தை நினைத்துப் பார்க்கையில் பல விஷயங்கள் மனதிற்குள் ஓடின. வாழ்க்கையும் இப்படித்தானே.
மிக்ஸர் பொட்டலாமும் காலியாகிவிட்டது. கவரைக் கசக்கி ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். யாரும் பார்த்துவிட்டார்களோ என்ற குற்ற உணர்ச்சி. ஆனால், என்னைச் சூழ்ந்துள்ள இந்த நூற்று இருபது பேர் பார்க்காத சுத்தத்தை நான் மட்டும் கடைபிடித்து என்ன கிழித்துவிடப் போகிறேன். கிழித்துவிட முடியும்.. ஆனால் எனக்குள்ளும் அவர்களுக்குள் இருக்கும் அதே அலட்சியமும் அசுத்தமும் இருக்கிறது. நான் ஒன்றும் அவர்களிலிருந்து வேறுபட்டவனில்லையே.
நான்.
நான் ஒரு சராசரி மனிதன் என்று கூறிக்கொள்வதால் நான் சராசரி மனப்பான்மையிலிருந்து விலகியிருப்பதாக நினைத்து மகிழ்ச்சி அடைபவன்.
தாம்பரம் சானடோரியம் அருகில் இருக்கும் பல சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களில் நானும் ஒருவன். தினம் முப்பத்தைந்து கிலோமீட்டர் பயணம் செய்து அலுவலகம் வந்தடைந்து, ஓயாமல் வேலை செய்து நன்றாக சம்பாதிப்பவன். வீசிங் வரும் என்பதால் புகைப் பழக்கம் இல்லை. சகவாசம் எல்லாம் தயிர் சாத கும்பலுடன் மட்டும் என்பதால் தண்ணியும் கிடையாது. பேச்சுலர்.
எனது சிந்தனை வித்தியாசமானது என்பதில் எனக்குக் கொஞ்சம் கர்வம் உண்டு. இதோ இந்த இரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பவர்கள் யாரும், என்னை மாதிரி அடுத்தவர்கள் என்ன யோசித்துக்கொண்டிருப்பார்கள் என்று யோசிக்கமாட்டார்கள். எனக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் அபாரமான கவலைகள் என்று எதுவும் இல்லை. அதனால், எனது சிந்தனை யோக்யதைகளுக்கு அடிக்கடி போர் அடிக்கும் என்பதால், கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கப் பழகிக் கொண்டேன். பல பேர் என்னைவிட வித்தியாசமாக யோசிக்கக்கூடும் என்ற எண்ணத்தை நான் பெரிதாகக் கொள்வது இல்லை.
இரயில் பயணங்கள் ஒவ்வொன்றிலும் ஏழ்மையைப் பார்த்து வருத்தப்படுவது போல் யோசிப்பது என் வழக்கம். ஸ்வதேஸ் படத்தில் ஷாருக் கானுக்கு ஏற்படும் எண்ணங்கள் என் மனதிலும் தோன்றும். அதில் சிறிதளவேனும் உண்மையான எண்ணங்களாகவும் இருக்கும். பொதுவாக ஒரு பேஸிஸே இல்லாமல் அடுத்தவரைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். அது தவறு என்றும் நினைப்பவன். ஆனாலும் என்னையும் மீறி ஒரு போலித்தனம் என்னுள் ஒட்டி இருப்பதை நான் உணர்கிறேன்.
இப்பொழுது சீட்டின் ஓரமாக ஒடுங்கி இருக்கும் ஒரு வயோதிகரைப் பார்க்கிறேன். அவருக்கு வயது சுமார் ஐம்பத்தி ஆறு இருக்கும். இந்த வயதில் அனேகமாக வேலைக்குத்தான் போய் வருகிறார் என்று நினைக்கிறேன். அது அவருடைய விதி. அவர் மாதம் பூராவும் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை நான் அதிகபட்சம் இரண்டு நாட்களில் சம்பாதித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். எனக்கு வயது இருபத்து ஆறு. இந்த inequality எனக்கு விந்தையாக இருக்கிறது. அதில் லேசாக பெருமைப் படுகிறேன். என்னை விடவும் அதிகமாக இந்த கம்பார்ட்மெண்டில் யாராவது அதிகம் சம்பாதிப்பார்களா என்று நோட்டம் விடுகிறேன்.
