Monday, August 11, 2008

தீட்டு

டெலிபோன் மணி அடித்தபோது அந்த வீடு உறங்கிக் கொண்டிருந்தது. அந்த நகரமே உறங்கிக் கொண்டிருந்தது என்று சொல்லலாம். சோம்பேறித்தனமான ஒரு நகரம். பத்தரை மணிக்கே ஆளரவம் அற்று தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படும். மரங்களும் அசையாமல் நிசப்தம் நிலவி வெறும் தெரு விளக்கு வெளிச்சத்தில் சாலைகளெல்லாம் வெட்டவெளியாகவே காட்சியளிக்கும் ஒரு நகரம். டெலிபோன் மணி அடித்ததும் அந்த வீட்டின் சில விளக்குகள் போடப்பட்டன.

வேணு அரைத்தூக்கத்திலிருந்து முழித்துவந்து ஹாலில் இருந்த போனை எடுக்கப் போனான். கூடத்தில் விசாலம் பாட்டி பதறிக்கொண்டிருந்தது தெரிந்தது. "யாருடா இந்த நேரத்தில போன் பண்றா ?".. அவன் அவள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல், போனை நோக்கி நடந்து கொண்டிருந்தான். அந்தக் கால மனிதர்களுக்கு இரவு நேரத்தில் தொலைபேசி அழைப்பு அல்லது தந்தி என்றாலே அது மரணச் செய்திதான் என்ற எண்ணம். மணி பத்தேகால்தான் ஆகிறது.. இத்தனை மணிக்கு யாராவது அழைத்து "சும்மாதான் பேசனும் போல தோணித்து.. அம்மா இருக்காளாடா" என்று சில ஓர்ப்பொடிகளும் நாத்தனார்களும் அம்மாவைக் கூப்பிடுவதுண்டு. இப்பொழுது யாராக இருக்கும் ?

போனை எடுத்தான். விசாலம் பாட்டி அவனருகில் வந்து அவன் முகத்தையே உன்னிப்பாக பார்க்க ஆரம்பித்தாள். " ஹெலோ !! ... ஆங்... சொல்லுங்கோ சித்தப்பா..அப்பாவா... அப்பாக்கு உடம்பு சரியில்லே.. இப்பொதான் தூங்கியிருக்கார்... சொல்லுங்கோ.. ஓ !! ஐய்யய்யோ !". விசாலம் பாட்டிக்கு இப்பொழுது நடுங்க ஆரம்பித்துவிட்டது. "யாருடா. என்னாச்சு..?" என்றாள். வேணு கையால் "கொஞ்சம் இருங்கோ !" என்று சொல்லிவிட்டு போனில் தொடர்ந்தான். "சரி.. நாளைக்கா.. வந்துடரோம். கார்த்தால வரோம். சரி.. ஏதாவது கொண்டு வரனும்னா போன் பண்ணுங்கோ சித்தப்பா.. சரி.சித்தப்பா.. ஓகே.. பய் !". போனைக் கீழே வைத்தான்.

விசாலம் பாட்டி அடிக்கமாட்டாக் குறையாக கேட்டாள். "யாருடா.. என்னாச்சுன்னு கேக்கறேனோல்லியோ". "நம்ம ஜெயம் பாட்டி" என்று நிறுத்திக்கொண்டான் வேணு. பாட்டி எப்படித் தாங்கிகொள்வாள் ? பாவம். இருவருக்கும் நல்ல பழக்கம். ஜெயம் பாட்டி கொஞ்ச நாளாகவே படுத்த படுக்கையாக இருந்தாள். வேணுவின் அப்பாவின் சித்திதான் ஜெயம். குரோம்பேட்டையில் சித்தப்பாவின் வீட்டிலும் குரோம்பேட்டை ஹாஸ்பிடலிலுமாக நாட்களை கடத்திவந்தாள். இப்பொழுது ஒரு பத்து மணிக்கு ஜீவன் பிரிந்திருக்கிறது. "ஜெயம் பாட்டிக்கு என்னாச்சு ?" என்றாள் விசாலம்.

"பாட்டி செத்துப்போயிட்டா" என்றபடியே விசாலம் பாட்டியை கூர்மையாகப் பார்த்தான். விசாலம் பாட்டி அந்த செய்தியைக் கேட்டுவிட்டு, கூடத்தின் தன் மூலைக்குச் சென்று படுத்துக்கொண்டாள். அழுகிறாளோ ? ஒன்றும் புரியவில்லை. லைட் அணைக்கலாமா வேண்டாமா என்று யோசித்தான். லைட்டை அணைத்துவிட்டு பெட்ரூமுக்குள் சென்று படுத்துக்கொண்டான்.

அடுத்த நாள் காலை.

