Saturday, January 23, 2010

பட்டாபிஷேகம்

அமெரிக்கா வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. நாட்கள் எல்லாம் நத்தை வேகத்தில் சென்றாலும் மாதங்கள் மனோவேத்தில் பறக்கின்றன. ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரி மாதிரி.. ஆனால் மல்டி லெவல் ரிலேட்டிவிட்டி.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், பணம் செய்யப் பணம், செல்போன், லேப்டாப், இன்டெர்னெட், பக்திக்கு பிள்ளையார் படம், குளிருக்கு க்ளவுஸ், தலைவலிக்கு டைகர்பாம், மக்குக்கு பதிலாக காலியான தயிர் டப்பா.. என ஜபர்தஸ்தாக ஒருவழியாக சென்னையில் வாழ்ந்த வாழ்க்கைமுறையை இங்கேயும் நிலை நாட்டிய நேரத்தில்... தலைமுடி கண்ணை மறைத்தது.

பள்ளி நாட்களில் அதிகப்படியாக முடி வளர்த்து வாயின் நுணியைக் குவித்து, மூக்குக்கு வெளியே நகர்த்தி மேல் நோக்கி ஊதினால், ஒரு கொத்து மயிர்கள் காற்றில் இலகுவாக பறந்து மறுபடி வந்து கண்ணை மறைக்கும்.. கொஞ்ச நாட்களுக்கு அது பேஷனாக இருந்தது. பயாலஜி மாஸ்டர், முன்னம் பெஞ்சில் அமர்ந்திருந்த நண்பனை, முடியைப்பிடித்து தூக்கி பளேரென்று அறைந்த அடுத்த நாளிலிருந்து க்ளோஸாக முடி வெட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். பேஷனை விட தற்காப்பு முக்கியமானது.

"தலைக்கு மேல வேலை" என்று சும்மா வெறும் ஜோக்காக இருக்கும் சிகை திருத்தும் செயல், கொஞ்சம் சீரியசானது என்பது சிலபேருக்கு மட்டும் தெரிந்தது. அம்பட்டனின் (இது ஏன் இழிசொல்லாக மாறியது என்பது எனது உண்மையான வருத்தம்) ஒரு தவறான கீரலில் ஒரு மாதம் நரகமாகும். One bad whip of a Scissor and there's no going back... unless there's a fast growing back.

சலூன் என்பது சுடுகாடு மாதிரி. "சமரசம் உலாவும் இடமே !"... அதாவது, நான் போகும் சலூன்கள்... அதாவது, வட சென்னையில் இருக்கும் சலூன்கள்..

டிப்பிக்கல் (அருமையான ஆங்கில வார்த்தை) சலூன் எப்படி இருக்கும் ? ஒரு பத்துக்குப் பதினைந்து அடி ரூம்.. துரு பிடித்த ஷட்டருக்குப் பின்னால் ஒரு சன் ஸ்க்ரீன் கண்ணாடி தடுப்பு, அதன் ஒரு ஓரத்தில் கதவு... எப்பொழுதும் திறந்தே இருக்கும்.. உள்ளே நுழைந்ததும் ப்ரதானமாக இரண்டு சுழல் நாற்காலிகள் (அதில் சிறுவர்களுக்கென்று தனியாக ஒரு ஃப்ளோர் இருக்கும்.. ஷேவிங் செய்கையில் தலை சாய்த்துக்கொள்ள ஒரு வசதி.. உள்ளங்காலை அமர்த்திக்கொள்ள ஒரு குஷன் சீட் என பிரமாத சொகுசாய் இருக்கும்), அதன் முன்னேயும் பின்னேயும் பூதாகாரமான கண்ணாடிகள்... அதில் ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித் படங்கள்.. (ஆண்கள் மட்டுமே வரும் சலூனில் ஸ்த்ரீக்களின் படங்க்ள் வைப்பது ஒரு மிகப்பெரிய சைக்காலஜி ட்ரிக்).. சுவற்றில் ஒட்டினாற்போல் நீள வாக்கில் அலமாரி.. அதன் மேல், பத்துப் பதினைந்து சீப்புகள், (ஒன்றிரண்டு பளிச்சென்று இருக்கும்.. பாக்கி எல்லாம் ஹரப்பா மொஹஞ்சதாரோ காலத்தவை).. அப்புறம் தலையில் தண்ணீர் தெளிப்பதற்கென்று கொக்கு மாதிரி கழுத்து வளைந்த பச்சைக்கலர் பாட்டில் (தலைமுடி வெட்டும் வைபவத்தில் எனக்குப் பிடித்தது இந்த தண்ணீர் தெளிக்கும் விளையாட்டு).. பவுடர் டப்பி, அப்புறம் சின்னச்சின்னதாய் பாரின் டப்பாக்கள்.. என்ன இருக்குமோ தெரியாது.. அதை யாருக்கும் பயன்படுத்திப் பார்த்ததில்லை.. ஈசான்ய மூலையில் ஒரு டி.வி இருக்கும்.. ரொம்பவும் வசதி குறைந்த சலூனில் ரேடியோ இருக்கும்.. இடது ஓரத்து கப்போர்டுதான் கல்லாப் பெட்டி.. வலது ஓரத்தில் சரைக்கும் கத்தி + டோபாஸ் பிளேடு பேக்கட்..

பின்னங்கண்ணாடியின் கீழே நீளமான பென்ச்.. கொஞ்சம் வசதியான சலூன்களில் குஷன் போட்ட பென்ச்.. அதன் மீது குவிந்து கிடக்கும் தினத் தந்தி பேப்பர்... சினிமா மலர்.. தினத்தந்தி செய்திகள் எல்லாம் எமோஷனலாக இருக்கும்.. 'கதறக் கதறக் கற்பழிப்பு !!".. "கத்தியால் கோரமாக வெட்டிப் படுகொலை !!" (ஒரு செய்தியை மிக அழுத்தமாக சொல்லவேண்டுமென்றால், வல்லின மெய்களை பயன்படுத்திப் பாருங்கள்).. இப்படி சில பேப்பர்கள்.. முழு பக்கத்துக்கு சினிமா நடிகைகள் பொஸ்டர் நிறைந்த பேப்பர்கள்.. ஆண்டியார் பதில்கள் என்று கேனத்தனமான பேப்பர்கள் என்று .. தினத் தந்தி கலர்ஃபுல்லாக இருக்கும்.. மக்கள் இப்படியும் செய்தி வாசிக்கிறார்களா என்று தோன்றும்..

பெஞ்சின் மெறுமூலையில் ஒரு அட்டைத் தடுப்பு.. அதற்கு அந்தப்புறத்தில் ஒரு தண்ணீர் டாங்க்.. ஷேவிங் செய்யும்போது, க்ரீமையும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரையும், ஒரு கெமிக்கல் ப்ராஸஸ் மாதிரி தயார் செய்யும் இடம் அது... நடுவில் ஒரு ஷெல்ப்.. அதில்தான் ப்ரேதங்களைப் போர்த்தும் போர்வைகளன்ன துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சன்னமான வேகத்தில் சுழலும் ஃபேன்.. காற்றில் பறக்காத துண்டிக்கப்பட்ட ப்ரோட்டீன் முடிகள்.. வளைவு வளைவாய்... கொத்துக் கொத்தாய்..

இப்படித்தான் இருக்கும் - எங்க ஊர் சலூன்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை என்பது சலூன் கடைக்காரருக்கு தீபாவளி மாதிரி.. எவ்வளவு வேகமாக வெட்டினாலும், குறைந்த பட்சம் இருபது நிமிடங்கள் எடுக்கும்.. "என்ன சம்முகம்... லேட்டாகுமா.. வெளியூருக்கு போனும்" என்று ஒருவர் எட்டிப்பார்த்து விசாரிப்பார்.. சலூன்காரர், பெஞ்சில் இருப்பவர்களை ஒரு நோட்டம் விடுவார்.. தலைக்கு இருபது நிமிடம் (literally) என்ற கணக்கு போட்டு ஒரு எஸ்டிமேஷன் கணக்கு போடுவார். நானும் சில சமயம் இந்த மாதிரி நோட்டம் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடுவேன்.. இல்லையானால், ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தினத் தந்தி படிப்பதிலேயே கழிந்துவிடும்.. சிறுவர்கள் இருந்தால்.. தக்குனூண்டு மயிருக்கு எத்தனை நேரம் ஆகப்போகிறது என்று தப்புக்கணக்கு போடக்கூடாது... அவர்கள் அரங்கேறினால் ஒவ்வொரு கீறலுக்கும் முடிந்துவிட்டது போலவே தோன்றும்.. ஆனால், பெரியவர்களுக்கு ஆகும் அதே நேரம்தான் இவர்களுக்கும்.. லேசாக வழுக்கை விழுந்தவர்களுக்கு, ironically, வழக்கத்தைவிட அதிக நேரம் பிடிக்கும்..

