Thursday, June 16, 2011

Distilled Waters

சென்னை பைபாஸ் என்றொரு நெடுஞ்சாலை இருக்கிறது. புழலுக்கும் தாம்பரத்துக்கும் இடையே சென்னையை வேண்டா வெறுப்பாய் புறந்தள்ளி நீட்டிக்கொண்டிருக்கும் இந்தச் சாலையில், அம்பத்தூர் இடுக்கு வழியாக உள்ளே நுழைந்து தினமும் தாம்பரம் செல்கிறேன், பணம் சம்பாதிக்க. செவ்வாய் அன்று ஸ்கூட்டரை உதைத்து தாம்பரத்திலிருந்து வீடு நோக்கி முப்பது கிலேமீட்டர் தீர்த்த யாத்திரை (அதாவது பெட்ரோல் தீர்த்த யாத்திரை) யைத் தொடங்கினேன்.

தாம்பரத்திலிருந்து புறப்பட்ட நானும், கார்மேகத்திலிருந்து புறப்பட்ட இரண்டேமுக்கால் கோடி மழைத்துளிகளும் வெளிப்படையாக மோதிக்கொண்ட இடம் திருநீர்மலை. ஹெல்மெட்டுக்கடியில் காதுகளின் ஓரம் கிசுகிசுப்பாய் பாடிக்கொண்டிருந்த பேலா ஷேண்டே கொஞ்சம் பதற்றமானார். அப்புறம் ம்யூட் ஆனார்.ஒவ்வொரு மழைத்துளியும் பாராங்கல்லாய் பறந்தன. எனது ஹோண்டா ஆக்டிவா மணிக்கு எண்பது கிலோமீட்டர் வேகத்தில் சென்றிருந்ததாலும் மழைத்துளி உத்தேசமாக 9.8 மீட்டர் பர் செக்கண்ட் என்ற கணக்கில் விழுந்து கொண்டிருந்ததாலும், அந்த மோதல் மிகவும் வலிமையாக இருந்தது.. அதாவது, எனக்கு வலித்தது. சுரீர் சுரீர் என்று கூர்மையான ஈட்டிகள் போலப் பாய்ந்து தோலைத் துளைக்க எத்தனித்தன.

சென்னை பைபாஸ் சாலையில் ஒதுக்குப்புறம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை. ஓரமாக ஒரு பப்ஸ் கடையில் நிறுத்தி மழைக்கு ஒதுங்கிய சாக்கில், ஒரு வெஜிடபிள் பப்ஸையும் இன்னபிற சமாச்சாரங்களையும் கபளீகரம் செய்து மழை நிற்காது என்று அரைமணி நேரம் கழித்து உறுதிப்படுத்திக்கொண்டு நனைந்தபடியே செல்வது வழக்கம். ஆனால், இந்தச் சாலையில் அது நடக்கப்போவது இல்லை. அப்போது சம்பந்தமே இல்லாமல் இரண்டு மகாபாரத நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன.

குருக்ஷேத்திரத்தில் காண்டீபன் எய்த அம்புகள் மழையாய் எழுந்து பீஷ்மர் உடம்பைத் துளைத்தது முதலில் நினைவுக்கு வந்தது. அதுவும் குறிப்பாக பி.ஆர். சோப்ரா ஞாயிற்றுக்கிழமைகளில் காண்பித்த மகாபாரதத்தில், அம்புகள் புறப்பட்டு சுமார் இருபது மாத்திரை அளவுக்கு வானத்தில் பறந்து வர்ண ஜாலங்கள் காட்டி புகைகக்கி, நெருப்பு உமிழ்ந்து, நீர் தெளித்து பொறி பறந்து கடைசியாக பீஷ்மரின் மார்புக் கவசத்தைத் துளைத்து நிற்கும். தனியாக காலியாக இருக்கும் நீண்ட நெடிய சாலைகளில் செல்கையில் இம்மாதிரி கற்பனைகள் கைகொடுக்கின்றன. அந்த நிமிடத்தில் பீஷ்மர் அம்பு மழையில் நனைவதைப்போல எனக்குத் தோன்றியது.. பீஷ்மர் மாதிரியே வாயைத் திறந்தால் வாயில் நீர் தெளித்தது.. ரியர் வ்யூ மிரரைப் பார்த்து "ஆயுஷ்மான் பவ: !" என்று தனக்குத்தானே ஆசிர்வதித்துக்கோண்டேன்.

இனிமேல் நனைவதில் தடையில்லை. ஆனால், மடியில் கனம். செல்போன், வாட்ச், பர்ஸ் போன்ற வஸ்துக்களை ஓரமாக இறங்கி வண்டிக்குள் வைத்தேன். ஹேராம் படத்தில் கமலஹாசன் காசிக்குப்போய் சன்யாசம் வாங்குவாரே.. அந்த மாதிரி, ஒரு பற்றற்ற நிலை.. இனிமேல், இழப்பதற்கு ஏதும் இல்லை.. "ஏகம் நித்யம் விமலம் அசலம் சர்வதே சாக்ஷி பூதம் !" எல்லாம் அந்த திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப்பெருமாள் காப்பாற்றுவார் என்று total surrender ஆகிவிட்டேன். பரிபூரண சரணாகதி.. ! த்ரௌபதி துகிலுரியப்பட்டபோது இரண்டு கைகளையும் இழுக்கப்பட்ட புடவையைப் பிடித்து இழுக்காமல், சரணாகதியாய் மேலே தூக்கி அந்தப் பரம்பொருளைப் ப்ரார்த்தனை செய்தாளே !! Now thats what i call a total surrender !

அப்படி ஒரு நிலை.. ஓரத்தில் தேங்கியிருந்த நீரை அரக்கத்தனமான வேகத்தில் வந்த லாரி வான்மார்க்கமாக தெளித்து, அருவியில் குளிப்பாட்டுவது போல் குளிப்பாட்டிவிட்டுச் சென்றது.. சாதாரணமான நாளாக இருந்திருந்தால் கோபம், அருவறுப்பு எல்லாம் வந்திருக்கும்.. இப்போது சிரிப்பு வந்தது.. பேரின்பமாய் இருந்தது.. கட்டுப்பாடற்ற எல்லையற்ற கவலையற்ற நிலை.. சட்டை பேண்ட் எல்லாம் தாண்டி உள்ளாடைகள் வரை தொப்பமாய் நனைந்தாகிவிட்டது.. ஹெல்மெட்டுக்குள் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று கேட்டது அனேகமாக ப்ரமைதான்.

மழை விட்டது. வீடு வந்து சேர்ந்தபோது, ஈரம் பிசு பிசுவென உடம்பில் ஒட்டியது கடுப்பாக இருந்தது. !

No comments: