Friday, November 13, 2009

ஐமேக்ஸ் அனுபவம்



இங்கே வந்து கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம் பஸ் பிடித்து சினிமா தியேட்டர் செல்லுவது எப்படி என்று. வீட்டுவாசலில் பஸ் ஏறி சினிமா தியேட்டர் வாசலில் போய் இறங்கிவிடலாம். கொள்ளை விலை என்று சொல்கின்றனர். இன்னும் மல்டிப்ளை செய்யாமல் செலவு செய்கிறேன். அப்படி ஒரு பதினைந்து டாலர்கள் செலவழித்துப் பார்த்த படம், "A Christmas Carol"

வால்ட் டிஸ்னியின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப்படத்தில் பல வித்தியாசங்கள் (புதுமைகள் அல்ல). ஏற்கனவே "The Polar Express" படத்தில் வந்தது போல "Performance Capture" முறையை இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்னொன்று 3D. முக்கியமாக IMax. இம்மூன்றினாலும் ஈர்க்கப்பட்டு பஸ்ஸேறி பத்து மைல் கடந்தேன். நம்ம ஊர் சத்யம் மாதிரி 3D கண்ணாடிகளுக்கு இன்னும் அதிகமாக இருபது டாலர் கேட்பார்களோ என்று பயந்தேன். நல்லவேளை, ஒன்றும் கேட்காமல் ஒரு பெரிய கண்ணாடி ஒன்றைக் கொடுத்தார்கள். கண்ணிலிருந்து மேல் உதடுவரை மறைத்து உட்கார்ந்தது கண்ணாடி. மூக்கு கூட வெளியே நீட்டவில்லை என்று நினைக்கிறேன். மரத்தில் மறைந்தது மாமத யானை.

தியேட்டர் எல்லாம் தம்மாத்தூண்டு சைஸில் இருந்தது. அதைவிடக்கொடுமை, ஈ காக்கா இல்லை. ஒரு ஓரத்தில் ஒரே ஒரு வயோதிகர், கஷ்டப்பட்டு டீலக்ஸ் நாச்சோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் இந்தப்படம் 200 மில்லியன் டாலர் செலவழித்து வந்த படம். எந்த லட்சனத்தில் கல்லா கட்டுகின்றனர் என்று புரியவில்லை. நானும் என் பங்குக்கு ஆலப்பினோஸுடன் கூடிய சீஸ் நாச்சோஸை ஒரு கட்டு கட்டினேன்.

ஆனால், இந்த ஐமாக்ஸ் (IMax - Image Maximum) சமாச்சாரம் ஆரம்பமானதும், இரண்டு மணி நேரம் உலகம் மறந்தேன். இந்தப்படத்தின் டைட்டில்கார்டைப் போடும்போது நீங்கள் பறப்பதைப்போல உணர்வீர்கள் - ஐமேக்ஸில் பார்த்தால். கொடுத்த பணத்திற்கான முழு பலனையும் பத்து நிமிடத்தில் அடையலாம். பாக்கிக்கு கொஞ்சம் அரதப்பழைய சார்லஸ் டிக்கன்ஸின் கிருஸ்துமஸ் கதை இருக்கிறது.

பணத்தின்மீது மட்டுமே குறியாக இருக்கும் ஒரு மையப் பாத்திரம். கிருஸ்துமஸுக்கு முந்தைய இரவு, அவரை சந்திக்கும் மூன்று விதமான பூதங்கள். ஒன்னொன்றும் ஒவ்வொரு காலத்தைக் காட்டி பயமுறுத்தி (சொற்ப சில சமயம் நம்மையும்) க்ளைமாக்ஸில் "மெர்ரி க்ரிஸ்ட்மேஸ்" என்று பாட வைக்கின்ற ஒரு மசாலாப் படம். ஆனால், நீங்கள் குழந்தையாக இல்லாமல், டெக்னாலஜியை ரசிப்பவராக இருந்தால், உங்களை வெகுவாகக் கவரக்கூடிய படம்.

3டி இருந்தால், அதில் சென்று பார்க்கவும். ஐமாக்ஸ் இருந்தால் அவசியம் ஐமாக்ஸில் பார்க்கவும்.

1 comment:

மனுநீதி said...

2012 imax version paathiya?