டீஸல் அம்பாஸடரின் அதிர்வான ஓட்டத்தில் கன்னத்து சதைகள் குலுங்கியபடி மாயவரம் இரயிலடிக்கு வந்து சேர்ந்தபோது மணி சரியாக பத்தரை. மயிலாடுதுரை சந்திப்பு என்று ஒளிர்ந்துகொண்டிருந்த பச்சை நியான் விளக்கின் வெளிச்சத்தில் டிக்கிக்குள் சாவியை நுழைத்து திறந்து பைகளை இறக்கிவைத்துக் கொண்டிருந்தான் டிரைவர் கிருஷ்ணன். இரண்டு நாட்கள் சுற்றிய சுற்றில், அந்த அம்பாஸடரின் சோபா செட்டிலிருந்து கிஸான் டொமேட்டோ கெட்சப் மாதிரி அவஸ்தையாக கீழிறங்கிக்கொண்டிருந்தோம். நான், என் சகதர்மினி, என் அம்மா. அப்பா மட்டும் பின்சீட்டிலேயே இன்னும் அமர்ந்திருந்தார். வண்டிக்கூலி செட்டில் செய்ய கிலோமீட்டர்களை கூட்டி கழித்து சலவை நோட்டுகளை எண்ணிக்கொண்டிருந்தார்.
கீழிருந்த பைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு பதினோறு படிகள் மேலேறிக் கொண்டு வைத்தேன். எங்கள் இரயில் வரவேண்டிய நேரம் பன்னிரண்டு முப்பத்து எட்டு. இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. டிக்கெட் கவுண்டரில் மட்டும் ஃபேன் ஓட அதன் காற்றுப்பாதையில் இருந்த ஒரு மெல்லிய புஸ்தகம் திறந்து மூடி சப்தம் செய்துகொண்டிருந்தது. தரையில் நாலைந்துபேர் லுங்கி போர்த்தியபடி தூங்கிக்கொண்டிருந்தார்கள். பத்தரை மணி நிசப்தம் அம்பாசடரின் கதவு அடைக்கப்படும்போது மட்டும் அகன்று திரும்பியது. அப்பா வந்தார். பின்னாலேயே கிருஷ்ணன் "சரி சார்.. ! நான் வரேன்.. நல்லபடியா போயிட்டுவாங்க.. அடுத்தாலே வரப்போ செல்லுக்கு அடிங்க.. நான் வந்துர்ரேன்.." என்றபடி கைகுலுக்கி கொஞ்சமாகச் சிரித்து விடைபெற்றுக்கொண்டான். அப்பா அதிகமாக பேரம் பேசியிருக்கக்கூடும்.
"எப்போடா நம்ம வண்டி ?"
"இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு"
உறவினர்களை உறங்கவிடாமல்செய்ய மனமில்லாததாலும், சீக்கிரம் கிளம்பி ரயிலடியில் காத்திருக்கலாம் என்ற முடிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாலும் மாயவரத்தை விட்டு வெளிநடப்பு செய்ய காரேறி வந்தாயிற்று. இனி இரண்டரை மணிநேரம் கழிக்கவேண்டும். நான்குபேரும் பேட்டரி கரைந்து வெறும் கூடுகளை சுமக்கும் சதைகளாக வலுவிழந்து சுரத்தில்லாமல் இருந்தோம். நல்ல விடுமுறை முடிந்த சோகமும், அடுத்த விடியல் சென்னை பரபரப்பில் என்ற உண்மையும் உணர்ந்ததால், கையில் மாட்டிய பைகள் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே கனத்தது.
"என்ன கோச் நம்மள்து ?"
"பி ஒன். இஞ்சின்லேர்ந்து அஞ்சாவது கோச்"
"போய் அங்கே உக்காந்துக்கலாமா ? எந்த ப்ளாட்பாரம் ?"
"மாயவரத்துல என்ன ப்ளாட்பாரம்.. எல்லம் மொத ப்ளாட்ஃபாரம்தான். அதுவும் இப்பொவே போய் என்ன பண்ணப்போறோம்.. அடிப்ரதஷணமா நடந்தாகூட.." என்று சொல்லிக்கொண்டிருந்த வாக்கியத்தைக்கூட முடிக்கத் திராணியில்லாமல் நிறுத்திக்கொண்டேன்.
நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்தில் கைவைத்த இரும்பு இருக்கைகள் மட்டும் இருந்ததால் கால் நீட்டி அமர இடம்தேடி முதல் நடைமேடைக்கு கிட்டத்தட்ட தவழ்ந்து வந்தோம். அகலமாக சலவைக்கல் பதித்த ஒரு அறுகோண கட்ட இருக்கையில் உட்கார்ந்து கால்களை மொள்ளமாக தூக்கி நீட்டிக்கொண்டோம். மனைவியும் தாயும் சப்பளாங்காலிட்டு ஆளுக்கொரு விசிறியை வீசி வராத காற்றை அழைத்துக்கொண்டிருந்தனர்.
இந்த கருங்கற்கள் பதித்த கோயில்களில் சுடும்வெயிலில் ப்ரகார வலம்வருவது தினம் சாக்ஸ் போட்டு மெத்தென ஷூ மாட்டி கார்பெட் தரையில் நடக்கும் என் போன்றோரின் கால்களுக்கு மகாசோதனையான விஷயம். அதுவும் சிலபேர் காரில் கோயிலுக்குச் செல்லும்போது, செருப்பை பாதுகாக்கவோ, அல்லது செருப்புக்கு காசு கொடுக்க பயந்தோ, காரிலேயே விட்டுவிட்டு சென்று, திரும்பி வரும்போது காலில் சுளீர் சுளீர் என்று சுடும் சூட்டை தாங்கமுடியாமல் குதிகாலில் குதித்து மஹாத்மா காந்தி தண்டியாத்திரை பாஸ்ட் பார்வேர்டில் செல்வதைப்போல, குதித்து வெளிவருவார்கள். நானும் அப்படியே. அதுவும் உப்பிலியப்பன் கோயிலிருந்து வெளிவரும்போது பெருமாள் துரத்திஅடித்ததைப்போல வெளியே ஓடினேன். பெருமாள் சிரித்தபடி "மாம் ஏகம் சரணம் வ்ரஜ !" என்று சொன்னார். உமக்கென்னய்யா, உள்ளே ஏசியும் ஃபேனும் ஓடறது. எனக்கு, அந்த டிரைவர் பய, எங்கேயோ ஓரத்தில் வண்டியை நிறுத்தியிருக்கான்.. யோவ் கிருஷ்ணா.. எங்கேய்யா பார்க் பண்னிருக்கே !! மதியம் நடந்ததை எண்ணியபடியே பாதங்களை நிறவிக்கொண்டிருந்தேன். பத்து முப்பத்தியாறு.
தூரத்தில் இன்னொரு கார் வந்து நின்ற சப்தம் கேட்டது. அப்பா கிடைத்த இடத்தில் படுத்து சன்னமாக குறட்டை விட ஆரம்பித்திருந்தார். மரங்கள் எல்லாம் பாரதிராஜா படத்தில் நடந்த ஏதோ அதிர்ச்சி சம்பவத்தைப் பார்த்ததைப்போல உறைந்து நின்றன. ஒரு இலைகூட நகரவில்லை. நான்கூட வாயால் ஊதிப்பார்த்தேன்.. ஏதாவது பட்டர்ஃப்ளை மன்னாங்கட்டி எஃபெக்டில் க்ளிக் ஆகி நான் வாயில் ஊதிய காற்று பெரும் புயலாய் மாறலாம். அன்ஃபார்சுனேட்லி அன்றைக்கு அது நடக்கவில்லை. ப்ளாட்பாரத்தில் ஒரு மூன்று பேர் வந்துகொண்டிருந்தனர். அம்மா கையைத் தூக்கிக்காண்பித்ததில் அவர்கள் எங்களை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தனர்.
"யாரும்மா !"
"நாம மாத்தூர்ல பாத்தோமே.. நம்ம டிரெய்ன்லதான் வரா போலருக்கு"
அருகில்வந்ததும் அடையாளம் தெரிந்தது.
"நீங்களும் மன்னையா !" என்றார் மூவரில் ஒருவர்.
அப்பா அரைத்தூக்கத்தில் முழித்துக்கொண்டார்.
"மன்னையா ?"
"மன்னார்குடி எக்ஸ்ப்ரெஸ்.. இல்லையா ?"
"ஓ.. நாங்க ராமேஸ்வரம்.."
"ஓஹோ.. ட்வெல் தெர்டி எய்ட்.. ?"
"ஆமா.. மன்னை ?"
"தோ.. லெவன் ஃபிஃப்டி"
"ஓ.. இருக்கே, இன்னும் ஒன்னரை மணி நேரமாச்சும்.."
"ஆமாமா.. !"
என்னைபார்த்து சிரித்தார்.. நான் மரியாதைக்கு சிரமப்பட்டு சிரித்தேன்.
"உங்க புள்ளையா.. ?"
"ஆமா.. புள்ள மாட்டுப்பொன்"
என் மனைவியும் சிரித்து நமஸ்காரம் சொன்னாள்.
"எங்க இருக்கேள் ?"
இந்த கான்டெக்ஸ்டில், எங்கே பணிசெய்கிறேன் என்று அனுபவத்தில் புரிந்ததால் "சீ.ட்டி.எஸ்" என்றேன்.
"ஓஹோ.. சீ.டி.எஸ்.. வெரிகுட்.. சாஃப்ட்வேர் தானே !"
"ஆமா.. "
"என் மச்சினர் பொண்ணும் அங்கேதான் வேலைக்கு இருக்கா.. சீனியர் அசோசியேட்.. "
"ஓஹ்.. ஒகே !"
"இவன் தாம்பரத்துல இருக்கான். இவளும் அதே கம்பெனிதான்.. இவளுக்கு போரூர் !" என்றாள் அம்மா.
அவர் திரும்பிப் பார்த்து அவர் மனைவி(யாக இருக்கவேண்டும்)யிடம், "ஏண்டி.. நம்ம இவ.. ம்ம்ம்ம்... சுமித்ரா.. அவளும் சி.டி.எஸ்தானே"
அவர் "ஆமாமா.. தொரப்பாக்கம் ப்ராஞ்ச்"
"ஆங்.. ரைட்.. ரைட்.. தொரைப்பாக்கம்.. உனக்குத் தெரியுமா ? ஓல்டு மகாபலிபுரம் ரோடுல இருக்கே" என்றார், என்னைப் பார்த்து.
"தெரியும் மாமா.. முன்னே அங்கேதான் இருந்தேன்.."
"ஹ்ம்ம்ம் " என்றார். கொஞ்ச நேரம் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் பார்த்தார்.
அப்பா மறுபடி படுத்துக்கொண்டார். விசிறிகள் இரண்டும் வீசிக்கொண்டு இருந்தன.
"பகல்லே போயிட்டு ராத்திரி வரதுகள், குழந்தைகள்.. சாப்பாடு சரியா கிடைக்கறதில்லே.. தூக்கம் சரியில்லே.. சனி, ஞாயிறுன்னா கோயில் குளத்துக்கு நேரமில்லாம, தூங்கித் தூங்கி வழியறதுகள்.. சம்பளம் மட்டும் சொளைய்யா கொடுத்துடறான்." ஒரு நீண்ட நெடிய உரையாடலுக்கு அஸ்திவாரமிட்டார்போல் அவர் சொன்னதை நான் வெறுமென ஆமோதிப்பதா, இல்லை புத்திசாலித்தனமான முட்டாளாக விளம்ப வேண்டுமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
மாமா விடவில்லை. "உங்களுக்கும் அப்படித்தானே.. நீங்களும் சீனியர் அசோசியேட்டா ?". இது மாதிரி ஒன் வேர்ட் ஆன்ஸர்கள் சுலபம். முன்னே கேட்ட எஸ்ஸே கேள்விகள்தான் சத்ருக்கள்.
"நான் மேனேஜர். எனக்கு எப்பவாவது லேட்டாகும்.. தெனம், கரெக்ட் டயத்துக்கு ஆத்துக்கு வந்துடுவேன்."
"பரவாயில்லே.. அதுமாதிரி இருந்தா நன்னா இருக்கும்."
கொஞ்சம் இடைவெளி விட்டார். நான் இடைப்பட்ட நேரத்தில் எழுந்துகொண்டேன். என் அம்மா என்னைப் பார்த்தாள்.
"ஜஸ்ட் ஸ்ட்ரெட்ச்சிங் மை லெக்ஸ் !" என்றேன்.
மொள்ளமாக அந்த வட்டாரத்திற்குள்ளேயே நடந்தேன்.
மாயவரம் தண்டவாளங்களில் சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி குப்பை இல்லை. வில்லிவாக்கம் ஸ்டேஷனில் ரயிலுக்குக் காத்திருப்பவர்கள், ரயில் வருகிறதா என்று நோட்டம் விட்டு, அகஸ்மாத்தாக டிராக்கின் மீது கன்ட்ரோல் செய்ய முடியாமல் எச்சல் துப்புவார்களே... அது மாதிரி இங்கே இல்லை போலும்.