வீட்டில் எல்லாம் சோகமயமாக இல்லாவிட்டாலும், சந்தோஷமயமாக இல்லாமல் இருந்தது. மௌனம் நிலவியது. வேணு பெட்ரூமிலிருந்து வெளியே வந்தான். அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். குளித்துவிட்டு ரெடியாக இருந்தார். அம்மாவும்தான். மூலையில் விசாலம் பாட்டி உட்கார்ந்திருந்தாள். அவள் கண்களில் அவள் அழுததற்கான சுவடு தெரிகிறதா என்று பார்த்தான். அப்படி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவள் கண்களில் ஒரு வெறுமை ஆட்கொண்டிருந்தது.

"அப்போ இந்த வருஷமும் தீபாவளி கிடையாதா ?" என்று கேட்டான் வேணு.

அவன் கேள்வி, அந்த இடத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. பேப்பரில் மூழ்கியிருந்த அப்பா அவனை நிமிர்ந்து பார்த்தார். மனித ஜீவராசிகளின் மீது உனக்கு மரியாதை அவ்வளவுதானா என்பது போல இருந்தது அவர் பார்வை. "நானும் அம்மாவும் பைக்ல முன்னாடி போறோம். நீ பாட்டியை அழைச்சுண்டு கார்ல வந்துடு" என்று சொல்லிவிட்டு புறப்படத் தயார் ஆனார். அம்மா சமையலறையிலிருந்து ஒரு கூடை நிறைய ஏதோ கட்டிக்கொண்டு கிளம்பினாள். அவன் திரும்பவும் பெட் ரூமுக்குச் சென்றான்.

---

சிறிது நேரம் கழித்து, விசாலம் பாட்டி பெட்ரூமுக்குள் நுழைந்தாள். வேணு பெட்டில் இன்னும் சோம்பல் முறித்தபடி படுத்திருந்தான். அவனருகில் உட்கார்ந்து கொண்டாள். "உனக்கு தீபாவளி கொண்டாடலேன்னுதான் மொடையாக்கும்" என்றாள். வேணு கொஞ்சம் கடுப்புடன் அவளைப் பார்த்தான். பாவம் அவன். அவன் நினைவி தெரிந்த நாளிலிருந்து அவன் தீபாவளி கொண்டாடியதில்லை. கொஞ்சம் பணக்காரக் குடும்பம் என்றாலும் ஆச்சாரமான குடும்பம். அவன் அப்பா வேதம் கற்று அனுஷ்டானங்களை கண்டிப்பாக கடைபிடிப்பவர். வேணுவும் அப்படியே அதே ஈடுபாடுகளுடனும் எண்ணங்களுடனும் வளர்ந்தான். அவனுக்கு கடுப்பான ஒரு விஷயம் இந்த தீட்டு மட்டும்தான்.

யாரோ பெரியப்பா பையன் இறந்ததனால் ஒரு வருடம் முழுக்க ஒரு பண்டிகையும் கிடையாது. அந்த பெரியப்பா பையனை வேணு பார்த்தது கூடக் கிடையாது. சொல்லப்போனால் வேணுவின் அப்பாவே அவரைப் பார்த்து வருடங்களாகியிருந்தன. இருந்தாலும் தீட்டு அனுசரித்தாக வேண்டியிருந்தது. இப்படியே ஒவ்வொரு வருடம் தப்பாமல் யாராவது ஒருவர் செத்துக்கொண்டிருந்தனர். ஸ்கூல் நாட்களில் தெரு முழுவதும் தீபாவளி கொண்டாடுவது வேணுவிற்கு ஏக எரிச்சலாக இருக்கும். "அம்மா. நாம முஸ்லீமா மாறிடலாமா ?" என்றெல்லாம் கேட்டிருக்கிறான்.

ஒரு பண்டிகையும் கிடையாது. அதற்காக டிரஸ் வாங்காமல் இல்லை. வேறு நாட்களில் அதற்காக அம்மா பலகாரங்களும் பண்ணித்தருவாள். இருந்தாலும் அந்த சமயத்தில் கொண்டாடுவது என்பது தான் நிதர்சனம் என்று எண்ணிக்கொண்டிருந்தான் வேணு.

இப்பொழுதும் படுக்கையில் அப்படித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன். விசாலம் பாட்டி இன்னும் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். "பாவம்.. நீதான் என்ன பண்ணுவே.. எனக்குத் தெரிஞ்சு இந்தாத்துக்கு வந்ததுலேர்ந்து ஏதாவது ஒரு கேஸ் வருஷா வருஷம் கழண்டுண்டே இருக்கு. உனக்கு வயசானவாளைக் கண்டாலே வெறுப்பா இருக்குல்லே.. ".

"அதெல்லாம் இல்ல பாட்டி" என்று புரண்டு படுத்தான். விசாலம் அவன் முடியைக் கோதி விட்டுக்கொண்டாள். "என் கூட இருந்தவா ஒவ்வொருத்தரும் போயிண்டே இருக்கா.. எனக்கு இப்பொல்லாம் அழுகை கூட வர்ரதில்லை.. போரடிச்சுப் போயிடுத்து" என்றாள். வேணு திரும்பிப் படுத்து அவளை உன்னிப்பாகப் பார்த்தான்.