எல்லாம் முடிந்துவிட்டது.. அப்பாடா.. அடுத்து நாம்தான் என்று நினைக்கும்போது, சலூன்காரர் ஒரு business proposition செய்வார்.. "ன்னா.. சொற சொறன்னு இருக்கு... ஷேவிங் பண்ணிக்கலாமா.. ?" என்று என்னமோ கூட்டுமுயற்சி மாதிரி கேட்பார்.. முடி வெட்டிக்கொண்டவர், அந்த "மாயக்கண்ணாடியில்" ஒரு சினிமா நட்சத்திரம் தன் ஒப்பனை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதைப் போல பார்த்துவிட்டு.. "எழவு... ஆமாம்லே.. செஞ்சிடு" என்று உத்தரவிடுவார்.. வெட்டப்படும் ஒவ்வொரு ரோமத்துக்கும் ரோமாஞ்சனமாகும் சலூன்காரர் (மன்னிக்கவும்.. கொஞ்சம் அதிகப்படியாக எதுகை மோனையில் எழுதிவிட்டேன்),... குஷியாகி க்ரீமை குழைக்க ஆரம்பிப்பார்.. நாம் நேற்றைய தினத்தந்தியை படிக்க ஆரம்பிக்கவேண்டியதுதான்.

நிற்க.. இந்தப் பதிவிற்கு ஏன் பட்டாபிஷேகம் என்று நாமகரணம் சூட்டினேன் ?

சலூன்கடையிலிருந்து வெளியே வந்து வீட்டுக்கு நடக்கும்போது, ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும்.. காதுக்கு இடுக்கில் அதிகமாக காற்று வீசுவதுபோல இருக்கும்.. எங்கோ வலிப்பது போல இருக்கும்... சட்டையில் முடி பிசுபிசுப்பாய் ஒட்டி இருக்கும்.. முடிவெட்டிக்கொண்டு வீடு திரும்பும் நாட்கள் மட்டுமே, அழுக்காய் தெருவில் நடமாடும் உரிமை கொண்டவை. You have a right to remain dirty.

அப்படி ஒரு நாளில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, எதிர்த்தவீட்டு மாமா எட்டிப்பார்த்துக் கேட்டார் - "என்னப்பா.. பட்டாபிஷேகமா ?" என்று.. வினோதமாக இருந்தது.. சலூனுக்குப் போய் வந்த சர்வ லட்சண அடையாளங்களைப் பார்த்துப் புரிந்துதான் கேட்டார் என்பதால், .. " ஹெ ஹெ ! ஆமாம் மாமா !" என்றேன்.. "அமாவாசையாச்சே ! அம்மா சொல்லலையா ?" என்று கலாச்சாரக் கேள்வி கேட்டார்.. அதற்கு என்ன சொல்லி மழுப்பினேன் என்று நினைவில்லை.. ஆனால், முடிவெட்டிக்கொள்ள செல்வதற்கு இன்னுமொரு நிக் நேம் கிடைத்தது அங்கேதான்.

மறுபடி, விட்ட இடத்துக்கு வருவோம். ஷேவிங் எல்லாம் செய்து முடித்தபின் அவரை விடுதலை செய்துவிட்டு, அவர்மேல் போர்த்தப்பட்ட துணியை உதறுவார்.. இந்த சமயத்தில்தான், பெஞ்சில் இருப்பவர்கள், அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கம் பார்ப்பார்கள்.. யார் அடுத்து, என்று.. அடுத்து நாம்தான் என்றால், thats the moment of truth ! பேப்பரை பக்கத்தில் இருப்பவரிடம் கொடுத்துவிட்டு மஹாராஜா அரியணையை நோக்கி நடக்கும் கம்பீரத்தில் நடந்து எந்தக்காலை வைத்து ஏறுவது என்று தயங்கி, ஒரு மாதிரியாக ஏறி, கொஞ்சம் வளைந்து நெளிந்து சிம்மாசனத்தில் அமர்ந்தபின் எதிரே தெரியும் நம் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.. என்னதான் நல்லதாக கண்ணாடி வாங்கி வீட்டில் வைத்தாலும், அந்த சலூன் கண்ணாடியில் தெரியும் முகம், அந்தப் பொலிவு, வீட்டில் நிச்சயமாக இருக்காது. மஹாராஜவின் அங்கியை போர்த்திவிட்டு மந்திரியின் பணிவுடன் "ஷார்ட்டா, மீடியமா ?" என்று கேட்பார்.

கிட்டத்தட்ட புதிதாக ஒரு மன்னனுக்கு முடிசூட்டு விழா நடந்து முடிந்தது போல இருக்கும்.. நல்ல பொருத்தமான பெயர்தான் - பட்டாபிஷேகம்.

மீடியம் என்று சொன்னால், முடி வெட்டியதே தெரியாது.. சும்மா காதுக்கு அருகில் கத்திரிக்கோலால் சப்தம் எழுப்பிவிட்டு, "போதுமா சார் !" என்று கேட்டால், நிஜம்மாக மீடியமாக வெட்டியது போல்தான் தோன்றும்.. ஒருதடவை அப்படி ஏமாந்தபின், எப்பொழுதுமே "ஷார்ட்" அல்லது "நல்லா ஷார்ட்" அல்லது "சம்மர் கட்".

