வெய்யில் சென்னையில் ஆரம்பிக்கும்போது, அதை மக்கள் வெகு உற்சாகமாக வரவேற்பதுண்டு. கர்சீப்பால் முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துப் பிழிந்து "ப்ச்சேய் !" என்று உச்சரித்து வரவேற்பது சென்னை மரபு. ஏழு குதிரைகள் பூட்டி அழகிய தேரில் காலச்சக்கரம் சுழல ஆதித்ய பகவான் வந்ததெல்லாம் அந்தக்காலம். இப்பொழுதெல்லாம் 300bhpல் அக்னிபகவான் விஜயம்தான் சென்னையில், மே - ஜூன் மாதங்களில். ஒவ்வொரு வருஷமும் தமிழகத்தில் இரண்டு வாக்கியங்கள் இலகுவான உரையாடல்களில் இடம்பெறும். ஒன்று : "கருணாநிதி இந்த வருஷம் தாண்டமாட்டார்". இன்னொன்று : "போன வருஷத்தை விட இந்த வருஷ வெய்யில் ரொம்ப ஜாஸ்தி". பல ஆண்டுகளாக இரண்டில் ஏதாவது ஒரு விஷயம் பலித்துக்கொண்டே வருகிறது.
லயோலா காலேஜின் ப்ளாட்பாரங்களில் தர்பூசணிக்கடைகள் வருடம் தவறாமல் தோன்றும். பைக்கை சைடு ஸ்டேண்டு போட்டு ஒரு பெத்தை தர்பூசனியை வாங்கி புல்லாங்குழல் வாசிக்கும் பாவனையில் தாகம் தணித்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களில் பலர் ஸேல்ஸ் அல்லது மெடிக்கல் ரெப் என்பது எனது ஸ்டாடிஸ்டிகல் கணக்கு. தர்பூசணி எனக்குப் பிடிக்காத ஒரு பழம் / காய். யாரோ சின்ன வயதில் யானை முட்டை என்று சொன்னதாலோ என்னவோ, தெரியவில்லை.
திமுக, தேமுதிக, அதிமுக, அம்பேத்கார் கழகம், சுபாஷ் தெரு ஆட்டோ சங்கம், வில்லிவாக்கம் வியாபாரிகள் சங்கம் என்று சங்கம் சங்கமாக தண்ணீர்ப் பந்தல்கள் முளைக்கும். அதற்கு நன்கொடை கடை கடையாகப் பிடுங்கப்படும். பின் ஒரு பானை வாங்கி அதில் நீர் ஊற்றி பேண்டு வாத்தியங்கள் முழங்க சங்கத்தலைவரை வைத்து திறந்துவைத்து, மத்திய அரசின் வண்மைப் போக்கையும், ஒபாமாவின் சர்வாதிகாரத்தையும், இலங்கைத் தமிழர்களின் கண்ணீர்க்கதைகளையும் பேசி, சாடி ஓய்வதற்குள் தண்ணீர் தீர்ந்துவிடும். அடுத்த நாளோ, அல்லது இரண்டு நாட்கள் கழித்தோ, அங்கே இருந்த பானை மாயமாய் மறையும். அது வைக்க குவிக்கப்பட்டிருந்த மணலில் ஒரு தெருநாய் கதகதப்பாய்ப் படுத்திருக்கும்.
ராஜா பாதர் ஸ்ட்ரீட் ரத்னா ஃபேன் ஹவுஸ், கூவிக் கூவி ஏ.சி. விற்க ஆரம்பிப்பார்கள். அந்த ஹிட்டாச்சி ஏ.சி. சொளைய்யா முன்னூறு ரூபாய் தள்ளுபடி என்று காலத்துக்கு ஒவ்வாத விளம்பரங்கள் எல்லா எஃப்.எம் சேனல்களில் கேட்கலாம். வெய்யில் அல்லது கடும் உஷ்ணம் தாக்கி இரண்டு அல்லது மூன்று பேர் கலைஞர் செய்திகளில் மரணம் சம்பவிப்பார்கள். அவர்களது வாழ்க்கைத் துணைவர் (spouseக்கு வினைச்சொல் இல்லாத பெயர்ச்சொல் தேவை) மைக்கைப் பிடித்து ஆளுங்கட்சியின் அஜாக்கிரதையே மரணத்துக்குக் காரணம் என்று புலம்பிக்கொண்டிருப்பார். ஆளுங்கட்சியினரோ அம்மாவின் துதிபாடி, வெயில் காலத்திலும் குளிர்காய்ந்துகொண்டிருப்பர்.
ஜீன்ஸ் டீஷர்ட் நங்கையர், பூதாகாரமான கூலிங் கிளாஸ் அணிந்து வண்ணக்குடை தலைக்குமேல் காக்க மேனிப்பராமரிப்பில் முனைந்திருப்பர். ஹோண்டா ஆக்டிவா பெண்கள், ஜரிகைபோட்ட சுடிதாரோ, புடவையோ தரித்து கையில் சாக்ஸ் மாதிரி க்ளவுஸ் அணிந்துகொண்டு செல்வதைப் பார்க்கலாம். வெய்யில் காலத்தில் மட்டுமே, பயணியர் நிழற்குடை சமத்துவபுரமாக விளங்கும். பேருந்துக்குள் கம்பியைப் பிடித்து நின்றால் உள்ளங்கை வியர்க்கும்.
பள்ளி விடுமுறைவிட்ட சிறார்கள், கிடைக்கின்ற சுவர்களில் ஸ்டம்பு வரைந்து கிடைத்த மட்டையையும் கிடைத்த பந்தையும் எடுத்துக்கொண்டு, வழியில் தட்டுப்படும் சகவயதினரை குழுவில் சேர்த்து ஒரு மினி உலகக்கோப்பையை சிங்கிள் காஜிலும் ஒன் பிட்ச் கேட்சிலும் நடத்திக்கொண்டிருப்பர். இவர்களுக்கு மட்டும் வெய்யிலைப் போக்க ஒரு ரூபாய் வாட்டெர் பாக்கெட் போதும்.
படித்த பெற்றோர்களின் பாவப்பட்ட குழந்தைகள், அவர்கள் பெற்றோர் விருப்பத்திற்கு இணங்க மியூஸிக் கிளாஸ், கராத்தே கிளாஸ், ஸ்விம்மிங் கிளாஸ், அபேக்கஸ் என்று லீவு நாளிலும் டைம் டேபிள் போட்டு கழிப்பர். ஒரு நாள் எம்.ஜி.எம்மோ, விஜிபியோ, குவீன்ஸ்லாண்டோ இட்டுச்செல்லப்படும். வாரம் ஒரு நாள், தெருவில் ஒய்யாரமாக மணி அடித்தபடி வரும் ஒரு ஐஸ்கிரீம் வண்டி ஜன்னல் வழியாக அழைத்து நிறுத்தப்படும்.
சாயங்காலம் ஐந்தரை டு ஆறு மணிக்கு வீடு திரும்பும் அலுவலர்கள் அசதியுடன் ஹாலில் ஃபேனின் ரெகுலேட்டரை ஐந்தில் இருக்கிறதா என்று சந்தேகத்தோடு தொட்டுப்பார்ப்பார்கள். தண்ணீர்க் குழாவைத்திறந்தால் சுள்ளென்று உரைக்கும் உஷ்ணமான வெண்ணீர் வரும். ப்ளாட்டில் கீழ் வீட்டுக்காரருக்கு ஜன்ம பலனாக, வீட்டுக்கு வருவோர் போவோரெல்லாம், "உங்க வீடு மட்டும் எப்படி சார் கூலா இருக்கு ?!" என்று வயித்தெரிச்சலோடு புகழ்வர். என் அப்பா சிகப்புத்துண்டை நீரில் உலர்த்தி சேரில் போட்டு ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து கொள்வார்.
மாமிக்கள் வடாம் உலர்த்தும் வைபவத்தை ஆரம்பிப்பர். இப்பொழுதெல்லாம் காக்காக்கள் cuisineஐ மாற்றிக்கொண்டதால், இவற்றை சீண்டுவதில்லை. உடம்பில் நாலு லிட்டர் ரத்தமும் எட்டு லிட்டர் சிக்கரி கலந்த கெட்டியான ஃபில்டர் காப்பியும் கொண்டவர்கள் கூட சாயங்காலத்துக்கு மாறுதலாக ரஸ்னா கரைத்தால், குடிப்பர். ரஸ்னா, நீர்மோர் , பானகம் என்று டிரிப்ஸ் பாட்டில் மாதிரி ஃப்ரிட்ஜில் அடுக்கப்படும். சீண்டப்படாத ஐஸ் க்யூபுகள் உபயோகப்படும்.
இத்தனை வெய்யிலிலும் மெரினாவின் பாலைவன மதியங்கள் "பாலைத் திணை"களை "நெய்தல்" ஆக்கிக்கொண்டிருக்கும். திருச்சி மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் மாம்பழக்கடை மாதிரி சென்னை மார்கெட்டில் மாம்பழ சாம்ராஜ்யம் ஆரம்பிக்கும். வெள்ளரிக்காய் மிளகாய்ப்பொடி மேவ விற்கப்படும்.
சலூனில் சம்மர் கிராப் கட்டாயமயமாக்கப்படும். கோடையில் திடீரென்று மழை பொழியும். ரமணன் சொல்லி இன்னும் மூன்று நாட்கள் இடியுடன் கூடிய மழை தமிழகமெங்கும் நீடிக்கும் என்று செய்தி வெளியாகும் நாளோடு முடிந்துவிடும்.
இன்னும் பல விஷயங்கள்.. சுருக்கமாக, சென்னையில் சம்மர் சீசன்தான் களைகட்டும். சென்னைக்கு அடையாளமே அதுதானே.
ஏப்ரல் வந்தாயிற்று. சென்னை ஆயத்தமாக உள்ளது. கமான், சம்மர். !
3 comments:
dickens wudehouse kalki
ஒரு விஷயம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.....other one not happening !!!!!!We will get one day leave if that happens !!!
உண்மை :) ராஜா பதார் ஸ்ட்ரீட் ரத்னா பேன் ஹவுஸ் விளம்பரம் தங்களையும் பாதித்து இருக்கிறது ....
Post a Comment