"ஜெயமும் நானும் அந்தக் காலத்தில் ஒண்ணா படித்துறையில பாடிண்டிருப்போம்.. அந்தக் காலத்தில இப்படி தனித் தனியா போய் படுத்த படுக்கையாகி.. இப்படியெல்லாம் நினைச்சுப் பார்த்ததே இல்லை.. இப்பொ பார்.. அவ மட்டும் போயிட்டா. நான் மட்டும் தனியா உட்கார்ந்து என்ன பண்ணின்டிருக்கேன்.. "

"பாட்டி.. சும்மா அதையெல்லாம் நினைச்சுக்காதீங்கோ.. !". வேணுவிற்கு அவள் தெளிவாகப் பேசியதால் என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.

"ஹ்ம்ம்.. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே போயிடுத்து. அவ.. அவாத்துல செத்துப் போயிட்டா.. நம்மாத்தில என்ன எழவு தீட்டு வேண்டிக் கிடக்கு.. உங்கப்பந்தான் பிடிவாதம் பிடிக்கறான். என்னமோ போ !"

வேணுவிற்கு தான் அந்த டாப்பிக்கை காலையில் பாட்டி முன்னால் எடுத்து இருக்கக் கூடாதென்று மனதிற்குள் பட்டது. எவ்வளவு புன்பட்டிருக்கும். வேணு தன்னையும் ஒரு "போகப்போற கேஸ்" என்று எண்ணியிருப்பான் என்று விசாலம் பாட்டி நினைத்திருக்கக் கூடும்.

அவன் பாட்டியைப் பார்த்து மன்னிப்பு கேட்கும் பாவனையில், "நான் அப்படி பேசியிருக்கப்டாது பாட்டி.." என்று ஆரம்பித்தான்..

"சே.. சே ! நீ பேசினதுலே தப்பில்லே... விதி எப்படி இருக்கு பார். ஆனா வேணு.. நான் செத்துப்போயிட்டா இந்தாத்துலே தீட்டெல்லாம் ஒண்ணும் கிடையாது.. தீபாவளியன்னிக்கு ரெண்டு புஸவோணமாச்சும் கொளுத்திப் போட்டியானாதான் என் ஆத்மா சாந்தியடையும்னு நெனைச்சுக்கோ.. "

பாட்டி பிதற்றுகிறாள். "பாட்டி.. அப்படியெல்லாம் பேசாதீங்கோ.."..

"உங்கப்பன் கிட்டே சத்தியம் வாங்கிண்டுதான் போப்போறேன், பார்.. சரி கிளம்பு.. நானும் கிளம்பிட்டேன்.. ஜெயத்தை ஒரு தடவையாச்சும் பாக்கனும். வா.. " என்று எழுந்திருந்தாள் பாட்டி.

----

அடுத்த தீபாவளிக்குள் விசாலம் பாட்டி செத்துப்போய்விட்டாள். வேணுவிற்கு அந்த வீட்டின் களையே இழந்த மாதிரி இருந்தது. அவள் மூலையில் சென்று அடிக்கடி உட்கார்ந்து கொள்வான்.

அந்த வருடம் தீபாவளி வந்தது. யாரும் கொண்டாடுவதாய் இல்லை. வேணுவின் அப்பா பெட்ரூமுக்குள் வந்தார். "வேணு.. போய் வெடி வெடி.. போ.. ! பாட்டியோட ஆசை அது.. எழுந்திரு" என்றார். பாட்டி அன்று சொன்னது ஞாபகம் வந்தது.

மௌனமாக வெளியே வந்து கம்பி மத்தாப்பு பற்ற வைத்துக் கொண்டான். புஸ்வாணம் ஒன்றைக் கொளுத்தினான். அழுகை அழுகையாக வந்தது.

7 comments:

AniShan said...

nice..
- Anitha

Anonymous said...

Yellam OK. Timing thavira. Konjam early, innum rendu maasam kazhichu post pannirukkalame?

Ennakketta, deepavali-avida, navarathiri pandigai cancel aagardhu dhaan romba manakkashtam. Idhoda 7 varushama enga veetla no golu. Azhagha pudavai kattindu dhivyama paadara penmanigalai naan rombave miss pannaren. ;-)

Unknown said...

Very nice. Reflects the practical aspects of life and death..!!

KRTY said...

anitha, thanks.

kundalakesi, :)

saymee, thanks.

Unknown said...

Is karthi balaji an inspiration for this story

Peerless said...

Reminds me of my childhood days.Thanks Keerthi.

Anonymous said...

Ippo Indha story oda last line dhan unmai...Manasaara oruthara ninaichu andha ninaivugalukkaaga kondaadama irundha adhu ava ava viruppam. NO other thing should stop from celebrating.

2003 start achchu innum this is happening in my place...

Innoru example BK :)

Anikku summa pesindrundhom..adhu vechu story pottuttiya :)