Thursday, March 29, 2012

கதாகாலமென்டரி !

காலையில் கலாகேந்த்ரா.com ல் பணம் கட்டி டி.எஸ் பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் தியாகராஜ ராமாயணம் டவுன்லோடு செய்ய உட்கார்ந்தேன். பதினோறு ஃபைல்களாகப் பிரித்துவைத்திருந்தும் ஒரு ஃபைலுக்கு மேல் முழுதாக வந்து சேறவில்லை. சரி வந்தவரைக்கும் எப்படி என்று ப்ளே செய்தேன்.. நடுவிலிருந்து ஆரம்பித்து  "ராவணன் "I see !" அப்படின்னானாம்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். கேட்டவுடன் களுக் என சிரிப்பு வந்தது. ஒரு ஹரிகதா காலட்சேபத்தில் ராவணன் "ஐ சீ !" என்று சொல்லக்கேட்பது ஹாஸ்யம்தானே. தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.. முதலிலிருந்து கேட்கவேண்டும் என்ற ப்ரயாசையில் கலாகேந்த்ரா குழுவினருக்கு ஈமெயில் அனுப்பியிருக்கிறேன். பார்ப்போம்..

இந்த மாதிரி கதாகாலட்சேபங்கள் கேட்பது எனது ரசனையில் உண்டு. புலவர் கீரனின் வில்லிபாரதம் கேட்டதுண்டா ? ரயில் பயணம் மாதிரி.. மெதுவாக ஆரம்பித்து, மொள்ளமாக நகர்ந்து கட கடவென வேகமடுத்து அசுரவேகத்தில் பயணித்து.. மீண்டும் சகஜவேகத்துக்கு திரும்பி, கேட்போரை அயர வைக்காமல், சொல்லாலும், சப்தத்தாலும் கட்டிப்போடும் உரையாடல் திறன் கொண்டவர்.

"ஐவருக்கு மனதையும்.. ஐவருக்கு.. ஐவருக்கு.. ஐவருக்கு மனதையும் எங்களிடம் வேலைபார்த்து எங்களிடம் வயிற்றையும்.. ஐவறுக்கு மனதையும் எங்களிடத்தில் வயிற்றையும் வைத்து... நீ பொதுமகளுக்குப் புதல்வன் என நிரூபித்துவிட்டாயே.. விதுரா... போ !".  அடைப்புக்குறி ஆரம்பம் முதல் முடியும்வரை மூன்று வினாடிகளில் உணர்ச்சிபொங்க துரியோதனன் விதுரனிடம் வசைபாடுவதுபோல் படியுங்கள் பார்க்கலாம். அதிலும் அந்தக் கடைசி "போ !"வில் நுரையீரலிலிருந்து சப்தம்வரவேண்டும்.. சமந்த பஞ்சக மடுக்கரையில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடக்கும் யுத்தத்தை டேப் ரெக்கார்டரில்தான் கேட்டேன். ஆனால், "ஆமாம் யுவர் ஆனர். ஐ சா திஸ் துரியோதனன் பீட் அப் பீமன்" என்று நானே கோர்ட்டில் சாட்சி சொல்லும் அளவுக்கு டீட்டெயில்கள் தெரியும். அவ்வளவு காட்சிகளை உரைநடையில் உயிர்ப்பிப்பது கடினம் என்று மைக் பிடித்த அனைவரும் அறிவர். தமிழ் நடனமாடும் நாக்கு கீரனுடையது.

