இன்னொரு ஆங்கிலப் புஸ்தகம் கையில் கிடைத்தது. படிக்க உட்கார்ந்தால் நேரம் போவதே தெரிவதில்லை. தூக்கம் அடிக்கடி வருகிறது. இருபது பக்கங்கள் முடிந்தவுடன் கொஞ்சமாக கண் சொக்குகிறது. மப்பும் மந்தாரமுமாக அடுத்த பக்கத்தை திருப்பினால் ஒரு கொலை. மீண்டும் விறுவிறுப்பு.. அனல் பறக்கிறது... இன்னுமொரு இருபது பக்கங்கள்.
அட.. கதை எழுதுவது எத்தனை சிரமம். உரை நடையில் விறுவிறுப்பு கொண்டு வர எத்தனை வார்த்தை ஜாலங்கள் செய்ய வேண்டும்.
வந்தியத்தேவவனின் கற்பனை ஓட்டத்தை படம்பிடித்துக் காண்பிக்கும் கல்கியின் நடையை கவனியுங்கள்.
வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வயிற்றிலிருந்து குடல்கள் மேலெழும்பி அவன் மார்பை அடைந்தன. பிறகு இன்னும் மேலே கிளம்பி அவன் தொண்டையையும் அடைத்துக்கொண்டன. அவனுடைய தேகத்தில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. பழுக்கக் காய்ந்த ஒரு லட்சம் ஊசி முனைகள் அவன் தேகமெல்லாம் துளைத்தன - அத்தகைய பயங்கரக் காட்சி அவன் கண் முன்னே காணப்பட்டது.
முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே பத்து, இருபது, நூறு அக்கினி குண்டங்கள் தோன்றின. அவற்றிலிருந்து புகை இல்லை; வெளிச்சமும் இல்லை; கீழே விறகு போட்டு எரிக்த்து உண்டாக்கும் தீப்பிழம்புகளும் அல்ல. வெறும் நெருப்புப் பிண்டங்கள். பூமியிலிருந்து எப்படியோ அவை எழுந்து நின்றன. திடீரென்று அவற்றில் சில பிண்டங்கள் மறைந்தன. வேறு சில தீப்பிண்டங்கள் புதிதாக எழுந்து நின்றன.
ஒரு பிரம்மாண்டமான கரிய இருள் நிறங் கொண்ட, தனியாகத் தலை ஒன்று இல்லாமல் வயிற்றிலேயே வாய் கொண்ட கபந்தனை போன்ற ராட்சதன். ஆனால் அவன் வயிற்றில் ஒரு வாய் அல்ல; அனேக வாய்கள். அந்த வாய்களை அவன் அடிக்கடி திறந்து மூடினான். திறக்கும்போது வற்றிலிருந்து தீயின் ஜ்வாலைகள் வாய்களின் வழியாக வெளியே வந்தது. மூடும் போது மறைந்தது.
இந்தக்காட்சியைக் கண்ட வந்தியத்தேவனுடைய ஒவ்வொரு ரோமக்கால் வழியாகவும் அவனுடைய உடம்பின் இரத்தம் கசிவதுபோலிருந்தது. அப்படிப்பட்ட பீதி அவனை என்றைக்கும் ஆட்கொண்டதில்லை. பெரிய பழுவேட்டரையரின் பாதாள நிலவரையிலேகூட இல்லை. அவன் பின்னால் "ஹா ஹா ஹா!" என்று ஒரு சிரிப்புக் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.
பூங்குழலிதான் !
பொன்னியின் செல்வன் கதையை சும்மா இருபது பக்கங்களில் நுணுக்கி எழுதிவிடலாம். ஆனால் இத்தனை விஸ்தாரமான, விளக்கமான, விறுவிறுப்பான விவரிப்புடன் எழுத கல்கி போன்ற திறன் மிக்க எழுத்தாளர்களால் தான் முடிகிறது. நந்தினியின் அழகை அவர் வர்ணிப்பதை படிக்காதவர்கள் துர்பாக்கியசாலிகள்.
சாதாரணமான உரையாடலின் நடுவில் திடீரென ஒரு விவரிப்பு வரும். "நந்தினி மோகனப் புன்னகை புரிந்தாள். வந்தியத்தேவனுடைய கண் முன்னால் ஒரு மின்னல் மின்னியது ! அது தேனைச் சொறிந்தது !"
ஆங்கிலத்தில் இவ்வளவு பொயெடிக்காக நான் படித்ததில்லை. இன்னுமொரு தருணத்தில்..
"நந்தினி தன் கண்களைத் துடைத்துக்கொண்டு பழுவேட்டரையரை நிமிர்ந்து பார்த்தாள். தங்க விளக்கின் பொன்னொளியில் அவளுடைய முகத்தில் மலர்ந்த முத்து முறுவலைப் பார்த்தார் தனாதிகாரி. ஆகா !இந்த புன்சிரிப்புக்கு மூன்று உலகத்தையும் கொடுக்கலாமே ? ......"
இதையெல்லாம் படிக்கும் போது, நமக்கும் கொடுகத் தோன்றும்.
ஹ்ம்ம்.. உங்களுக்கு எடுத்துக்காட்டும் சாக்கில், பொன்னியின் செல்வனின் சில அத்தியாயங்களை மீண்டும் ஒரு முறை சிலாகித்து படித்தேன். என் ரோமங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிலிர்த்தெழுந்தன.
ம்ம்ம்ம்...
செ ! நம் விவரிப்பு யோக்யதை அவ்வளவுதான்.
No comments:
Post a Comment