அதோ அங்கே ஒருவர் லூயி பிலிப் சட்டை அணிந்திருக்கிறார். லேப்டாப் வைத்திருக்கிறார். ஒரு வேளை என்னைவிடவும் அதிகமாகச் சம்பாதிக்கலாம். ஆனால் அவர் முப்பத்தைந்து வயது கடந்தவர் என்று சமாதானம் அடைகிறேன். நான் அந்த வயதில் மூன்றாம் லூயி பிலிப்பை அணியும் தகுதிக்கு வந்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.
மீண்டும் அந்த வயோதிகரைப் பார்க்கிறேன். அவர் எழுந்திருக்க முற்படுகிறார். அப்பொழுதுதான் ப்ரஞ்ஙை வருகிறது.. இது என்ன ஸ்டேஷனில் வண்டி நிற்கப் போகிறது ? திரிசூலமாக இருக்கவேண்டும். இல்லையே ! ஏர்போர்ட்டைக் காணோமே... சுத்தம். இப்பொழுதுதான் பல்லாவரமே வருகிறது. இன்னும் நாற்பது நிமிடங்கள் இந்த இரயிலில் பயணம் செய்தாக வேண்டும்.
ஒரு கும்பல் முண்டியடித்துக்கொண்டு ஏறுகிறது. பெரும் இரைச்சல். இந்த இரயில் பெட்டிகள் விசித்திரமானவை. கூர்ந்து பார்த்தால் யாரோ இரண்டு மூன்று பேர் தான் பேசிக்கொண்டிருப்பது தெரியும். ஆனால் ஒரே சப்தமாக இருக்கும். இருக்கிறது.
பெண்கள் அனைவரும் முன்னாடி இருக்கும் மகளிர் பெட்டிக்கு விரைகின்றனர். யாரும் மற்ற பெட்டிகளில் பெரும்பாலும் ஏறுவதில்லை. பெண் விடுதலை... தனிமைப் படுத்திக் கொள்ளுதலில்தான் உள்ளது போலும். எனக்கு அது ஒரு சிறை மாதிரிதான் தோன்றும். விருப்பப்பட்டு சிறையில் அடைந்து கொள்வது.
பல்லாவரமும் மெதுவாக ஜன்னலுக்கு வெளியில் நகர்ந்து கொண்டிருந்தது.
அடுத்து திரிசூலம். ஏர்போர்ட். ஏரோப்ளேனில் பயணம் செய்வது எத்தனை சுகம். அதற்கும் ரயிலுக்கும் என்ன வித்தியாசம் ? ஆகாசத்துக்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசம். ஆஹா.. இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன, விமானத்தில் பயணம் செய்து. கம்பெனி செலவில் அனாயாசமாகப் பறந்தது இன்னும் இனிமையான நினைவுகள். இந்த மாதிரி தள்ளு முள்ளு, வியர்வை, நெரிசல் எதுவும் இல்லை.
நான் ஏன் இந்த இரயிலில் இறங்கி ஏரோப்ளேனில் சும்மா ஒரு எட்டு பம்பாய் சென்று வரக்கூடாது ?
எனது யோசனையை நினைத்தால் எனக்கே சிரிப்பாக வருகிறது. ஆனால், என்னோரத்தில் ஒரு பயம் என்னைப்பற்றியே உண்டு. மனதில் கொஞ்சம் பலமாகத் தலைதூக்கும் எண்ணங்களை தடால் என்று செயல்படுத்துபவன். இம்பல்ஸ் என்று சொல்லுவார்களே ! பேராதிக்கத்தோடு அது செயல்படும்போது, என் எதிர்ப்புச் சக்தி செயலிழந்துவிடும் அபாயம் உள்ளது. எட்டாயிரம் ரூபாய் ஆகுமா? அவ்வளவு பணத்தை தூக்க்கி எறிந்து பொழுதை ஓட்டும் பவிசு எனக்கு இன்னும் வரவில்லை. வந்தால் நன்றாக இருக்குமா?