அதே மாதிரி நம்ம ஹரிதாஸ் கிரியின் ராதா கல்யாணம் ஒரு டி.வி.டி வாங்கினேன். டி.வி. கோபாலகிருஷ்ணன் மிருதங்கம் வாசிக்க, இசை விமர்சகர் சுப்புடு ஆர்மோனியம் போட ஒரு துண்டு கட்டிக்கொண்டு ஜெயதேவர் அஷ்டபதிக்களை பாடியபடியே நாரதகான சபாவில் கதை சொல்லிக்கொண்டிருப்பார். ராதா கல்யாணத்துக்கு பிள்ளையார் தான் ரிசெப்ஷன் இன்சார்ஜ். எமன் வந்தானாம். பிள்ளையார் தடுத்தாராம். எமன் சொன்னானாம் "பத்திரிக்கை வந்திருக்கு ஓய் ! என்னை எந்த கல்யாணத்துக்கும் கூப்பிட மாட்டேங்கறான்.. கூப்பிடாமலே என் சொரூபமா மாப்பிள்ளை வீட்டுக்காரா இருந்துடறா ! இந்தக் கல்யாணத்துக்காவது என்னை அலோ செய்யேன் !" என்று பத்திரிக்கையை காமித்தானாம். நவக்கிரகங்கள் வந்தனராம். பிள்ளையார் அவர்களிடம் "நீங்க இன்னிக்கு எங்க எங்க எப்படி உட்கார்ந்தா உங்களுக்கு நல்லதுன்னு சொல்றேன்.. அதுபடி உக்காருங்கோ !" என்றாராம். இவ்வாறு அனிமேட்டடாக கதை ஓடும்..  நடு நடுவே பாடுவார். "ராதே ராதே !ராதே ! ராதே ! ராதே க்ருஷ்ணா ஓஹோவொஹோ !" என்று பாடினால், அரங்கம் முழுவதும் திரும்ப "ராதே ராதே !ராதே ! ராதே ! ராதே க்ருஷ்ணா" என்று பாடுவர். "அந்த ஓஹோவ விட்டுட்டேளே ! ஓஹோவோஹோன்னு சொன்னா உங்க வாழ்க்கை ஓஹோ ஓஹோன்னு ஆயிடும்.. பாடுங்கோ,,. ராதே ராதே !ராதே ! ராதே ! ராதே க்ருஷ்ணா ஓஹோவொஹோ !" என்றால் அரங்கமே அதிரும் அளவுக்கு பக்திப்பரவசம் பெருக்கோடும்.

கிருபாணந்த வாரியாரும் வெரி என்டெர்டெயினிங். திருச்சி கல்யாணராமன், நாகை முகுந்தன் எல்லாம் கேட்பதுண்டு. புராணங்கள், இதிகாசங்கள் இவற்றை ஜனரஞ்சகமாக, அதே சமயம் சீப்பாக ஆக்காமல் கொண்டு செல்லவேண்டும். இப்பொழுதெல்லாம் விஜய் டி.வியில் "பக்தித் திருவிழா"வில் பலபேர், கண்கள் கொப்பளிக்க ப்ரவசனம் செய்கிறார்கள். சிலது கேட்பதற்கு ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. பலது எரிச்சல் ரகம். முக்கியமாக விஷய ஞானம் வேண்டும்.

காமத் என்ற வயதானவர் ஒருவரிடம் "Assembler" படித்தேன். அவர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் சப்ஜெக்ட் சம்பந்தப்பட்டது. தினம் ஒரு மணி நேரம் க்ளாஸ். என்னுடன் க்ளாஸுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் மண்டையில் விஷயங்கள் வழிய வழிய ஊற்றிவிடுவார். கம்ப்யூட்டர் பாடம் படிப்பதுகூட ஒரு எக்ஸைட்டிங் விஷயம், வாத்தியாரிடம் சரக்கிருந்தால்.

அந்த மாதிரி, விஷய ஞானமுள்ளவர்கள் செய்யும் ப்ரவசனம் / ப்ரசங்கங்களைக் கேட்பது திகட்டாத அனுபவம். ஒரு கதையிலிருந்து கிளைக்கதை.. அதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக்... அங்கிருந்து ஒரு செய்யுள்.. அதன் பாடல்.. என்று சங்கதிகள் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால், ஒரு கதையை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு அதை நயம்பட சொல்லுபவர்கள், இரண்டு நிமிடங்களில் போர் அடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