எங்கிருந்தோ வெள்ளை வேட்டி சட்டையில் ஒருவர் ப்ளாட்பாரத்தில் நுழைந்தார். வேகமாக நடந்து.. ஓரமாக இருந்த ஒரு ரூமை கதவு தட்டினார். யாரும் திறக்கவில்லை. வந்த வேகத்தில் வெளியே சென்றார்.
மணி பத்து ஐம்பது தாண்டி இரண்டு வினாடிகளுக்கு ஒரு வினாடி என்ற வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தது.
மறுபடியும் வெள்ளைச் சட்டை வந்தார். இந்த முறை அவர் பின்னாலேயே இன்னொருவர், ஓட்டமும் நடையுமாய் வந்தார். கையில் சாவி இருந்தது. திறந்து உள்ளே சென்று லைட்டைப் போட்டார். "வி.ஐ.பி லவுஞ்ச்" என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. யாரோ வரப்போகிறார்கள் என்று தெரிந்தது. ஏ.சி. இயக்கப்பட்டது தெரியும் அளவுக்கு ஏ.சி. சப்தம் போட்டது. ப்ளாட்பாரத்தில் விழிப்புடன் இருந்த அனைவரும் அங்கேதான் பார்த்துக்கொண்டிருந்தனர்.
வெள்ளைச் சட்டை வெளியே வந்து செல்போனில் பேசினார். கொஞ்சம் தள்ளி இருந்ததில் காதில் விழவில்லை. பேசியதை நிறுத்திவிட்டு கையில் சுருட்டிவைத்திருந்த துணி ஒன்றை எடுத்து பூனல் மாதிரி மாட்டிக்கொண்டார். ஷண நேரத்தில் வெள்ளைச்சட்டைக்காரர் மறைந்து டவாலி ஒருவர் தோன்றினார். "கலெக்டர் வரும் பின்னே" என்று நினைத்துக்கொண்டேன்.
"நம்ம ரயில் இப்பொ எங்கே இருக்கும் ?" என்றார் அப்பா. பாவம் சரியாக தூக்கம் வரவில்லை அவருக்கும். சட்டை பனியனில் வியர்வை.. கொசுத்தொல்லை வேறு.
"திருச்சிலேர்ந்து கிளம்பியிருக்கும்.." என்று உட்கார்ந்துகொண்டேன்.
பக்கத்து சீட்டு மாமா, இரண்டு நிமிடங்கள் மௌனமாய் இருந்தது தாங்க முடியாமல், "மன்னை கும்பகோணம் தாண்டியிருக்கும் !" என்றார்.
திபுதிபுவென மூன்று போலீஸ், இரண்டு ஃபைல் தூக்கிய ஆசாமிகள் சூழ குள்ளமாய் ஒரு கலெக்டர் ப்ரவேசித்தார். டவாலி விறைப்பாய் வி.ஐ.பி லவுஞ்சின் கதவி திறந்துவைக்க கலெக்டர் உள்ளே சென்றார். தூரத்திலிருந்து மூச்சிறைக்க கையில் ப்ளாஸ்க்கோடு இன்னொருவர் ஓடிவந்து ரூமுக்குள் புகுந்தார்.
"கலெக்டர் போலருக்கு"
"அவரும் மன்னைலதான் வரார்போலருக்கு !"
மணி பதினொன்று ஐந்து.
அங்கேயே பார்த்துக்கொண்டிருந்தால் போலீஸ் ஏதாவது கேள்விகேட்கப்போகிறார்களே என்று பார்வையை அங்கிருந்து அகற்றினேன்.
கொஞ்சமாக மரங்கள் தலையாட்டிக்கொண்டிருந்தன. மெல்லிய தென்றல், கொஞ்சம் சூடாக ஸ்பரிசங்களை வருடிச்சென்றது. ப்ளாட்பாரத்தில் உறங்கிக்கொண்டிருந்த தெருநாய் திடுக்கென விழித்து, ட்யூட்டி முடிந்து தண்டவாளத்தில் குதித்து எங்கேயோ ஓடிப்போனது. அதே தண்டவாளத்தில் சுத்தியலால் தட்டியபடியே ஒருவர் காக்கி யூனிஃபார்மில் நடந்துவந்துகொண்டிருந்தார்.
"நாளைக்கு சீக்கிரமா ஆபீஸ் போனுமா ?" என்றாள் அம்மா.
"ரெகுலர் டயம்தான். ட்ரெய்ன் ஆறரைக்கெல்லாம் மெட்ராஸ் போயிடும்."
நாளை ரயிலிலிருந்து இறங்கி போர்ட்டர் படை, ஆட்டோக்காரர் படை, டேக்ஸிக்காரர் படை எல்லாவற்றையும் தாண்டி, வெளியே வந்து கால்டேக்ஸி பிடித்து மூட்டை முடிச்சுகளை ஏற்றி வில்லிவாக்கம் வீடு சென்று சாவியைத் தேடித்துழாவிக் கண்டுபிடித்து, "சொர்கமே என்றாலும் அது நம்மூரப்போலவருமா !" என்று நம்ம வீட்டு டாய்லெட்டைப் பார்த்தவுடன் வரும் நிம்மதியுடன் முந்தைய நாள் மாலையுடன் சேர்த்த காலைக்கடன்களைக் கழித்து, குளித்து பின் பல்தேய்த்து, அரக்கப்பரக்க காப்பி குடித்து, கையில் கிடைத்த ஆடைகளை மாட்டி, ஆபீஸ் கிளம்பவேண்டும்.
இதற்கு பதிலாக மாயவரத்திலேயே இன்னொரு நாள் தங்கி காளியாகுடி ஹோட்டலில் நெய்ப்பொங்கல் சாப்பிட்டு, அவயாம்பாள் கோயிலுக்குப் போய்வந்த பின் அருணா ஐஸ் ஃபாக்டரியில் ஃப்ரூட் சாலட் சாப்பிடலாம் தான். ஹ்ம்ம்.. ஆனால், மாயவரம் இப்பொழுது காஸ்ட்லியாகிவிட்டது. ஒரு டபிள் பெட்ரூம் பஸ் நிலையத்துக்கு அருகில் ஆயிரம் ரூபாய் ஆகிறது. நமக்கு மரியாதை + யோக்யதை ரெண்டு நாள்தான் என்று நினைத்துக்கொண்டேன்.
மாமா கிளம்பினார்.
"இந்த எஸ் செவென் கோச் எங்க வரும் தெரியுமா ?"
"தெரியலையே மாமா. டிக்கெட் கவுன்டர் கிட்டே எழுதியிருப்பா. நான் வேணும்னா பாத்துட்டு வந்து சொல்லட்டுமா ?" என்று எங்கே சரி என்று சொல்லிவிடப்போகிறாரோ என்ற பயத்தில் வாக்கியத்தின் கடைசிப்பகுதியை ஈனஸ்வரத்தில் உச்சரித்தேன்..
"நோ ! நோ.. இட்ஸ் ஆல்ரைட்... லெட் மீ ஹாவ் அ வாக் !" என்று எழுந்து போனார். அவர் போவதையே ஒரு போலீஸ்காரர் கவனித்துக்கொண்டிருந்தார். கலெக்டர் பரவாயில்லை டயத்துக்கு வந்து ஒழுங்காகக் காத்திருக்கிறார். கலெக்டருக்கெல்லாம் எப்போதுமே போலீஸ் பாதுகாப்பு உண்டா.. இல்லை மாவோயிஸ்ட் சம்பவத்துக்கப்புறம்தான் இப்படியா என்று ஒரு ஐயம். இந்த விஷயங்களில் தமிழகம் நிச்சயமாக அமைதிப்பூங்காதான். நம்ம ஊர் வீரப்பன் கடத்தியதுகூட கண்ணட நடிகரைத்தானே... கடைசியாக நம்ம ஊரில் கடத்தப்பட்டது (அதாவது தீவிரவாதிகளால்) அரவிந்தசாமியைத்தான்.. அதுவும் ரோஜா படத்தில்.. என்று எக்குத்தப்பாக எண்ணிக்கொண்டிருக்கும் நேரத்தில், போன வேகத்தில் யாராலும் கடத்தப்படாமல் திரும்பவந்தார் மாமா.
"ஏந்திரு..யேந்திரு.. எஸ் செவன் அந்தப்பக்கம்.. அன்ரிஸர்வ்டு கிட்ட.. இப்பொவே போய் உக்காந்துக்கலாம்.. " என்று பதினொன்னரை மணிக்கு ஆக்டிவாக இருந்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு நிமிட இடைவெளியில், அசையக்கூடிய உயிர்களும், பொருட்களும் அசைய ஆரம்பித்தன. ஒரு வயதான தாத்தா, கையில் காப்பி சம்படத்துடன் தள்ளாடியபடி நடந்துகொண்டே, பழம்பெரும் கர்நாடக இசை மேதை எம்.டி.ராமனாதனின் குரலில் (அவர் குரல் கேட்காதவர்களுக்கு இது புரியாது) அடித்தொண்டை கிழிய "கா..ஆ...ஆ...ஆ...ப்ப்ப்பீ !" என்று கத்தி காப்பி விற்க முற்பட்டார். யாரும் வாங்குவதாய் இல்லை. ரயிலில் வரும் யாரும் வாங்குவார்களா என்பது சந்தேகமே.. ஒரு முழு நீள ரயிலில், மாயவரத்தில் இறங்கி நடுராத்திரியில் காப்பி குடித்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வருபவர்கள் அதிகபட்சமாக இரண்டுபேர் இருக்கலாம்.
மேலே ஒலிபெருக்கி ஜலதோஷமுள்ள மூக்கைப்போல் ஒரு முறை சினுங்கியது. அனேகமாக ப்ளாட்பாரத்திலிருந்த இருபது பேரும், நாற்பது காதுகளும் கவனத்தை அந்த ஒலிபெருக்கிமேல் வைத்தன. "பயணிகளின் கனிவான கவனத்திற்கு...வண்டி எண்..[..] இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாவது நடைமேடையில் வந்து சேரும்".
அப்பா முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
"இது வந்து, கிளம்பிப்போய் அம்பது நிமிஷத்துக்கப்புறம் நம்ம ட்ரெயின் வரும் !"
"இனிமே இப்படி புக் பண்ணப்டாதுடா.. அவஸ்தையா இருக்கோன்னோ !"
"ப்ச்..!"
தூரத்தில் மணியடித்து ஏதோ ஒரு லெவல் க்ராஸிங் கதவடைத்தது.
மாயவரத்திலிருந்து ஏறும் டி.டி.ஆர்.. ஜம்மென ஜவ்வாது வாசனை கமழ பவுடர் அடித்து கோட்டு மாட்டிக்கொண்டு ஜபர்தஸ்தாக நுழைந்தவுடன் போலிஸ்காரர், விரலசைத்து அவரை அழைத்தார். இருவரும் ஒரு ஓரமாகச் சென்று ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். டவாலி வேகமாக வெளியே வந்தார். பின்னால் கலெக்டர் வந்தார். வெளியே வந்து ப்ளாட்பாரத்தில் நின்றார். பின்னாலிருந்து வந்த போலீஸ் அவர் தோளுக்கும் காதுக்கும் இடைப்பட்ட இடத்தில் கிசுகிசுத்தார். அதைக் கேட்டு தலையசைத்த கலெக்டர் நடக்க ஆரம்பித்தார். எங்களைத் தாண்டிப்போய் தூரமாக பரிவாரங்களுடன் நின்றுகொண்டார்.
"அவர் நிக்கறாரே.. அனேகமா நம்ம ட்ரெயின்லயும் நம்ம கோச் அங்கேதான் வரும்னு நினைக்கறேன்.. "
ரயில் சப்தம் தொலைவில் கேட்டது.
கோயிலில் சாமிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்வதற்குமுன் திரைபோட்டு, வெகு நேரம் எடுத்து, நாம் பொறுமை இழந்துபோகும் தருவாயில் உள்ளேயிருந்து மணியடிக்க ஆரம்பிப்பார்கள். நாம் பக்தியை மெஷின்கன் மாதிரி வெடிப்பதற்கு தயாராய் வைத்துக்கொண்டு பல்லைக்கடித்துக்கொண்டு எப்போது திரை திறப்பார்கள் என்று காத்திருப்போமே.. அது மாதிரி.. ரயில் வருகிறது என்று சப்தம் கேட்கிறது.. ஆனால் கண்ணுக்குத் தெரியவில்லை என்றால், அந்த திசையையே எந்த நிமிடமும் ரயில் வரப்போகிறது என்று எதிர்பார்த்துக்காத்திருப்போமே.. அந்த மாதிரி, ஒரு இரண்டு நிமிடங்கள் கடந்தன.
பின் தூரத்தில் ஒரு வெளிச்சம்.. கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி.. இருளைக் கிழித்துக்கொண்டு வெளிப்பட்டது.. கூடவே கொஞ்சும் டீசல் இஞ்சினின் சப்தம். ஜிக்.. ஜிக்..ஜிக்..ஜிக்.. என்ற தாளக்கட்டில்.. எங்கோ ரயில் வந்துகொண்டிருந்தாலும், நம் அருகில் இருக்கும் தண்டவாளத்தில் கூசலான சப்தம் ஒன்று கேட்கும்.. ப்ளாட்பாரமே களைகட்டியது.. இந்த சில நிமிடங்களுக்காகத்தானே நாள் பூராவும் தவம்கிடக்கிறேன் என்று ப்ளாட்பாரம் எண்ணக்கூடும். ரயில் இல்லாத ப்ளாட்பாரம், அமங்கலம் என்று சொல்ல முடியாதென்றாலும்... ரயில் இருக்கும்போது அதற்கு அதிகப்படியான களை என்று சொல்லலாம்.
மயிலாடுதுரை சந்திப்பில் மெதுவ்வாக நுழைந்தது மன்னார்குடி எக்ஸ்ப்ரஸ்.
அன்ரிஸர்வ்டு கம்பார்ட்மென்டுகளில் ஏற்கனவே தொங்கிக்கொண்டிருந்தவர்களை நகரச்சொல்லி ரயில் கூடவே ஓட ஆரம்பித்தனர் சிலர். சென்னை வரை எப்படிச்செல்லப்போகிறார்கள். தூங்காமல் ? தொத்தியபடி ?
கலெக்டர் திரும்பி போலீஸுக்கு நன்றி சொன்னார். அவர் நின்ற இடத்தில் ஃபர்ஸ்ட் ஏசி கோச் நின்றது. உள்ளேறி மறைந்தார். நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் வந்து நின்ற கோச்சில் உயிர் நடமாட்டமே இல்லை. ஒரே ஒரு ஜன்னல் மட்டும் திறந்து, கம்பி வழியாக ஒருவர் எட்டிப்பார்தார். பின் என்னைப் பார்த்து "க்யா ஸ்டேஷன் ?" என்று கையை அசைத்து பாவனையாகக் கேட்டாலும் ஹிந்தியில் கேட்டார்போல் இருந்தது. "மயிலாடுதுரை" என்றேன்.
திடீரென்று ஒரு கத்தல் கேட்டுத் திரும்பினேன். அன்ரிஸர்வ்டு கம்பார்ட்மென்டில் சண்டை. ஒரு ரயில்வே போலீஸ் கையில் லத்தியுடன் ஓடினார். முன்னேயிருந்து ஒரு விசில் சப்தம் கேட்டது. இரண்டு நொடியில் பின்னேயிருந்தும் கேட்டது. சிக்னல் விழ, கார்ட் பின்னாலிருந்து விளக்கசைக்க.. மன்னை எக்ஸ்ப்ரஸ் மாயவரத்துக்கு டாட்டா சொன்னது.
கேப்பை கழற்றிவிட்டு போலீஸ்காரர்கள் ரயில் நகரும் திசைக்கு எதிர் திசையில் நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
"....." என்று ஏதோ சப்தம் கேட்க... ஒரு கோச்சிலிருந்து ஒரு கை நீண்டு டாட்டா காண்பித்தது. எஸ் எய்ட் கோச் அது.
ஒரு நிமிடம் கடப்பதற்குள், கடைசி கம்பார்ட்மெண்டின் பின் பகுதியின் எக்ஸ் தெரிய, சிகப்பு விளக்கு மின்ன சூன்யத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.
இன்னும், ஐம்பது நிமிடங்கள்.
ப்சேய் !
4 comments:
Thanks for writing about my Town and its very interesting.
Keerthi, Welcome back! and thanks for getting back to blogging. Really missed your posts - esp the Tamizh ones. I kept checking the avyukta.net site and today with little hope landed here and was pleasantly suprised. Ippo dhaan neenga "Distilled Waters"-kku appuram potta post-a padikka aarambichirukken... Will definitely comment on the posts as and when I read them. Thanks again!
Well done keerthi. If that boring two hours can become such a nice blog means let us always book mannai express.
Awesome Keerthi. Loved every bit of it. Excellent usage of the language, choice of words and flow. Please continue to write.
Post a Comment