ஒரு கட்டம்போட்ட சட்டை வருகிறார். அங்கேயும் இங்கேயும் இண்டு இடுக்கு இடம் இருக்கிறதா என்று பார்த்தபடியே வருகிறார். மூன்று பேர் அமர்ந்திருக்கும் ஒரு சீட்டுக்குச் சென்று நிற்கிறார். கொஞ்சம் யோசிக்கிறார். "சார் ! தள்ளி உக்காருங்க..." என்று சொல்லி அனேகமாக பக்கத்தில் உட்கார்ந்துவிட்டார். பின்னர், ஏற்கனவே அமர்ந்திருந்த மூன்று பேரும் தன் ஆக்கிரமிப்புகளை குறுக்கிக் கொண்டு இடம் விடுகின்றனர். ஒரு பத்து வினாடிகள் அந்த நால்வரும் தங்கள் இருப்பளவை சமன் செய்துகொள்வதில் செலவு செய்கிறார்கள். இதைப் பற்றி யோசனை செய்து கொண்டிருக்கிறேன். அடுத்தவர் சௌகர்யங்களைப் பற்றி கவலைப்படாதவர். அல்லது, தன் சௌரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் சுயநலவாதியா.. இல்லையே, அங்கே நான்கு பேர் உட்கார முடிகிறதே.. கஷ்டம் என்றாலும்... ஆக அது தர்மம் தானோ ?
பழவந்தாங்கல் வந்துவிட்டது. இங்கே அத்தை வீடு இருக்கிறது. இறங்கிப்போய் பார்த்து வரலாம். அத்தைக்கும் சந்தோஷமாக இருக்கும், பின்னர் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். இரண்டு விநாடிகளில் முடிவெடுக்க வேண்டும். முடியுமா ? முடியும்.. ஆனால், அங்கே போய்விட்டு சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது இதே ரயிலின் கூட்ட நெரிசலை நினைத்துப் பார்த்தால் பயம்மாக இருக்கிறது. வேறு ஏதாவது சனி ஞாயிறில் போய்வரலாம். ஹ்ஹ்ம்ம்.. இப்பொழுது நினைத்தால்கூட முடியும்.. ஆனால், பாசத்தையும், பசியையும் சோம்பேறித்தனம் வென்றுவிட்டது. இந்த சோம்பேறித்தனம் சில சமயங்களில் சுய பச்சாதாபத்தினால் வருகிறது. நம்மைப் பார்த்து பச்சாதாபப்பட யாருமே இல்லையென்றாலோ, அல்லது அதிகம்பேர் நம்மைப்பார்த்து பச்சாதாபப்பட்டலோ, நம்முள் சுய பச்சாதாபம் ஏற்படுகிறது. Self pity kills.
தூரத்தில் பரங்கிமலை தெரிகின்றது. சின்ன வயதில் அப்பாவுடன் பயணிக்கையில் "அப்பா அந்த மலைல பரங்கிக்காய் காய்க்குமா ? அதனாலதான் இந்த ஸ்டேஷனுக்கு பரங்கிமலை பேரா ?" என்று கேட்ட ஞாபகம். ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி ஞாபகங்களில் உழல்வது சுகானுபாவம். ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருக்கும் அனேகம்பேர், அதாவது கையில் தினமலரோ குங்குமமோ இல்லாதவர்கள், பக்கத்து தண்டவாளத்தில் தத்தம் ஞாபக ரயில்களை ஓட்டிக்கொண்டு வருகின்றனர். வயோதிகத்தின் சௌகர்யங்களில் ஒன்று, எந்த விஷயத்தை எடுத்தாலும் அதற்கேற்ப ஞாபகக் கிளைகள் மனதில் முளைக்கின்றன. வாழ்க்கையை ஸ்வாரஸ்யமாக வாழாதவர்கள் என்ன மாதிரி ஞாபகங்கள் வைத்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
கிண்டியில் பாதி ரயில் காலியாகிவிட்டது. எல்லாரும் தங்கள் அடுத்தக்கட்ட பயணத்துக்கு இறங்குகிறார்கள். ப்ளாட்பாரத்தில் அனைவரும் ஓடுவதுபோல நடக்கிறார்கள். படிக்கட்டில் ஏற அவ்வளவு தள்ளுமுள்ளு. என்னதான் நாகரீகம், புத்திசாலித்தனம் உள்ள கூட்டம் என்றாலும் இந்த கூட்ட நெரிசல் என்பது நம் மனித இனத்தில் புதைந்திருக்கும் முட்டாள்தனத்தைக் காட்டுகின்றது. இதே முட்டாள்தனம் மாம்பலம் ரயில் நிலைய மாடிப்படிகளில் நானும் சந்தித்தாகவேண்டும்.
இன்னும் அதிகக் கூட்டம் ரயிலுக்குள் புகுகின்றது. பூந்தமல்லி செல்லும் சில பேருந்துகள் போல, ரயில் ஒருபக்கம் சாய்ந்தார்போல் செல்லுமா என்று கற்பனை செய்து பார்க்கிறேன். அதெப்படி அத்துனூண்டு தண்டவாளம் இத்தனை பெரிய ரயிலை சுமக்கின்றது. உடைந்து ரயில் விழுந்துவிடாதா ? விழுந்துவிட்டால் ? நான் என்ன செய்யவேண்டும். நான் அமர்ந்திருக்கும் பக்கமாக கவிழ்ந்தால், என் மேல் எல்லாரும் விழுவார்கள்.. தலையை மட்டும் பாதுகாத்துக்கொண்டால் போதும் - கை ஃப்ராக்சருடன் தப்பித்துக்கொள்ளலாம். அந்தப் பக்கமாக கவிழ்ந்தால், கொஞ்ச நேரம் ஜன்னல் கம்பியைப் பிடித்து செங்குத்தாகத் தொங்கலாம்.. இடுப்பில் மாட்டிய செல்போன் கீழே விழலாம். அதைப் பாதுகாக்கவேண்டுமா ? சே !! ஏன் இந்த விபரீத எண்ணம்.
நல்லபடியாக வீடு போய் சேரவேணும் காரணீஸ்வரா. சைதாப்பேட்டை வந்தாயிற்று. வாழ்க்கைத் தடுமாற்றங்களில் பக்தி தானாக வந்துவிடுகிறது. சுஜாதாவின் கதையில் படித்தது ஞாபகம் வருகிறது. "நீங்கள் பென்ஸ் காரில் பயனிக்கும்போது பகவத் கீதையும் பதஞ்சலியும் தேவைப்படாது. ஆனால் அந்தக் காரின் டயர் பஞ்சராகி பதைபதைக்கும்போது மனதில் தானாக பக்தி முளைக்கின்றது.." என்பது போல் எழுதியிருந்தார். உண்மைதான். இந்த உண்மை எனக்கு ஏற்கனவே தெரிந்ததா ? அல்லது சுஜாதா சொல்லித் தெரிந்ததா ? நமக்கு ஏற்கனவே தெரிந்த உண்மைகளை நமக்கே உணரவைப்பது ஒரு வித்தை. ஒரு புவியியல் கணக்கை புதிதாகக் கற்றுக்கொள்ளும்போது அதுவரை சத்தியமாக அது நமக்கு தெரிந்திருக்காது. ஆனால், இதுமாதிரி பொதுவான விஷயங்கள் பற்றிப் பேசும்போது "அட.. ஆமாம்லே" என்று யோசிக்கும் விஷயங்கள் நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றன என்று நினைத்துக்கொள்கிறோம். அல்லது நினைத்துக்கொள்வேன்.. அம்மாதிரி என்னை யோசிக்கவைத்த படைப்புக்களை 'யதார்த்தமானவை' என்று பெயரிட்டு என்னை புத்திசாலியாக்கிகொள்வேன்.