எதற்கு இதெல்லாம் எழுதினேன் என்றால் - இந்த ராமயண, மகாபாரத கதைகள், உபகதைகள், கிளைக்கதைகள், கிராமத்து மறுவல்கள் என்று தேக்கிவைக்க ஆரம்பிக்கவேண்டும். மிதுன ராசிக்கு வருங்காலத்தில் Imagination குறையும் அபாயமிருப்பதாக ஜோசியம் சொல்கிறது. கலாகேந்திரா மாதிரி நிறையபேர் முனையவேண்டும். விற்றால், வாங்கினால் போதுமா... அதை ரசிக்க ஆரம்பிக்கவேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் எந்த ஒரு வஸ்துவையும் எடுத்துக்கொள்ளுங்கள்... அதன் முக்கியமான ingredient என்று நான் கருதுவது அதன் முதல் imaginationஐத்தான். அந்தப் பொருள் உருவாகாதபோது, அதனைப்பற்றிய கிரகிப்பும், எண்ணமும், கற்பனையும் எப்படி இருந்திருக்கும். இந்த கற்பானாக்ருதியை சாமான்யத்தில் வளர்க்க முடியாது. ஸ்கூலிலும், காலேஜிலும் கற்பனைத் திறனை வளர்க்க வகுப்புக்கள் இல்லை.. மாறாக, அதை வதைக்கவே "மனப்பாடப்"பாடங்கள் பல உள்ளன. சோ, நமக்கிருக்கும் ஒரே அல்லது ஒரு வழி, நமது புராணங்கள் அல்லது இதிகாசங்கள். They make rich imagination. Guaranteed.

பார்ப்போம். பதிவை முடிக்கும் முன் கீரனின் ஒரு ஃப்ளோவை ரிப்பீட் செய்ய முயல்கிறேன்.. முதலே சொன்ன "போ !" வின் கன்டினுவேஷன்.

"துரியோதனன் தனது முடிவை இங்கேய தேடிக்கொண்டான். பிற்காலத்தில் வீமனுக்கும் அவனுக்கும் சமந்த பஞ்சகத்தில் நடக்கவிருக்கும் யுத்தத்தில் அவன் இறக்கப்போவதாக இருந்தாலும்.. இங்கே.. இந்த இடத்திலே, விதுரனை "பொதுமகளுக்குப் புதல்வன்" என்று சொல்லி..... தனது முடிவை அங்கேயே தேடிக்கொண்டான். . திருக்குறளில் ஒரு அருமையான குறள் ஒன்னு உண்டு. "அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தரம்". அழுக்காறுன்னா என்ன ? பொறாமை. ஒருவன் பெரிய பதவிகளை அடையும்போது.. இவனை மாதிரி நாமும் வரவேண்டும் என்று தோன்றுவது பொறாமை அல்ல. அப்படித்தோன்றினால், அது இலக்கு.. அவரே நமக்கு வழிகாட்டியாக மாறுகிறார். ஆனால், மாறாக அவன் அப்படி நல்ல நிலமைக்கு வந்துவிட்டானே என்று குமைவது - அழுக்காறு. அவா என்றால் ஆசை. இந்த ஆசைன்னா என்ன தெரியுமா ? ஒன்றை அடைய நினைத்து, அதை அடைய ப்ரயத்தனப்பட்டு.. அதை கஷ்டப்பட்டு அடைந்து.. அடைந்தபின் அதை அனுபவிக்காமல், அதைத் தாண்டி அடுத்த ஒன்றை அடைய நினைப்பது - அவா. முடிவில்லாதது !ஆக, துரியோதனனுக்கு "ராஜசுய" பட்டம் வென்ற தருமனைப்பார்த்து அழுக்காறு வந்தது... அதை அடைய எண்ணிய "அவா" பிறந்தது.. அதை அடையவிடாமல் தடுக்கும் விதுரனிடம் வெகுளி ஏற்பட்டது.. அந்த வெகுளியினால், சொல்லின் தன்மை அறியாமல் "பொதுமகளுக்குப் புதல்வன்" என்ற இன்னாச்சொல் வெளிப்பட்டது.. எனவே, அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்.. இந்த நான்கும் முளைத்து துரியோதனன் தனது முடிவை இங்கேயே தேடிக்கொண்டான். !"


எப்படி ? :)

1 comment:

Anonymous said...

Keerthi,

Kamath session is unforgettable nice to see his name in the article.

Overall article is good.

Dhivakar