Saturday, September 19, 2009

உன்னைப்போல் ஒருவன்



சென்ற வருடம் "A Wednesday" பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.. ஒரு பெரிய ஸ்டார் கேஸ்ட் இல்லாமல், ரொம்பவும் சிக்கலான ஒரு கதையை இலகுவாக நகர்த்திச்சென்று ஒரு ஆச்சரியமான எதிர்பாராத முடிவுடன் நிறைவு செய்திருப்பார்கள். பாட்டு இல்லை.. ஃபைட்டு இல்லை... காமெடி இல்லை.. ஆனாலும் விறுவிறுவென படு சுவாரஸ்யமாக இருந்தது. பலே ! இப்படியல்லவோ கதைக்களம் காண்போரைக் கட்டிப்போடவேண்டும் ? சே ! இப்படி ஒரு படம் தமிழில் வரக்கூடாதா என்று பலபேரிடம் பொருமியிருக்கிறேன்.

மர்மயோகி பல தெரிந்த / சில தெரியாத காரணங்களால் கைவிடப்பட்டு அடுத்து "A Wednesday" படத்தை தமிழில் எடுக்கப்போகிறார்கள் என்று தெரிந்தவுடன், மேலே சொன்ன ஆச்சரியங்களின் "ஆன் தி காண்ட்ராரி"க்கள் என் மனதில் ஓடியது. முக்கியமானது - ஸ்டார் காஸ்ட்.

கமல்ஹாசனும் மோஹன்லாலும் அபாரமாக நடித்துவிடுவார்கள் என்பது ப்ரச்சனை இல்லை.. எப்படி அடக்கி வாசிப்பார்கள் என்பதுதான் ப்ரச்சனை. அதாவது படம் அறிவித்திருந்த நாளிலிருந்து சத்யம் தியேட்டரின் திரையில் டைட்டில் கார்டு போடும் வரை, அந்தப் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பும் கொஞ்சமாக தாடியும் வளர்த்துவந்த எனக்கு, மனதோரம் அந்தப் ப்ரச்சனை ஒரு பயமாக ஒட்டிக்கொண்டு இருந்தது.

ஹப்பாடா !...ப்ரச்சனை விட்டது.

படம் சூப்பர் ஃபென்டாஸ்டிக்.

ஒரு கடற்கரையோரத்தில், தன் கடந்தகாலத்தின் மிக முக்கியமான ஒரு நாளை மோஹன்லால் விவரிப்பதில் ஆரம்பிக்கிறது படம். தன் வாழ்வின் ஒரு நாளில் சுனாமி போல மாற்றிய ஒருவனைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும்போது டைட்டில் போடுகிறார்கள். ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான நரம்பு புடைக்கும் இசையுடன். படம் டைட்டில் முழுக்க ஆங்கிலத்தில்.. ஏனென்று தெரியவில்லை (ஆனால் தமிழ் நாடு அளிக்கும் வரி விலக்கு வாங்கியிருப்பார்கள்). போட்டதில் தவறில்லை.. ஆனால், ஆங்கிலத்தில் வருவது, no fancy.

இப்பொழுது வருகிறது விசில் சத்தம். கமல்ஹாசன் தனது பேஸ்மண்ட் ரூமில் நெருப்பு பொறி பறக்க எதையோ செய்து கொண்டிருக்கிறார். சில நிமிடங்களில் அது பாம் என்று தெரிகிறது.. டைட்டில் முடிவதற்குள் நகரத்தின் முக்கியமான இடங்களில் மர்மமான முறையில் ஒரு பக்கத்தில் வெங்கடாஜலபதியின் படமும் மறுபக்கம் "I Love India" என்ற வாசகமும் இருக்கும் கறுப்புப் பையை ஆங்காங்கே வைத்துவிட்டுக் கிளம்புகிறார். (சென்னை சென்ட்ரலைக் காண்பிக்கிறார்கள்.. அதன் தொடர்ச்சியில் வெளிவரும் ஒரு காவலர் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெளியே நிற்கிறார்.. பிசகு). பின் கூடை நிறைய தக்காளியை வாங்கிக்கொண்டு
பின்னர் சாவகாசமாச் சென்று மார்க்கெட்டில் கூடை நிறைய தக்காளி வாங்குகிறார். கொஞ்ச நேரத்தில் பரபரப்பான நகரததைவிட்டு உயர வாக்கில் தள்ளி கட்டப்பட்டுவரும் ஒரு உயரமான அடுக்கு மாடி கட்டடத்தின் மொட்டைமாடிக்கு வந்து அசால்ட்டாக ஒரு கன்ட்ரோல் ரூமை ரெடி செய்கிறார்.

