அலறிக்கொண்டிருந்த டீ.வி யை அணைத்துவிட்டு, மெதுவாகப் போய் கதவு திறந்தார். இதுவும் புதிது தான்.
வெளியே யாரும் இல்லை. கேட் மூடப்பட்ட நிலையில்தான் இருந்தது.
காலிங் பெல் அடித்ததா ? அல்லது வேறு ஏதாவது சப்தமா ? என்று யோசித்தார்.
சாதாரனமாக, மூன்று செல்போன்கள், ஒரு கார்ட்லெஸ் போன், சாதா மண்டை டெலிபோன், வாஷிங்மெஷின், ஹால் கடிகாரம், காலிங் பெல் எனப் பல விஷயங்கள் அதனதன் உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டிருப்பது வழக்கம். தினமும். ஆனால், இன்று அடித்தது காலிங் பெல்தான் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை இல்லையோ ?
மெல்லிதாக ஒரு காப்புணர்வு ராஜகோபாலுக்குள் எட்டிப் பார்த்தது. சமயலறை வழியாகச் சென்று பார்த்தார். கொல்லைப் புறம் பூட்டப் படவில்லை. பகீரென்றது. காலையில் துளசிச் செடியை சுற்றிவந்தது ஞாபகம் வந்தது.
சாவியை எங்கே வைத்தோம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் பின்னால் இருந்து ஒரு உருவம் வேகமாக அவர் வாயை மூடியது. நாண்கு வினாடித் திணறலுக்குப் பின் ராஜகோபால் மயங்கிச் சரிந்தார்.
----
முகத்தில் யாரோ தண்ணீர் தெளிப்பதுபோல் உணர்ந்த ராஜகோபாலால் கண்களைத்திறக்க முடியவில்லை. கைகள் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிந்துகொண்டார். பயம், ஆத்திரம் எல்லாம் சேர்ந்து கண்களைத் திறந்து பார்த்தார்.
ஒரு நடுத்தரவயது இளைஞன்.. இளைஞனா ? பொறுக்கி ராஸ்கல்.. அவன் தான் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தான்....
"யோவ்.. பெர்சு... யோவ்.." என்று தோள்களை உலுக்கினான். ராஜகோபாலின் வாயில் எந்தக் கருமத்தையோ நுழைத்து அதன் மேலும் கட்டியிருந்தான். ராஜகோபால் கத்தக் கத்த அவர் கண்கள்தான் அகலமாகனதே ஒழிய ஈனஸ்வரம்தான் கேட்டது. என்ன ஒரு இயலாமை.
"முழிச்சுகினியா.. இப்பொ நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ... இங்கே பார்..." என்று இடுப்பிலிருந்து ஒரு கத்தியை உருவினான். "கத்தினே.. சொருகிருவேன்.. அப்பொரம் நான் பொறுப்பில்ல.. அஆங்.."
எங்கேயிருந்து கத்துவது. ஒருமுறை திமிரினார், ராஜகோபால். பின் நிலமையின் தீவிரத்தை உணர்ந்தவராய் தலையாட்டினார்.
அவன் அவர் வாய்க்கட்டை மெதுவாக அவிழ்த்துவிட்டான். ராஜகோபால் பேசவில்லை.. வாயில் இருப்பதை துப்பினார். அது என்னது என்று கீழே குனிந்து பார்த்தார்.. குனியமுடியவில்லை. டைனிங்டேபிள் சேரில் முதுகு, மணிக்கட்டு மற்றும் கனுக்கால்கள் வெவ்வேறு இடங்களில் கட்டப்பட்டிருந்தன.
"பெர்சு... பீரோ சாவி எங்க இருக்கு.. மரியாதையா சொல்லிடு.. உனக்கும் ப்ரச்சனை வேணாம் எனக்கும் வேணாம்"..
"அயோக்ய ராஸ்கல்... திருட்டு நாயே.. உன்ன..." என்று மறுபடியும் திமிறினார்.
