ரவா லாடு (அல்லது ரவா லட்டு) ஒரு சாந்த சொரூபமான இனிப்புப் பண்டம். ஃபிலிம் காமித்துக்கொண்டிருக்கும் ஸ்வீட்டுகளுக்கு மத்தியில், அமைதியாக அப்பிராணியாக உட்கார்ந்து கொண்டிருக்கும். இலுப்பச்சட்டியில் கம்பிப் பதம் வந்து கரண்டியில் புரண்டு நெய் கக்கி டால்டா முழுங்கி பொளுக் பொளுக் என்று கொப்பளம்வந்து டிரேயில் விரிந்து வில்லை வில்லையாகும் பல ஸ்வீடுகளைப் போல் இல்லாமல் ரவா லட்டு செய்வது மிக மிக சுலபம். வெறும் சர்க்கரைப்பொடியும் அதிர்ஷ்டவசமாக அகப்படும் முந்திரிப்பருப்பின் சுவை மட்டும் மேலோங்கி, நாக்கில் இன்ஸ்டண்டாக கரையும் ரவாலட்டை, அரை பத்தி கூடத் தாண்டாத இந்த ப்ரிபரேஷனைப் படித்து செய்து பார்க்கவும். சுபம்.
ஆன் தி கான்ட்ரரி, மற்ற இனிப்புகளைப்போல் அல்லாமல் ரவா லட்டை சாப்பிட சில ப்ரோட்டோகால்கள் உண்டு. விருந்தினர் வீட்டுக்குச் சென்று அவர்கள் தரும் இனிப்புப் பண்டங்களை நுணிப்புல் மேய்வது போல மைசூர்பாக்கின் ஒரு மூலையை விண்டு, பாதுஷாவை பாதியாகப் பிளந்து, ஸ்பூனால் குலாப் ஜாமூனை குரூரமாக வெட்டி பாக்கியை அப்படியே தட்டில் மீதம் வைப்பவர்களுக்கு ரவா லட்டு ஒரு சேலஞ்ச். ஏன் ?
பிடிப்பவர்களின் கை வாகினுக்கு ஏற்ப ரவா லட்டின் உருண்டை வடிவம் வேறுபடும். சில பேர் உப்பு கொழுக்கட்டை பிடிப்பது போல பிடித்து வைத்து, பார்ப்பதற்கு ஏண்ட்ரோமீடாவின் ஏலியன் ஷிப் போல காட்சி தரும். தட்டிலிருந்து எடுக்கும் போதே இவைகளெல்லாம் உடைந்துவிடும். ஜாக்கிரதை. சரி.. தட்டில் எப்படி வைத்தார்கள் என்பதெல்லாம் ஒவுட் ஓஃப் ஸ்கோப்.
தட்டிலிருந்து ஒரு முழுமையான ரவா லட்டை எப்படி எடுப்பது ? விரல்களை விரித்து உள்ளங்கையை முறைத்துப்பார்க்கவும். சுண்டுவிரலையும் மோதிரவிரலையும் முழுவதுமாக மடக்கவும். நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் ஒரே விரலாக பாவித்து ரவாலட்டின் தலையின் நடு மண்டையில் லேசாக படும்படி வைக்கவும். கட்டை விரலை முடிந்த அளவு அடிப்பாகத்தில் வைத்து இலகுவாக தூக்கவும். நிற்க.
மூன்று விரல்களில் கொடுக்கும் ப்ரெஷர் மிக மிக முக்கியம். அதிகமாகக் கொடுத்தீர்களோ, தொலைந்தீர்கள். ரவா லட்டு ஒரு சூசைட் பாமாக மாறி சிதறி தட்டைத் தவிர பாக்கி இடங்களில் விழுந்து விடும். சோ ! பிறந்த குழந்தையின் கைவிரல்களை எப்படி வருடிப்பார்போமோ, அந்த அளவு ப்ரெஷர் கொடுத்து வாயின் வாசல் வரை, கண்டெயினர் தூக்கும் க்ரேன் போல எடுத்து வாருங்கள். இனிமேல் தான் க்ளைமேக்ஸ்.
உங்கள் பல்வரிசை எப்படி ? முன்னம் பற்கள் இரண்டும் விடைப்பாக இல்லையென்றால், ரவா லட்டு உங்களுக்கான பலகாரம் இல்லை. அமைதியாக திரும்பவும் தட்டில் வைத்து விடவும். "ஹெ ஹெ ! எனக்கு அவ்வளவாக ஸ்வீட் புடிக்காது" என்று வழிந்து கொள்ளவும். பாக்கிபேர், வாயை அகலமாக திறக்கவும். உருண்டையின் கால்பாகத்து மேல் வாயில் நுழைந்ததும், மேல் பற்கள் இரண்டினால் மிக மிக லேசாகக் கடிக்கவும்.
அவ்வளவுதான் ! சூப்பர். இனிமேல் ரவா லட்டு பார்த்துக்கொள்ளும். அழகாக ஒரு பகுதி தானாக விண்டு உங்கள் நாக்கில் விழுந்து நீங்கள் உணரும் முன்னர் கரைய ஆரம்பித்துவிடும். இதுவரை நீங்கள் சரியாக செய்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ரவா லட்டின் முந்திரிப்பருப்பு ஆசிர்வாதம் உண்டு.
கண்களை மூடிக்கொண்டு கையில் பாக்கி ரவா லாடை ஆட்டிக்கொண்டு, குணா கமலஹாசன் மாதிரி பரவச நிலைக்கு நீங்கள் சென்றால் வியப்பில்லை. யாரையாவது ஃபோட்டோ எடுக்கச்சொல்லி அவ்யுக்தாவிற்கு அனுப்புங்கள். இந்த பதிவின் இல்லஸ்ட்ரேஷனாக போட்டுவிடுவோம்.
எல்லாரும் க்ஷேமமாக இருங்கள்.
4 comments:
Adhukku pesame rava laddu va konjam small size la pannittu oru vaya muzhungidalaam.... indha illustration kku appuram enakku oru friend vittula poi murukku saapitta gyamagam..diwali kku...
"அதிகமாகக் கொடுத்தீர்களோ, தொலைந்தீர்கள். ரவா லட்டு ஒரு சூசைட் பாமாக மாறி சிதறி தட்டைத் தவிர பாக்கி இடங்களில் விழுந்து விடும்."
- பிரமாதமான example ;-)
பாக்கியம் இராமசாமியின் விகடன் கட்டுரைகளின் வாடை பலமாக அடிக்கிறது. தற்செயலா இல்லை... ;)
Shrikanth, Munishaa da ?
KB, :) I liked it myself.
Senthil, appadiya. I read Pakkiyam Ramaswamy, and of course a favorite. Heavy chances of a plagiarism of style. :)
Post a Comment