என்ன நடக்கிறது என்று ஊகித்து முடிப்பதற்குள் ஒரு முக்கியமான தருணம் கடக்கிறது. ஓஹோ ! இந்தப்படத்தில் இவர் ஹீரோ.. இவர் வில்லன்... இது ஒரு வீடு, அது ஆடு அனில் என்றெல்லாம் அறிமுகம் செய்யப்போவதில்லை.. சடாரென்று நேரே கதைக்கு சென்றாகிவிட்டது என்று தெரிந்தவுடன்.. அந்த வேகத்தை உள்வாங்கிக்கொள்ளத் தயாராகிறோம். சீட்டில் கொஞ்சம் கவனமாக உட்கார்ந்துகொள்கிறோம்.

சிறிது நேரத்தில் சென்னையில் முக்கியமான இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தான் சொல்லும் தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்காவிட்டால் "அமைதிப்பூங்கா"வாக இருக்கும் சென்னை நாசம் செய்யப்படும் என்றும் மிரட்டல்விடுக்கிறார், பெயர் சொல்லாத கமல்ஹாசன். மறுமுனையில் திண்டாடும் ஐ.ஜி.ஆர். மாரார் என்கிற மோஹன்லால், முதலமைச்சருக்குத் தெரியப்படுத்தி போனில் மிரட்டும் ஆசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை லட்சுமி வாயிலாகப் பெறுகிறார். இதற்கு நடுவில் அந்த மர்மக் குரலை கண்டுபிடிக்கப் பல அடைவழிகளில் எத்தனிக்கிறார். எதுவும் சோபனமாகாத நிலையில் அந்த மர்மக்குரலுக்குப் பணிந்து தீவிரவாதிகளை தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான இரண்டு போலீஸ்காரர்களுடன், சோழாவரம் விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கிறார்.

இதற்குப் பின் தான் அந்தக் க்ளைமாக்ஸ். படம் பார்க்காதவர்களுக்கு சொல்லக்கூடாது.. பார்த்தவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. ஆனால் அந்தத் திருப்பம்தான் கதையின் உச்சம்.

இந்தப் படத்தை அவ்வளவு பாராட்டாமல் நேராக "A Wednesday" படத்தையே பாராட்டலாம் என்று நினைப்பவர்கள், மூலக்கதையையே பாராட்டிவிட்டுப் போகட்டும். என்னதான் வால்மீகி ராமாயணம் எழுதினாலும், தமிழில் கம்பன் எழுதினால் அது கேட்கும்போது எவ்வளவு ஆனந்தம் அடைவோமோ அப்படித்தான் என் மொழியில் ஒரு நல்ல படத்தை ரீமேக் செய்ததை ரசிக்கிறேன்.

மோஹன்லால், கமல் நடித்தது போக படத்தில் எல்லாருமே அருமையாக நடித்திருக்கிறார்கள். கேமரா கோணங்களும் நிறங்களும் A-Class. டிஜிட்டல் சினிமேட்டோக்ரஃபியில் கேமராமேன் மனோஜ் பின்னியிருக்கிறார்.

இசை.. விறுவிறுப்பான படத்துக்கு ஸ்ருதிஹாசனின் இசை பக்கபலம். நல்லவேளை, பாடல்கள் இல்லை. (கேசட்டில் இருக்கும் பாடல்கள், வெகு சுமார் ரகம்).

படத்தொகுப்பு - ரமேஷ்வர் பகத். வழக்கமான இன்றைய தமிழ் சினிமா கற்றுக்கொண்ட கௌதம் மேனன் ஸ்டைல் எடிட்டிங்.

கலை - தோட்டா தரணி. "வார் ரூம்" கொஞ்சம் பாஷ் கம்மி. There was a lot of scope, unattended.

இதில் சில விஷயங்கள். படத்தின் கதை சென்னையில் நடக்கிறது என்பது தோன்றவே இல்லை. ( அதிகப்படியான காட்சிகள் ஹைதராபாதில் படப்பிடிக்கப்பட்டதால்).. ஒரு புல்லட்டைத்தவிர எல்லாவற்றிற்கும் AP ரெஜிஸ்ட்ரேஷன் வண்டிகள். அண்ணா மேம்பாலம், கோயம்பேடு மார்க்கெட் மாதிரி, சென்ட்ரல் ரயில் நிலையம் தவிர எல்லாமே பழக்கப்படாத சென்னை இல்லாத இடங்கள்.

வசனம் - இ.ரா.முருகன். ஐயா ! வெளுத்துவாங்கியிருக்கிறீர்கள். உங்கள் வசனத்தின் தாக்கம் சனிக்கிழமை படம்பார்த்ததிலிருந்து இப்பொழுதுவரை இருக்கிறது.

மோகன்லால், உயிரை பலிவாங்கக்கூடிய ஒரு காரியத்துக்கு ஒரு போலீஸ் ஆபீஸரை நியமிக்கும் போது, வந்த உரையாடலில் என் ஞாபகத்தில் இருப்பது.
"Married ?"
"Yes Sir"
"Child ?"
"Yes Sir. 1 kid"
"Sorry.. I mean, Congrats."