"அத்தெல்லாம் அப்பால பாத்துக்கலாம். பீரோ சாவிய குடுக்கரியா.. இல்ல நானே உடச்சு எடுத்துக்கிடவா.. "
கொஞ்சம் யோசித்தார், ராஜகோபால். சிறு குழந்தைகள் புஸ்தகத்தில் வருவதுபோல் எப்படியாவது ஏதாவது புத்திசாலித்தனமாக செய்து, போலீசுக்கோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ சொல்ல முடியுமா... என்று யோசித்தார்.
பக்கத்து வீடு.. பாபு.. ! பாபுவைக் கூப்பிடலாம். எப்படி..
நங்... !
டார்ச்லைட்டால் மண்டையில் அடித்துவிட்டான்.
கோபம், பயம், வலி, ஆத்திரம், இயலாமை... எல்லாம் சேர்ந்து அழுகை வந்துவிட்டது, ராஜகோபாலுக்கு...
"ஆ !!! " என்று அலறினார். அடிபட்ட இடத்தை தடவிக்கொடுக்க கைகள் முயன்று கயிரிடத்தில் தோற்றன..
"டேய்.. வயசானவன்டா... விட்டுர்ர்ரா.... உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன்டா.."
"மன்னிச்சுக்கோ பெர்சு.. பாரு.. நீ கோப்ரேட் பன்னேன்னா வேலை சுலுவா முஞ்சுடும்..." என்று ஆறுதலாக கத்தியை உள்ளே சொருகிக்கொண்டான்..
"சொல்ல்லு.. எங்கே சாவி.."
"சத்தியமா தெரியாதுடா.. " என்று அழுதபடியே சொன்னார்.
இந்த வீடு அவர் கட்டியது தான். ஆனால் இப்பொழுது அவர் மகன் ஆள்கிறான். மருமகள் ஆட்டிவைக்கிறாள். சம்மந்தியம்மாள் அதகளம் செய்கிறாள். உத்தேசமாக எந்தத்தருணத்தில் இந்த வீட்டு ஆட்சி தம் கையை விட்டுப் போனது என்று யோசித்தார், ராஜகோபால்.
"எனக்கு... " என்று இழுத்தார்.
"சீக்கிரம் சொல்லு... ராவாயிருச்சி.."
"எனக்கு இந்த வீட்டில இருக்கறது எதுவுமே தெரியாதுப்பா.. எல்லாம் பையன்தான் பாத்துக்கறான்.. "
"அப்பொ.. ஒடைக்க வேண்டியதுதான்... "
திருட்டுப்போய்விட்டால், காலத்துக்கும் தன் அஜாக்கிரதையை சம்மந்தியும், மருமகளும் நிந்தித்தே வதைப்பார்கள். அக்கிரமக்காரன்... இவனுக்கு திருடுவதற்கு இந்த ராத்திரிதான் கிடைத்ததா...
மறுபடியும் டார்ச் லைட்டை ஓங்கினான்..
-தொடரும்.
------
PS - கொஞ்சம் பிஸி.. அதனால் கொஞ்சம் லேட். காரணம் சொன்னால் "அடப் பாவமே !" என்று சொல்லுவீர்கள். காரணம் சொன்னதாக நினைத்துக்கொண்டு "அடப்பாவமே !" என்று சொல்லிவிடுங்களேன்..
3 comments:
adapaavame! apdiya nadandhadhu
அட பாவமே!
என்ன கீர்த்தி கல்யாணமா?
hi keerthi kalyaanam dhaane??
kadha sooper.. "ஆ !!! " என்று அலறினார்.அடிபட்ட இடத்தை தடவிக்கொடுக்க கைகள் முயன்று கயிரிடத்தில் தோற்றன.. tis part s so nice..andha periyavara nenacha romba paavamaa iruku..
Post a Comment