Saturday, June 16, 2007

தம்பட்டம்

கடைத்தெருவில் இருந்து வந்தார் சாமா. விசாலம் சொம்பில் ஜலம் எடுத்து வந்தாள்.. "எங்கேன்னா போயிருந்தேள்.. இத்தனை நாழி ! ஒரே கவலையா இருந்துது.."..

பதில் வரவில்லை. ஊஞ்சலுக்கு சென்றமர்ந்தார். இரண்டு வெற்றிலையை காம்பு கிள்ளி சுண்ணாம்பு தடவி வாயினோரம் மடித்து வைத்துக் கொண்டார்.

"அச்சச்சோ.. சீவல் தீர்ந்து போச்சே" என்று அப்போது தான் ஞாபகம் வந்தது விசாலத்திற்கு. ஸ்டோர் ரூம் ரேழியிலிருந்த மஞ்சப் பையில் இருந்து பன்னீர்ப் புகையிலையை பிரித்து ஊஞ்சல் வெற்றிலைப் பெட்டிக்குள் நிறப்பினாள்.. சாமா முறைத்தார். "முன்னாடியே ஞாபகம் வேண்டாம் ?" என்று சுள் என்று அதட்டினார். பதில் பேசாமல் மாமி முற்றத்திற்கு சென்று பத்து பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தாள்..

"இங்கே வாடி.. " என்றார் சாமா, பெல்ட்டை உருவியபடியே.... விசாலம் பயத்துடன் தூணுக்குப் பின் இருந்து பார்த்தாள்..

"கார்த்தால வாசக்கதவுல கால் இடுச்சிண்டியாமே.. நல்லா தடவி விடு.. சூடு பறக்க தடவனும். தெரிஞ்சுதா..." என்று அதட்டியபடியே பெல்ட் பர்ஸினுள் வாங்கி வந்திருந்த ஐயோடெக்ஸ் டப்பியை கையில் திணித்தார்.

விசாலம் மாமிக்கு தன் கணவரைப்பற்றி தம்பட்டம் அடிக்க இன்றைக்கும் ஒரு விஷயம் கிடைத்துவிட்டது.

No comments: