"கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று எப்போதோ படித்த / கேள்விப்பட்ட ஒரு வாக்கியம் டேலஸ் செல்வதற்கு முன் நினைவுக்கு வந்தது.. உடனே நண்பனிடம் தொலைபேசியில் கேட்டேன்..
"டேய்.. நான் இருக்கப்போற வீட்டுக்குப் பக்கத்துல கோயில் ஏதாச்சும் இருக்கா ? "
"ம்ம்.. இருக்கே !"
"ஆஞ்சனேயர் கோயில் ?"
"இருக்குடா.. நீ தோசைக்கல்லும் மிக்சியும் மறக்காம எடுத்துண்டு வா" என்று போனை வைத்துவிட்டான்.
இங்கே வந்து பார்த்தபோது, நல்லவேளையாக நிறைய கோயில்கள் இருக்கின்றன. Dallas / Fortworth - DFW Hindu Temple Society என்று ஒரு பெரிய கோயில் இருக்கின்றது. (பார்க்க படம்)
இங்கே சகல விதமான தெய்வங்களும் சங்கமித்து அருள்பாலிக்கிறார்கள். வட இந்திய சாமிகளுக்கு வாசலில் ஜிப்பாவும் சாக்ஸும் மாட்டிக்கொண்டு "பண்டிட்"கள் பாதாம் பருப்பும், முந்திரிப்பருப்பும் (அவ்வப்போது மோதி லட்டுவும்) ப்ரசாதம் தருகிறார்கள். நம்ம ஊர் சாமிகளுக்கு பனியன் போட்டு பஞ்சக்கச்சம் கட்டிக்கொண்டு குருக்கள் மாமா இருப்பார். பெரும்பாலும் நம்ம ஊர் ஆட்கள்தான் வேதம் சொல்லிப் பார்த்திருக்கிறேன். இந்தக் கோயில் நல்ல ப்ரசித்தி.. ஆரத்தி, மற்றும் முக்கிய நாள் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் தவறாமல் நடைபெறும். ஃப்ரீயாக கேலண்டர் கொடுக்கிறார்கள். இங்கே பெரிய பார்க்கிங் இடம் இருந்தாலும் சனி ஞாயிறில் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம். கூடிய சீக்கிரம் "டிரைவ் இன் தர்ஷன்" என்று கண்டுபிடிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை..
இது தவிர "ஸ்ரீ கணேஷ் டெம்பிள்" என்ற கோயில் ப்ளேனோ என்ற இடத்தில் இருக்கிறது.. "காரிய சித்தி ஹனுமான்" என்ற கோயில் சனி ஞாயிறில் அன்னதானத்தோடு ஃப்ரிஸ்கோ என்ற இடத்திலும், இர்விங் / ப்ளேனோ இடங்களில் நம்ம ஷீரடி சாயிபாபா கோயிலும் இருக்கின்றன. வெப் சாப்பல் ரோடில் ஒரு சத்ய நாராயணர் கோயில் இருக்கிறது.
சில வட இந்தியக் கோயில்களுக்கு செல்வதில் என்ன ப்ரச்சனை என்னவென்றால், அங்கே எப்படி சாமி கும்பிடுவது என்றே தெரியாது. வெள்ளை வெளேர் சலவைக்கல்லில் சாமி அழகாக இருந்தாலும், பழக்கம் இல்லாததால்,... "ஹாய் ஹவ் ஆர் யூ ! நைஸ் மீட்டிங் யூ !!" என்று வெளியே வந்து விடுவேன்.. என் வழக்கத்தில் தீபாராதனை காமித்தால்தான் முகம் தெரிய வேண்டும்..
இங்கே பெரும்பாலான கோயில்களில் "ஆரத்தி" பாடுகிறார்கள். எல்லாருக்கும் ஸ்லோகங்கள் அச்சடித்த பேப்பர்களைக் கொடுத்து பாட வைத்துவிடுகின்றனர். கோரஸாகப் பாடினால் குரல் வளம் கிண்டலக்கப்படாது என்ற தைரியத்தில் பக்தி மார்க்கத்தில் பயணிக்கலாம்..பயணத்தின் முடிவில் ப்ரசாதம் நிச்சயம்.
தட்சனையாக தட்டில் பெரும்பாலும் "ஒரு டாலர்" நோட்டு போடப்படும். பத்து டாலர் அரிது.. ஃப்ரிஸ்கோ ஆஞ்சனேயர் கோயிலில் $25000 க்கு மேல் உபயமளித்தவர்களும் இருக்கிறார்கள்.
அங்கே இருக்கும் பெரியவர்கள் குனிந்து நிமிர்ந்து சேவை செய்கிறார்கள். அனைவரும் உட்காருவதற்கு ஒரு குஷன் மேட் இருக்கிறது.. (எதற்கென்று தெரியவில்லை). அதை எல்லாருக்காகவும் போட்டு விடுகிறார்கள். எழுந்து சென்றவுடன் எடுத்து ஓரமாகப் போடுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் கையில்தான் ப்ரசாதம் இருக்கும்.
"நீ எல்.ஏ பஞ்ச்சாபகேசன் பையனா ?"
"இல்லையே நான் டெக்ஸாஸ் தாண்டினது கிடையாது.. "
"ஓ !.. எல். ஏ வுல உங்களைப் பார்த்தாமாதிரி ஞாபகம்.. இங்க வரதுக்கு முன்னாடி அங்கேதான் இருந்தேன்.. "
"ஓ !! ஓ.கே.. இன்னும் கொஞ்சம் தயிர் சாதம் போடுங்கோ !" என்று தட்டைக் காமிப்பேன்..
எல்லா இடங்களிலும் இப்படித்தான் நிலமையா என்று தெரியாது.. ஆனால், டேலஸைப் பொறுத்த மட்டில், கோயில் பஞ்சமே இல்லை.
இந்தியா திரும்புவதற்குள் ஹூஸ்டன் கோயிலுக்கு சென்றுவிட வேண்டும் என்று ஆசை.. மீனாக்ஷி அருள் புரியட்டும் பார்க்கலாம்.
1 comment:
neraya church gallil .. driving darshan parthriukkiren
Post a Comment