அடுத்து வரும் ரயில் நிலையத்தில் இறங்கவேண்டும். யாருடைய காலையும் மிதிக்காமல், கதவை நோக்கி நடக்கிறேன். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவின் மீது நடந்த அந்தக் காட்சி நினைவுக்கு வருகிறது. மேலே பிடித்துக்கொள்ள தொங்கிக்கொண்டிருக்கும் கம்பிகளின் புத்திசாலித்தனத்தை வியக்கிறேன். மாம்பலம் ஸ்டேஷனுக்குள் நுழைந்துவிட்டது. "இறங்குங்க.." என்ற குரல்களோடு சேர்ந்து இறங்கி சில தப்படிகள் நடக்கிறேன். படிகளை நோக்கி.
ஆஹா ! இடுப்பைப் பிடிக்கிறேன். செல்போனைக் காணவில்லை. திருட்டு. ஏமாற்றம். வெட்கம். மிகப்பெரிய அழுத்தம் என்னைப் புதைக்கிறது. வயிறு இறுகுகிறது. இதற்குமேல் என்னால் யோசிக்கமுடியவில்லை.
14 comments:
வித்தியாசமா இருக்கு ..
கதை மாதிரி இல்லாம தினசரி வாழ்க்கையோட ஒரு அரை மணி நேரம் பத்தி சொன்ன விதம் நல்ல இருக்குது .
Note: லேபேல் போட மறந்திட்டியே ....
vidyashankar.very nice,ifeel same wave lenth.
Hi,
In one word, 'wonderful'.
Very insightful observations and wonderful turn of phrases. The images that you are able to whip up are very evocative, smart and gritty. That's what makes the whole writing work.
The context and location drive the larger idea on human predicaments with an understated poignancy.
The title of the post(story/essay/musings) is an intelligent pun.
Just the kind of stuff to travel (in mind) on a Sunday.
:).....
உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்
என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது
இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html
Wow! One person can think and feel all of this? This is what comes to mind...courtesy of Harry Potter 5. Yes, it is amazing all that comes to mind, when you are in a train, all by yourself.
You lost your cellphone for real? I hope it wasn't too expensive of a model.
##இரயில் மெதுவாக சென்று கொண்டிருப்பதை, பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த இன்னொரு தண்டவாளம் கோள் மூட்டிவிட்டுச் சென்றது.##
##நான் ஒரு சராசரி மனிதன் என்று கூறிக்கொள்வதால் நான் சராசரி மனப்பான்மையிலிருந்து விலகியிருப்பதாக நினைத்து மகிழ்ச்சி அடைபவன்.##
##பெண் விடுதலை... தனிமைப் படுத்திக் கொள்ளுதலில்தான் உள்ளது போலும். எனக்கு அது ஒரு சிறை மாதிரிதான் தோன்றும். விருப்பப்பட்டு சிறையில் அடைந்து கொள்வது.##
##அப்பா அந்த மலைல பரங்கிக்காய் காய்க்குமா ?##
##நினைத்துக்கொள்கிறோம். அல்லது நினைத்துக்கொள்வேன்.. அம்மாதிரி என்னை யோசிக்கவைத்த படைப்புக்களை 'யதார்த்தமானவை' என்று பெயரிட்டு என்னை புத்திசாலியாக்கிகொள்வேன்.##
migavum rasitha idangal ivai !!
A classic ending :)
மனுநீதி, நன்றி.
வித்யாஷங்கர், மகிழ்ச்சி
பாலகுமார், டைட்டிலைப் படித்து மகிழ்ந்ததற்கு எக்ஸ்ட்ரா நன்றி, உங்களுக்கு.
ஸ்ரீகாந்த், :)
ஷோபனா, நன்றி. செல்போன் தொலையவில்லை. தொலைத்திருந்தால் எழுதியிருக்க முடியும் என்று தோன்றவில்லை.
சௌம்யா, தங்கள் ரசனைக்கு நன்றி. இவை நானும் அனுபவித்து எழுதியவை.
beautiful!
sowmya already quote panninadhu ellam super!
'யதார்த்தமான' எழுத்து.
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
Another sujatha in development, I think. You have all the qualities to become a great writer. - Rajesh
Ellorum azhagana tamizhla vazthrapothu, naan mattum konjam peter vittuten ninaikirein!
Keerthi what are you waiting for...get serious into writing..We need a sujatha again.
Dude, Get laid! High time.
Post a Comment