Friday, January 01, 2010
களி & சாம்பார்
ஜனவரி ஒன்று - ஆருத்ரா தரிசனம் என்று அம்மா சொன்னவுடன், களி & சாம்பார் ஞாபகம் வந்தது. ஞாபகம் வரும்போதெல்லாம் பெருமூச்சு வருகிறது, இங்கே அமெரிக்காவில் (அமெரிக்காவில் இருந்து ப்ளாக் எழுதினால், குறைந்தபட்சம் மூன்று முறை அமெரிக்கா என்ற வார்த்தை இடம்பெற வேண்டும் என்பது சட்டம்).
புது வருடத்தை ஒரு விஷப்பரிட்சையுடன் (சரியாகச் சொல்வதானால், பலகாரப் பரீட்சை) ஆரம்பிக்க தீர்மானித்தேன். அம்மா ஸ்கைப்பில் சொல்லச் சொல்ல டேலஸ் நகரத்தின் ஒரு மூலையில் திருவாதிரை களி தயார் ஆனது. அக்டோபர் மாதக் கடைசியில் அமெரிக்கா (அப்பாடா, மூன்று முடிந்தது) வந்ததிலிருந்துதான் என் சமையல் ப்ரதாபங்கள் ஆரம்பம். ஆனால், அது ஒரு இனிமையான + வெற்றிகரமான நிகழ்வாகிக்கொண்டிருப்பதை நினைத்தால் மகிழ்வாக இருக்கிறது.
நியூ யார்க் ஏர்போர்ட்டில் ஆரம்பித்தது அதிர்ச்சி... சென்னையில் ஹோட்டலுக்குள் மெனு கார்டை படிக்கும் பழக்கம் அவ்வளவாக எனக்கு இல்லை. உத்தேசமாக "தோசை" என்று சொன்னால், "சாதா தோசையா ?" என்று கேட்பார். "வேற என்ன தோசை இருக்கு" என்று புத்திசாலித்தனமாக கேட்டால், தமிழ் நாட்டின் ஜாதி எண்ணிக்கையை விட அதிகமான வகைகளை பட்டியலிடுவார். அவர் ஒப்பிக்கும் வேகத்தில் மனதிலேயே தோசை வார்த்துப் பார்ப்பேன்.. மனம் அலைபாய ஆரம்பிக்கும்... எதை எடுப்பது, எதை விடுவது... நூற்றுக்கு எண்பது தடவை, வெயிட்டர் கடைசியாகச் சொன்ன தோசை ஜாதியைத் தான் ஆர்டர் செய்வேன்.. "இந்த ஹோட்டல்ல கோபி மசாலா தோசை நல்லா இருக்கும்" என்று சொல்லிக்கொள்வேன்.
நியூ யார்க்கிலிருந்து டேலஸுக்கு போகக் காத்திருந்த வேளையில், பசித்தது. அங்கே இருந்த ஒரு கடைக்குள் நுழைகையில், என்ன வாங்கலாம் என்று யோசித்தேன். அந்த நிமிடத்தில் இருந்து "வெஜிடேரியன்" என்பது எனது முக்கியமான அடையாளம் ஆனது. நம்ம ஊரில், எந்த மாமிச உணவாக இருந்தாலும் , அதற்கு ஈக்குவெலண்ட் காய்கறி உணவு வகை உண்டு.. என் நண்பன் சிக்கன் 65 வாங்கினால், நான் கோபி 65 வாங்குவேன். ட்ரேகன் சிக்கனுக்கு ட்ரேகன் பொட்டேட்டோ... என்று போட்டிக்குப் போட்டி ஐட்டம் இருக்கும்.. இங்கேயும் அப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து, மேலே பட்டியலிட்டிருந்த உணவு வகைகளின் பெயர்களை எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன். "பேக்கன், பீஃப், சிக்கன், ஸ்டீக், பெப்பரோனி, போர்க், ஷ்ரிம்ப்" இவை இல்லாத உணவுவகைகளே காணோம். ஒன்று இரண்டு இருந்தது.. அவைகளை நம்ப மனம் மறுத்தது. ஒரு ஹெர்ஷீஸ் சாக்லேட் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். "இனிமேல் சமைக்க ஆரம்பிக்க வேண்டும்".
என் நண்பன் நன்றாகச் சமைப்பதால், ஒரு தமிழனின் அடிப்படைத் தேவைகளான சாம்பார், ரசம், கூட்டு , கறி எல்லாம் நிம்மதியாகக் கிடைத்தன. அவனிடம் குருகுல வாசம்.. காய்கறி நறுக்கிக் கொடுப்பது.. சாதம் வடிப்பது... காப்பி போடுவது என்று ஒத்தாசையாக செய்து கொண்டிருக்கிறேன்.
திடீரென்று ஒரு நாள், பெரும் விஞ்ஞானிகளுக்குத் தோன்றும் ஒளிக்கீற்று எனக்குள் தோன்றியது.. ஐஸக் நியூட்டன் ஒரு ஆப்பிளைப் பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்தாரோ, அதே மாதிரி. என் விஷயத்தில் அது ஒரு பீட்ரூட். இதை வைத்து அல்வா செய்யலாமே, என்று எண்ணம் - சபலம் - ஆசை - பேராசை - திட்டம் - முடிவு போன்ற பல கட்டங்களைத் தாண்டி செயலில் இறங்கினேன். இரண்டு மணி நேர முதலீட்டில் என் வாழ் நாளின் முதல் அல்வா "பொளுக்" என்று இனிப்பாக சத்தம் போட்டது. அட்டகாசம்.
அன்றிலிருந்து இன்றுவரை என் சமையலறை சகாப்தத்தில் வெளிவந்த சக்ஸஸ்ஃபுல் ஐட்டங்கள்
- ரவா உப்மா
- பீட்ரூட் அல்வா
- ரவா கேசரி
- பால் பாயசம்
- பயத்தம் பருப்பு பாயசம்
- சர்க்கரைப் பொங்கல்
- வெண் பொங்கல்
- புளி கொஸ்து
- வெஜிடபிள் மேகி
- குடமிளகாய் / கேரட் / உருளைக்கிழங்கு கறி
இப்பொழுது, களி & சாம்பார்.
தனி ஒருவனுக்கு உணவில்லையேல், ஜகத்தில் சமைத்திடுவோம் !
நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்த புதிய ஆண்டு, மகிழ்ச்சி நிறைந்ததாக அமையட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Happy new year to you too and may you accomplish a lot in work and in kitchen too :) Kali looks good.
So koodiya seekiram oru recipe blog ethirpaakalaamnu sollu ;)
நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்த புதிய ஆண்டு, மகிழ்ச்சி நிறைந்ததாக அமையட்டும்.
- You too sir.
Post a Comment