கொஞ்ச நேரத்துக்குத்தான் மஹாராஜோபசாரம் எல்லாம்.. கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை தேய்ந்து மோவாய்க்கட்டையில் கைவைக்கப்படும்.. அதற்கப்புறம் சலூன்காரரின் கைப்பாவையாக மாறியாகவேண்டும்.. அஃதே நலம்.

ரொம்ப நேரம் நம்மை கண்ணாடியில் தோன்றும் நம் சுந்தர வதனத்தைப் பார்க்க விட மாட்டார்.. கன்னத்தில் கைவைத்து இடது மூலையைப் பார்க்கவைத்துவிட்டு வலது பக்க ரோமங்களை வெட்டிக்கொண்டிருப்பார்.. இப்பொழுதுதான் ஸ்ரீதேவிக்கும் மாதுரி தீக்ஷித்துக்கும் வேலை.. சலூன் கடையில் மட்டும் பெண்களின் படங்களை வெறித்துப் பார்ப்பதில் தவறேதும் இருக்கப்போவதில்லை.. ஆனால் அச்சிற்றின்பமும் சொற்ப நேரத்துக்குத்தான்.. இடதுபக்கம் வெட்ட வருகையில் வலது பக்கம் திருப்பினால், பார்ப்பதற்கு எதுவுமே இருக்காது.. வெறுமென கத்திரிக்கோலின் வீச்சை காதில் வாங்கியபடி உட்காரவேண்டியதுதான்..

உங்கள் வயதையும், அந்த சலூனில் அனுபவத்தையும் பொறுத்து, உரையாடல் ஆரம்பமாகும்.. "ஜாப்ல இருக்கீங்களா ?".. "ஆமாம்... !" .. "கம்ப்யூட்டரா.. ?" .. "ஆஹ்.. ஆமாம்.. !".. "எம் மச்சான் பொண்ணுகூட அதுல தான் வேல செய்யுது.. காலேல போனா.. ராத்திரிக்குதான் வருது.. புழியறானுங்கல்ல ?" என்று உரையாடல் நீளும்.. கொஞ்சம் வயதானவராக இருந்தால் அரசியல்.. "பே கமிஷன் எல்லாம் ஐவாஷ் சார்.. சொம்மனாங்காட்டிக்கு வோட்டு வாங்க.. ".. வட சென்னை சலூன் கடைக்காரர்கள் எல்லாரும் Politically active.

எல்லாம் முடிந்தபின் முகம் பேயறைந்தார்ப்போல் இருக்கும்.. இப்பொழுதுதான் பவுடர் போட்டு ஸ்பாஞ்சால் மூஞ்சியைத் துடைப்பார்.. பின்னர், நம்மைக் கட்டிப்போட்ட அந்த துணியிலிருந்து விடுதலை செய்வார்.. வேட்டி கட்டிக்கொண்டு செல்லும் சில நாட்களில், இந்த துணியை எடுக்கும்போது கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

இனிமேல் மஹாராஜா பதவி விலக வேண்டியதுதான்.. "போதுமா சார் ?".. மெதுவ்வாக இறங்கி முன்னும் பின்னும் பார்த்து.. நம்ம லட்சணம் அவ்வளவுதான் என உணர்ந்துகொண்டு, பாக்கெட்டில் கைவிட்டு இருபத்து ஐந்து ரூபாயை (1996) எடுத்து கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிக்கொள்வார்.. நாவிதர் !

இங்கே !! ?

நாளைதான் செல்கிறேன்.. Wish me luck !

7 comments:

sathishsangkavi.blogspot.com said...

//ஒரு தவறான கீரலில் ஒரு மாதம் நரகமாகும்//

உண்மைதான் நண்பரே.. இதுவே முகத்தில் ஒரு இழு இழுத்து விட்டால்.....

ஆனால் சமூகத்தில் அவர்களை கேவலமாகத்தான் பார்க்கிறார்கள்...

அழகாக எழுதிஉள்ளீர்கள்...

கல்யாணகிருஷ்ணன் said...

correct-a solli irukinga yennaku pidichu irunthuthu

thanks

பிச்சைப்பாத்திரம் said...

very nice to read.

Anonymous said...

Hey Dude..Nice one..don't forget to tip the hair stylist(if ur lucky u may get stlyed by Babe).

Vinoth

Anonymous said...

Заработок в сети [URL=http://wmr1000.ru/]online заработок в Интернете[/URL] Биржи ссылок. Новости, бонусы wmg и многое другое. Основы поисковой оптимизации для новичков: раскрутка сайта, базовые факторы продвижения, мониторинг. Просто и понятно даже для непрофессионала.

Anonymous said...

Игры, ставшие культовыми... Игры, незаслуженно забытые... Игры, которые сейчас можно [URL=http://oldgamer.ru/]совершенно легально и совершенно бесплатно скачать[/URL]!

Shan said...

arumai.. arumai..