Monday, June 02, 2008

ஹே ராம் !!

கொஞ்சம் தசாவதாரத்துக்கு ஓய்வு கொடுப்போம். அடுத்த வாரம்தானே ஆரம்பம். அதற்குள் வேறு தேதி அறிவிக்காமல் இருந்தால் நல்லது. ஜூன் பதிமூன்றாம் தேதி (Friday the 13th) ரிலீஸ் என்ற செய்தியைப் படித்துவிட்டு அப்பா கேட்டார், "என்னடா, பத்து சமாச்சாரம் பதிமூனாம் நாளைக்கு ரிலீஸாமே ? ". ஹூஹ்!!!

கமல்ஹாசன் ஆர்குட் கம்யூனிட்டியில் அடிக்கடி (எனக்கு) உபயோகமான செய்திகள் கிடைக்கும். நேற்று அதில் நுணிப்புல் மேய்ந்து கொண்டிருந்தபோது, "ஹே ராம்" படத்தில் வரும் யானைக் காட்சிகள் பற்றி ஒரு போஸ்ட் படித்தேன். ஹே ராம் படத்தின் தீவிர அபிமானியான எனக்கு, அந்தக் காட்சியில் ஆர்குட் நண்பர் புரிந்துகொண்டது தவறு எனப்பட்டது. அவருக்கு பதில் எழுதலாம் என்று ஆரம்பித்தால், முழுவதையும் விளக்க வேண்டும். என் சொந்த இடத்தில் செய்துகொள்ளலாம் என்று இங்கே வந்துவிட்டேன்.

கல்கத்தாவில் நடக்கும் காட்சிகள் :

அஸ்யூம்ட் சீன் #1
----------------------------
ஒரு யானை இருக்கிறது. அதை வழி நடத்திச் செல்ல ஒரு யானைப் பாகன் இருக்கிறான். அவன் கையில் ஒரு அங்குசம் வைத்திருக்கிறான். யானை அங்குசத்தின் அசைவுகளுக்குக் கட்டுப்பட்டு சமர்த்தாக இருக்கிறது.

சீன் #2
----------------------------
கலவரம் நடக்கும் நாள்: யானைப் பாகன் கொல்லப்படுகிறான். ஆனால் இறக்கும் தருவாயில், தெரிந்தோ, தெரியாமலோ அங்குசத்தை சீர் நேராகக் கையில் பிடித்தபடி இறக்கிறான். யானை இன்னும் அந்த அங்குசத்துக்குக் கட்டுப்பட்டு தன்னைச் சுற்றி கலவரங்கள் வெடித்தாலும், அசையாமல் அங்கே நிற்கிறது.

சீன் #3
----------------------------
இன்னுமொரு நாள். யானை தெருவில் நடந்து செல்கின்றது. மக்கள் அனைவரும் பதறித் தெரித்து ஓடுகிறார்கள். ஆனால், யானைக்கு மதம் பிடிக்கவில்லை. அதன் துதிக்கையில் அங்குசம் வைத்துக்கொண்டு உயர்த்திப் பிடித்து, ஓடும் மக்களை நோக்கி ஆட்டுகின்றது.


அதாவது, ஒரு அங்குசம் என்ற கட்டளையின் கீழ் பணிந்து கிடந்த யானை, இனிமேல் தனக்கு கட்டளையிட யாரும் இல்லையாதலால், அதே அங்குசம் என்ற கட்டளையை எடுத்து, தான் எப்படி அடங்கியிருந்தோமோ அவ்வாறுதான் மக்களும் அங்குசத்திற்கு அடங்குவர் என்ற நம்பிக்கையில், யானை அங்குசத்தை வைத்துக்கொண்டு மக்களை துரத்துகின்றது.

இந்திய நாடு பிரிட்டிஷ் அரசாட்சிக்கு அடிபணிந்து இருந்து, பின்னர் விடுபட்டு சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்தக் காட்சி வருகின்றது.

புரிந்துகொள்வோர் புரிந்துகொள்க !!

ஹே ராமில், அவசியம் புரிந்துகொள்ள வேண்டிய காட்சிகள் ஏராளம்.

2 comments:

Anonymous said...

படைப்பை அணுகுவதுக்கு எழுத்தாளனின் நோக்கம் முக்கியமாக கருதுவதே தவறு என்று சொல்லும் இலக்கிய விமர்சக சித்தாந்தம் உண்டு. அவர்கள் இதை "Intentional Fallacy" என்று சாடுவார்கள். படைப்பு கலைஞனின் கையை மீறி அர்த்தபுஷ்டியுடன் வளர்ந்துவிடக்கூடியது என்று நம்புபவர்கள்.

படைப்பாளி என்ன நோக்கத்தில் இதை செய்தான் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் கலையை ஒரு வித புத்திசாலித்தனமான புதிருக்கு விடை காணும் ஆட்டம் போல் மலிவாக்கிவிடும் என்று குற்றம் சாட்டுவதுண்டு.

ஆனால் 'என்னதான் இருந்தாலும்' படைப்பாளியின் நோக்கத்தை தெரிந்துகொண்டு அத்துட்டன் நமது புரிதல்களை validate செய்துகொள்ள விழைவது இயல்பே. அதில் ஒரு குறுகுறுப்பும், திருப்தியும் உண்டு. அதை இத்தகவல் உங்களுக்கு தரும் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்:

2000ல் மதனுடன் ஒரு கமல் பேட்டி: "இந்தியான்னு சொன்னதும் நமக்கு ...ஒரு யானை நியாபகம் வருதில்லையா....அந்த இமேஜை யூஸ் பண்ணிக்கிட்டோம்.

யானைக்கு மதக்குறியீடுகள் இருக்கு, பாகனுக்கு காண்பிக்கப்படலை. அவன் இறந்ததும் யானை என்ன செய்யுறது-ன்னு தெரியாம நிக்கிது....விடுதலையை நாடு நெருங்குறப்ப, அடுத்த காட்சியில் அங்குசம் யானை கைக்கே போயிடுது.. அதை வச்சுகிட்டு அது செய்யப்போறது என்ன...(shrugs)

தருமி said...

உங்களின் கவனிப்பும், 'வாசிப்பும்' அழகு.

எனக்கு இவ்வளவெல்லாம் தோன்றவில்லை.ஆனால் குணா படத்தைப் பொறுத்தவரை என் 'வாசிப்பு' வித்தியாசமாக இருந்ததை நண்பர்களுடனான விவாதங்களில் புரிந்து கொண்டேன்.