Thursday, March 22, 2012

செ.மா. மெ !

பங்குனி வெயிலையே தாங்கவொண்ணாமல், டிராபிக் காண்ஸ்டபிள்கள் அட்டைக்கூழால் செய்த காக்கித்தொப்பிக்களை அணிந்து கொண்டு, இருபது லட்ச ரூபாய் காரை இருனூறு ருபாய்க்காக ஓரந்தள்ளுகிறார்கள். தலைவியின் இரும்புக்கர-ஆணையால், தலைக்கவசம் இல்லாமல் பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது. நடுத்தர வகுப்பின் இன்ஸ்டால்மென்டில் வாங்கிய டூ வீலரின் பெட்ரோல் டாங்கின்மேல் ஸ்கூல் பையன், அவன் தலைமேல் ஒட்டகச்சிவிங்கி போல கழுத்து நீட்டி எட்டிப்பார்த்து கை கால்களை கஷ்டப்பட்டு நீட்டியபடி குடும்பத்தலைவர், பின்னம் டேஞ்சர்லைட்டின்  நுணிப்பகுதியில் மூன்று பைகளை சுமந்தபடி தர்மபத்தினி, இருவருக்கும் நடுவில் போதிய இடைவெளி இல்லாமல் ஒரு மூன்றாம் க்ளாஸ் படிக்கும் நசுங்கிய சிறுமி என மூனேமுக்கால் சதுர அடியில் நாலுபேர் பயணித்தாலும், ஹெல்மெட் ரூல்ஸை மிஸ்டர் கு.த. ஃபாலோ செய்கிறார். எல்லாவற்றையும் பார்த்தபடி, பித்துக்குளி முருகதாஸின் "மதுர மதுர" என்ற பாடலை ரசித்தபடி காரை இரண்டு அங்குலம் நகர்த்தி நிறுத்தினேன் - லக்ஷ்மன் ஸ்ருதி சின்கலில். ஒரு பாடலை அங்குலம் அங்குலமாக ரசிப்பது என்றால் இதுதானோ !?

சென்னையில் மெட்ரோ ரயில் போடலாம் என கடப்பாறையை எடுத்தாலும் எடுத்தார்கள், டோட்டல் சென்னையே திக்குமுக்காடிப்போயிருக்கிறது. எனக்கு 2004ல் காலில் ஃப்ராக்சர் ஆனபோது டாக்டர் சொன்னார், "ஒரு ரெண்டு மாசம் லேசா வலிக்கறாப்ல இருக்கும்.. தட்ஸ் ஆல் !"என்று. "அதுக்கப்புறம் சரியாயிடுமோ ?" ... அனுபவஸ்தாரான டாக்டர் பொய் சொல்லாமல், "அதுக்கப்புறம் you get used to the pain, and that my dear friend is the cure" என்றார். சென்னை நிலைமை அப்படித்தான்.  திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயிலின் ஒவ்வொரு ப்ரகாரத்தையும் அடிப்பிரதக்ஷனம் செய்துவிட்டு வரும் நேரத்தைவிட 1400 cc காரில் அமுக்கோ அமுக்கென்று அமுக்கினாலும் அஷோக் பில்லரிலிருந்து வடபழனி சிக்னலை வந்தடையும் நேரம் அதிகம். கிண்டி அலெக்ஸாண்டர் ஸ்கொயர் சைதாப்பேட்டை இங்கெல்லாம் காரில் இருந்தபடி முடிவெட்டும் சலூன், சட்டையைக் கழட்டிக்கொடுத்தால் பானெட்டின் மேல் வைத்து இஸ்திரி செய்து கொடுப்பது, ஆர்டர் எடுத்துக்கொண்டு போய் பருப்பு வாங்கி பொங்கல் செய்து காரில் கொண்டு வந்து சுடச்சுட செர்வ் செய்வது போன்ற பலப்பல மொபைல்/இம்மொபைல் ஐடியாக்கள் தோன்றுகிறது.