கமல் க்ளைமாக்ஸில் சொல்லும் அத்தனை டையலாகுகளும் க்ளாஸ்.
"நீ என்ன சூப்பர்மேனா ?"
"சூப்பர்மேனா.. நான் என்னை இன்விசிபிள் மேன்னு இல்லே நினைச்சுட்டு இருக்கேன்.. வோட்டுப்போடப்போனா என் பேருல நான்ங்கற ஒருவன் இல்லைன்னு சொல்லிட்டாங்களே !" என்று சொல்லும்போது தியேட்டரில் புரிந்தவர்கள் கைதட்டினார்கள்.

பல உரையாடல்கள் ஆட்சியில் இருப்பவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் நக்கலடித்திருப்பது கைத்தட்டல் வாங்கித் தருகிறது.. இன்னும் சிலதடவைகள சென்று சில டையலாகுகளை மனப்பாடம் செய்யவேண்டும்.

இந்தப்படத்தை தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஒப்புவதற்கு கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார்கள், வசங்கள் மூலமாக. இருந்தாலும், இந்த தீவிரவாதம் என்பது நம் தமிழ் மண்ணுக்கு இன்னும் (அதிர்ஷ்டவசமாக) உரைக்காத நிலையில் மீனம்பாக்கத்தையும், கோயமுத்தூரையும் அடிக்கடி ஞாபகப்படுத்தவேண்டிய கட்டாயம் வசனகர்த்தாவிற்கு. "மறதி.. அது இந்த தேசத்தோட வியாதி" என்ற வசனம் உட்பட.

அதே கதை, அதே விறுவிறுப்பு, கிட்டத்தட்ட அதே வசனங்கள், அதே திருப்பம், அதே முடிவு.. சே ! அந்த ஹிந்திப் படத்தை மெனக்கெட்டு முதலில் பார்த்திராமல் இருந்திருந்தால் இன்னும் அதிக அளவில் ஆனந்தப்பட்டிருக்கலாம்.

முதல் முறையாக இந்தக்கதையை தமிழில் பார்ப்பவர்கள் பாக்கியசாலிகள்.

நிற்க.

விறுவிறுப்பான மசாலா இல்லாத சினிமா தமிழில் வெற்றிபெறக்கூடும் என்பதற்கு இது ஒரு உதாரணம். "ரசிகர்கள் அப்படித்தான் விரும்பிப் பாக்குறாங்க" என்று சாக்கு போக்கு சொல்ல முடியாது. புத்தம்புது பென்ஸ் கார்களை கருக வைத்து ப்ரம்மாண்டம் காட்டத்தேவையில்லை.. மரத்தை சுற்றிவந்து பாட்டுப்பாட வேண்டாம். வடிவேலுவை ஊளையிடச்செய்து கிச்சுகிச்சு மூட்டவேண்டாம்.

கதாசிரியருக்கு மட்டும் மகுடம் சூட்டினால் போதும். நல்ல சினிமாவின் ஆட்சி அமோகமாக அரங்கேறும்.

பி.கு :

இந்தப்படமும், இதன் ஹிந்தி ஒரிஜினலும் "Aam Adhmi" என்கிற ஒரு சாதாரணப் ப்ரஜையின் சமுதாயக் கோபத்தை ப்ரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

எனக்கென்னமோ, தீவிரவாதியின் அச்சுறுத்தலைவிட, தண்ணீர் லாரிக்காரனின் அழுச்சாட்டியத்தில்தான் அதிகமாக எங்கள் காமன் மேனின் கோபம் இருக்கும்.

"எவனோ ஒருவன்" பார்த்திருக்கிறீர்களா ?

3 comments:

Venkatrangan said...

allah jaane song and nilai varuma were very good in the audio CD machi!you listen to it again....am liking it more and more out of repeater listening
am yet to watch the movie!!!

Shobana said...

I haven't seen the tamil version yet and I am having double thots about it, since I have seen the hindi version and know the plot of the movie. But as you said, we need more and more innovative thinking...and to honor the writers by making a movie, theirs and not something to glorify the hero's role.

Did u see the movie, Eeram? I thot it was a well made thriller for a tamil movie, except for the length.

Unknown said...

Hi,

You missed mentioning about Anand(அபிவாதி சொல்லி)...மோகன்லாலை இன்னும் கொஞ்சம் புகழ்திருக்கலாம் ...மனுஷன் body language சான்சே இல்லை ,அதுவும் ஆனந்த் mobile phonela பேசிட்டு Girl friendnu சொன்ன உடனே Mohanlal கொடுக்கும் reaction Sema gethu ...Then you must have also added about selection of the police cops ganesh venkatraman and sethu too