Monday, December 31, 2012

2013 ஜோ(ஹா)ஸ்யம்.

1. மின்சாரத் தட்டுப்பாடு கணிசமாகக் குறையும். விசிறிக்காம்பில் முதுகு சொறிந்துகொண்டபின்னர், பக்கத்தாத்து மாமா மாதிறி ஒரு பத்து லட்சம் மாமாக்கள் மாநிலம் முழுதும் விசிறிக்கொள்வதால், காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகமாக வாய்ப்பு உள்ளது. 

2. மதுபானக் கடைகளில் திருட்டு குறையும். எல்லாவற்றிலும் பூட்டுப்போடப்பட்டு விட்டதால், பாதுகாப்பாக வியாபாரம் நடக்கும்.

3. கேபிள் டி.வி. டிஜிட்டல் மயமாக்கல், கார்க் கண்ணாடிகளில் சன் பிலிம் பிய்த்தல், தலைகளில் ஹெல்மெட் அணிதல் போன்ற சட்டங்கள் எல்லாம் சென்ற வருடம் போலவே, இந்த வருடமும் கட்டாயமயமாக்கப்படும்.

4. மே மாசம் வெய்யில் சென்ற வருடங்கள் இல்லாத அளவிற்கு கொளுத்தும். (இது எந்த வருடத்துக்கும் பொருந்தும் ஜோஸ்யம்).

5. விலைவாசி வெகுவாகக் குறையும். சம்பளம் எக்கச்சக்கமாக உயரும். அப்புறம் விடிந்ததும் விழிப்பு வந்து க்னவு கலைந்துவிடும்.

6. ஒபாமாவுக்கு ரிட்டையர்மென்ட் இன்னும் நான்கு வருடங்களில் என்பதால், ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளின் பென்ஷனை நமது ஆறாவது சம்பளக் கமிஷன் மாதிரி உயர்த்த வாய்ப்பு உள்ளது.

7. இந்த வருடம் ஆப்பிரிக்காவின் எந்த நாட்டில் கிளர்ச்சி விழா வைக்கலாம் என்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

8. சுஷ்மா ஸ்வராஜ் 2014 பிரதம மந்திரி பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட முன்மொழியப்படுவார். மூன்றாவது அணி என்ற தமாஷ் மீண்டும் செய்தித்தாள்களில் ஜோக்குகளுக்கு பதிலாக வெளியாகும்.

9. பெண்கள் பாதுகாப்புக்காக சட்ட மாற்றங்களும் சில கட்டுப்பாடுகளும் உருவாக்கப்படும். அதை முன்னர் சொன்ன Point 3யோடு சேர்த்துக்கொள்ளவும்.

10. இரண்டு புதிய புயல்கள் வீசும். ஒன்றுக்காவது  நமீதா பெயர் சூட்டப்படும்.

11. படம் வெளிவரும் நாள் முன்பே DTH என்பது பழகிப்போய், அடுத்தகட்டமாக சிலர் படம் எடுக்கும்போதே DTHல் காண்பிப்பர்.

12. செல்போன்களின் அகலம் உள்ளங்கையைத் தாண்டும். டேப்லட் கம்ப்யூட்டர்கள் க்ரோசினை விட அதிகமாய் விற்கும்.

13. தஞ்சாவூர் வரை சென்னை விரிவாக்கப்பட்டு, சென்னையிலிருந்து கல்லெறி தூரத்தில் இருக்கும் ஜெயங்கொண்டானில் முன்னூறு சதுர அடியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட அதி நவீன வசதிகளுடன் இன்டிபெண்டன்ட் வில்லா எழுபது லட்சங்களுக்கு விற்கப்படும்.

14. வால்மார்ட்டில் இந்த வருடம் ஆடித் தள்ளுபடி விளம்பரம் இருக்கும்.

15. IRCTCல் லாட்டெரி டிக்கெட் அறிமுகம் செய்வார்கள். குலுக்கல் எல்லாம் கிடையாது. டிக்கெட் வெறுமன வாங்க முடிந்தாலே உங்களுக்குப் பரிசு நிச்சயம்.

16. நவம்பர் 12, 2013 (11/12/13)ல் உலகம் அழியும் என்று மாயாண்டி காலெண்டரில் தினப்பலன் போட்டிருக்கும்.

17. ஃபேஸ்புக்கின் குறைந்தபட்ச வயது வரம்பு குறைக்கப்படும். 66A இவர்களுக்குப் பொறுந்தாது.

18. பேருந்தில் படியில் தொங்கும் வயதானவர்களுக்கு பஞ்சப்படி கிடையாது என்று சட்டம் வரும்.

19. புதிது புதிதாய் பழமையான கோயில்கள் தோன்றும்.

20. 2013 போனதே தெரியலை.. கண்மூடிக் கண் திறக்கறத்துக்குள்ளே.. அவ்ளோ ஃபாஸ்ட். ஓடியே போயிடுத்து.. என்று எல்லோரும் நம்புவோம்.

சுபம்.

No comments: