Tuesday, March 27, 2012

மரண (ச்) சம்பவம் !

இரண்டு வாரம் முன்பு எங்கள் ப்ளாட்டின் கீழ் போர்ஷனில் இருந்த ஒரு பாட்டி செத்துப்போய்விட்டார். ரொம்ப வயதாகி, தள்ளாமல் போய் படுத்தபடுத்தையாய் கிடந்து ஒரு லாஜிக்கல் கன்க்ளூஷனுக்கு வந்துவிட்டபடியால், அவர் மரணம் யாருக்கும் அதிர்ச்சியளிக்கவில்லை. இதற்கு மேலும் அவஸ்தைப்படாமல் போய்ச் சேர்ந்தாரே என்ற ப்ராக்டிகல் தாட் தான் எல்லார் மனதிலும். என் அப்பா ஃப்ரீஸர் பாக்ஸ் ஏர்பாடு செய்தார். இன்னொரு வீட்டுக்காரர் டெத் சர்டிஃபிக்கேட் டாக்டரிடம் வாங்கித்தந்தார். அம்மா காப்பி இரண்டு வேளை கலந்து கொடுத்தார். வாத்தியார் ஏற்பாடு, மின்ஸார சுடுகாடு புக்கிங் என அனைத்து வேலைகளும் யாரும் சொல்லாமல் அக்கம்பக்கத்தினர் ஏற்பாட்டில் நடந்து முடிந்தது. வில்லிவாக்கம் நடுத்தர வர்க்கத்தினரின் ஸ்வர்க்கம்.

இதெல்லாம் முடிந்து பத்தாம் நாள் காரியங்கள் நடந்துகொண்டே இருக்கும்போது, எதிர்த்த ப்ளாட்டின் கீழ் போர்ஷனில் ஒரு தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக். பில்ரோத் அழைத்துச்சென்று ஆஞ்சியோ செய்து தேறாது என்று முடிவுசெய்து வென்டிலேட்டர் போட்டு வைத்துவிட்டனர். பையனை தனியாக அழைத்துச் சென்று மேலும் சில டாக்டர்களை வைத்து ஒப்பீனியன் சொல்கிறோம், இரண்டு நாட்கள் ஐ.சி.யூவில் இருக்கட்டும் என்று பேரம் பேசியிருக்கின்றனர். எவ்வளவு பணம் செலவாகும் என்று கேட்டதற்கு "உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ?" என்று கேட்டிருக்கிறார்கள். உங்களை மாதிரியே எனக்கும் ரமணா படம் பார்த்த உணர்வுதான் என்றாலும், பதிவு அதைப்பற்றி அல்ல என்பதால் அடுத்த காட்சிக்கு போவோம்.

இரண்டு நாள் கழித்து.
 
எனது காரை சர்வீஸ் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். வீட்டில் பரபரப்பு.  எதிர்த்தாத்து மாமா இன்னும் ஹாஸ்பிடலிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ஆனால் அப்படி ஆன மறு நிமிடம் இறந்துவிடுவார் என்று சொல்லப்பட்டது. வாத்தியாருக்கு சொல்லியாச்சு. டெத் சர்டிஃபிக்கேட் எங்கே வாங்குவது என்று குழப்பம். நைட் சாப்பாடுக்கு சொல்லிவிட்டாயிற்று. சுடுகாடுக்கு போன் செய்தால் எக்ஸாக்ட் டைம் வேண்டும் என்று படுத்துகிறான். பார்ட்டி இன்னும் சாகவில்லை என்பது அவனுக்குத் தெரியாது. இவ்வாறான குழப்பங்கள்.

நிற்க. இதைப் படிக்கும்போது, ஒரு சாவை இவ்வளவு சுலபமாகவும், ஒருவரின் உயிரை இவ்வளவு அல்பமாகவும் மதிக்க முடியுமா ? கீழ்த்தரமாக இல்லையா ? என்று எனக்கும் தோன்றுகிறது. அதனால் நான் அவர்களின் உரையாடலை இடைமறித்துச் சொன்னேன். "கொஞ்சம் வெய்ட் செய்யலாமே. என்னத்துக்கு இவ்வளவு ப்ரிபேர்டா இருக்கனும்". அவர்கள் எல்லாம் என்னை கேள்விக்குறியோடு பார்த்தார்கள். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிற்பாடு இறக்காமல் புஷ்டியாக வீடு வந்தால், இவர்கள் கொஞ்சம் டிஸ்ஸப்பாயிண்ட் ஆவார்களோ என்று தோன்றியது.

ஆனால் அவர்களது கோணத்தில் மாமாவின் இறப்பு இன்று நிஸ்சயம் என்று ஆனபிறகு இதையெல்லாம் ஜரூராக வைத்திருப்பது புத்திசாலித்தனம்தான். மரணமாகப்போகும் மாமாவின் மனைவியும் தைரியமாக இருந்தார். இதெல்லாம் எனக்குப் புதிது. ஜெயகாந்தனின், இந்திரா பார்த்தசாரதியின் கதையில் வரும் வெகு பக்குவமான கதாபாத்திரங்களின் சம்பாஷனைகள் மாதிரி இருந்தது அந்த உரையாடல். இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும் இடத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில், ஒரு உயிர் இதயத்துடிப்பை கடைசியாக இயக்கி நிறுத்தியது.

பத்து நிமிடங்களில் மாமா இறந்துவிட்ட செய்தி செல்போனில் உறுதிசெய்யப்பட்டது. ஒரு முனை "ஆச்சு !" என்றும், மறுமுனை "ம்ம் !" என்றும் சொன்னது.வாத்தியார், வெட்டியான், டாக்டர், சமையல்காரன், ஃப்ரீஸர் பாக்ஸ் காரன் எல்லாரும் வேலைக்குத் தயார் ஆனார்கள்.

அம்மாவை காப்பி கலக்கச்சொல்லி, இந்த ப்ளாக் எழுதினேன்.

1 comment:

RVS said...

ச்..ச்..ச்...ச்சோ..சச்சோ..

நல்ல ஃப்ளோ! பாவம் அந்த மாமா.