மெட்ரோ ரயில் ஓய்யாரமாக ஓட ஆரம்பித்தவுடன் அதில் செல்லப்போவது யார் என்று இன்னும் யாரும் முடிவு செய்யவில்லை. பயணச்சீட்டு விலை ஏ.சி. பஸ்ஸுக்கு நிகராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ஏ.சி. பஸ்களின் "தினசரி சவாரிக்கள்" ஐ.டி கம்பெனியின் கழகக் கண்மனிகளும், கொஞ்சம் மூச்சுவிடும் நடுத்தர வர்கத்தினரும் மட்டுமே. அண்ணா நகர் திருமங்கலத்தின் கோல்டன் ஃப்ளாட்ஸின் ஐனூறு சதுரடி அளவான 3பியில் இரண்டு மகன்களை பள்ளிக்கு அனுப்பும் பார்த்தசாரதி என்பவர், சென்ட் தாமஸ் மவுண்டில் இருக்கும் தன் அலுவலகத்துக்கு ஒரு நாளைக்கு போக வர நூறு ரூபாய் செலவானால், அவர் அதைப் பயன்படுத்தப்போவதில்லை. சென்னையின் எழுபது சதவிகிதத்தை கழித்துவிடுங்கள். வாரென் பஃபெட் தவிர இன்னபிற பணக்காரகள் தினசரி அதில் செல்லப்போவதில்லை. ஒரு ஐந்து சதவிகிதத்தை தூக்குங்கள். பாக்கி இருபத்தைந்து சதவிகிதம்பேர். இவர்களில் எத்தனைபேர் இதைப் பயன்படுத்தப்போகிறார்கள் ? வேண்டாம். இப்படி மேம்போக்காக கணக்குப்போடுவது தவறு.. நிலுவையில் வரட்டும்.. பார்த்துக்கொள்வோம். ஆனால் ஒவ்வொரு தூணிலும் ஏர்டெல் அல்லது டோகோமோ விளம்பரம் கண்டிப்பாக வைக்கப்படும் என்பதை உறுதியாக யூகிக்கமுடிகிறது.

ஆன் தி கான்ட்ரரி, சென்னையின் குறுகிய சாலைகளில் குறுக்கே ஓடும் பைக்குகளுக்கு நிகராக கார்கள் அதிகம் பார்க்கத்துவங்கியிருக்கிறோம். கடந்த பதினைந்து வருடங்களாகவே ஏறுமுகத்தில் இருந்தாலும், சமீப காலத்தில் கார்கள் பன்மடங்கு விற்கத்துவங்கியுள்ளன. ஒன்னரை லட்சத்து நேனோ, மூன்றேகால் லட்சத்தில் ஆல்டோ, நாலேகாலுக்கு ஐ10, ஐந்தரைக்கு ஃபிகோ, ஆறே முக்காலுக்கு ஸ்விஃப்ட் என்று லட்சம் கார்கள் இந்தப்பக்கமும், அந்தப்பக்கம் 8.75 % ஸ்டேட் பாங்கும், 11.75% லிருந்து 12.75% வரை ஐசிஐசிஐ முதலான வங்கிகளும் அனிவகுத்து நிற்க, கையிலிருந்து ஒரு பைசா கொடுக்காமல் ஏ.சி போட்டுக்கொண்டே காரை திரும்ப ஓட்டி வரலாம். மாதக் கடைசியில் சம்பளம், ஐயப்பன் கோயிலில் சந்தனத்தை உள்ளங்கையில் கொஞ்சூண்டு குச்சியை வைத்து தேய்த்துவிடுவார்களே, அந்த மாதிரிதான் எல்லாப் பிடித்தங்கள் போக வரும்.

அதுமட்டுமல்லாது,  நாலு பேர் செல்லக்கூடிய காரில் ஒருவர் மட்டும் அலுவலகம் செல்வது டைட்டானிக் கப்பலின் லைஃப் போட்டில் டிக்காப்ரியோவை ஏற்றிச் செல்லாத உவமைக்கு ஒப்பாகும். மெட்ரோ ரயிலில் பயணித்தால், கார் இன்ஸ்டால்மெண்ட் + பெட்ரோல் செலவைவிட குறைவாகவே ஆகும் என்று உணர்ந்தால் நல்லது. சாலைகளில் கார்த்தடங்கள் குறையும். இடம் கிடைக்கும். பெட்ரோல் செலவு குறையும். பெட்ரோல் தட்டுப்பாடு குறையும். நேரம் மிச்சமாகும்.



அதுசரி, பூமிக்கு அடியிலும் மேலும் செல்லப்போகும் இந்த ரயிலினால், சென்னையின் தினசரி போக்குவரத்து சீரடையுமா ? மூக்கில் இன்னொரு துளையிட்டால் ஆஸ்துமா குணமாகுமா ? அனேகமாக இரண்டுக்கும் ஒரே விடைதான்.

இதோ அடுத்த வருடம் ஓட ஆரம்பிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும் என்ற முக்கியமான கேள்விகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, இந்தியப் பிரஜைகளின் ஜனநாயகக் கடமையான "நம்பிக்கை"யை மட்டும் வருங்காலத்தின்மீது வைப்போம்.

நம்பினோர் கைவிடப்'படார் !'

1 comment:

Me too said...

Vikatan padicha feeling! Indha Chennai updates thodarundhu varuma?