Tuesday, May 28, 2013

கஷ்டகாலம்


ஆடியபாதம் வீட்டில் பவர் கட்டாகியிருந்தது. மணி இரவு பத்தைத் தாண்டிவிட்டது. அவர் வீட்டில் இன்வர்ட்டர் பேட்டரி ரிப்பேர் வேறு. சுழலாத காற்றாடியும் எரியாத மின்விளக்கும்தான் இனி தமிழ்நாட்டின் தேர்தல் சின்னங்கள். இரண்டு மணி நேரம் மின்சாரம் தினம் மிச்சம் பிடித்தது போக உபரியாக இப்படி இரவில் அணைத்து ப்ராணனை வாங்குகிறார்கள் கிராதகர்கள்.



ஆடியபாதத்திற்கு கும்பகோணம் பூர்வீகம். அங்கிருந்து பிச்சையான பிச்சையடித்து டிரான்ஸ்ஃபர் வாங்கி குழந்தைகள் படிப்பிற்காக சென்னை வந்து தினம் க்ளோரின் தண்ணியில் தலைக்கு குளித்ததாலும், நடுத்தர வர்கத்தின் கனக்கும் சுமைகளின் வலியினாலும் தலைமுடியெல்லாம் கொட்டி, அங்கே தடையில்லாமல் வியர்வை அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது. குத்தாலத் துண்டை ஈரத்தில் நனைத்துப்பிழிந்து சட்டை போடாத உடம்பில் சுற்றிக்கொண்டார். ஒரத்தில் லேசாகத் தையல் பிரிந்த இரும்பு ஈஸி சேரில் அன்-ஈஸியாக உட்கார்ந்திருந்தார். வெளியை விட உள்ளே அதிகப் புழுக்கம்.



"வந்துப் படுங்க.. அரை மணி நேரத்துல வந்துரும்".

"...."



ஆடியபாதம் காதில் இதுவும், இதற்கு இருபது மணி நேரம் முன்னரிலிருந்து பேசியது எதுவுமே விழவில்லை. மனம் வேறெங்கோ சிக்கியிருந்தால், சதா திறந்த காதும் இறந்த காதுதான்.



ஏழையாகிப்போன பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவர் ஆடியபாதம். பதினைந்து வயதிலிருந்தே முதுமை ஆரம்பித்துவிட்டது. படிக்கும்போதே பாத்திரக் கடை வேலை செய்து அப்பாவின் எஞ்சிய சில நிலங்களில் பலதை விற்று அக்காவுக்கு கல்யாணம் செய்தாயிற்று. வேண்டாத சகவாசத்தால் சீட்டுக் கச்சேரியில் பாகவதராகிப்போனார். தீம்பழக்கத்தால் கொஞ்ச கொஞ்சமாக வருமானமும், கடைசியில் வேலையும் முற்று பெற்றது. அம்மா ஒரு நாள் ஒப்பாரிவைத்து உடம்பில் மண்ணென்னெய் ஊற்றி மிரட்டியதினாலும், வைத்து ஆட பத்து பைசா கூட இல்லாததாலும் சீட்டுப் பழக்கம் தற்காலிகமாக தடைபட்டது. பக்கத்துவீட்டுக்காரர் சிபாரிசில் பெரியகடைத் தெருவில் வேறொரு பாத்திரக்கடையில் அதே வேலை கிடைத்தது.



தூரத்து உறவில் கொஞ்சம் எழ்மையான பெண்ணொருத்தியை அம்மா தாமதமில்லாமல் கல்யாணம் செய்துவைத்தாள். ஆடியபாதமும் தன் பங்குக்கு தாமதமில்லாமல் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். மனைவிவழிச் சொந்தத்தில் இருந்த பெரியபுள்ளி ஒருவர் மூலம் பேங்க் வேலை கிடைத்தது. பெண் குழந்தைகளும், வட்டிக் கடனும் அவர் வயதோடு வளர்ந்தன. மனைவி மட்டும் தனக்குத் தெரியாமல் ரகசியமாக மிச்சம் பிடித்து சேமிக்கிறாள் என்று அவருக்குத் தெரியும். செக்கண்ட் ஹாண்ட் சைக்கிள், டிவிஎஸ் ஃபிஃப்டி ஆனது. சம்பளம் ஹீனமாக உசர்ந்தபோதெல்லாம், ஏதாவது பெருஞ்செலவு வந்து உட்கார்ந்தது. அம்மா பக்கவாதம் வந்து மூன்று வருடம் கழித்து காலமானார். மகள்கள் தனித்தனியாக பெரியமனுஷி ஆனார்கள். இருவரில் ஒருத்தி நன்றாகப் படித்ததால், ஒரு பக்கம் சந்தோஷமாகவும், மறுபக்கம் செலவாகவும் அவரை இடித்தது.



கட்டாயம் சென்னையில் தான் படித்தாகவேண்டும் என்று பிடிவாதம். பெண்ணைத் தனியாக அனுப்பக்கூடாது. டிரான்ஸ்ஃபர் கேட்டு அலையாய் அலைந்தார். காலேஜ் அட்மிஷனும் டிரான்ஸ்ஃபரும் ஒருசேரக் கிடைத்தது. நடுத்தர வர்கம் ஒரு கவலை முடிந்தபின் ஆவலாக அடுத்த கவலையைத் தேடிச் செல்கிறது. இவளுக்கு கல்யாணம் செய்தாக வேண்டும். சின்னவளுக்கும் சேர்த்துச் செய்தால் நல்லது. சென்னைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஓட்டமாய் ஓடிவிட்டன. இன்னும் ஜாதகம் எடுத்தபாடில்லை. மனைவியிடம் கேட்டேவிட்டார், செமிப்பு பற்றி. பன்னிரெண்டு வருடங்களில் ஒன்னேகால் லட்சம் சேர்ந்திருந்தது. அவர் அதிகம் எதிர்பார்த்திருந்தார். கல்யாணம் செய்ய நாலு லட்சமாவது செலவாகும்.



மகள் மேலே படிக்க ஆசைப்படுவாள். சின்னவள் கல்லூரியில் அடுத்த செமஸ்டர் ஃபீஸ் கட்டுவது கஷ்டம். மனைவிக்கு கிரியேட்டனின் சரியில்லை. கரண்ட் வேற கட்டாகிவிட்டது.



"தூங்கிட்டீங்களா ?!"

"ம்ஹும்."

"என்ன யோசனை.."

"ம்ம்.."



ஆடியபாதத்திற்க்கு வியர்வை நின்றபாடில்லை. மனைவிக்குத் தெரியாமல் ஒன்னேகால் லட்சத்தை அவர் நேற்று எடுத்திருந்தார். எத்தனை பெரிய துரோகம். தெரிந்தால் ரணமாக்கிவிடுவாள். பொறுப்பில்லாமல் நடந்துகொண்டுவிட்டோமா ?! ஸ்ரீநிவாஸா ! பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கனும்டா சாமி ! வெறுமையில் நெஞ்சு வலித்தது. இயலாமையில் கண்கள் கலங்கியது.



இருட்டான அரையில், நிசப்தத்தை கலைத்து செல்போன் சினுங்கியது. எஸ்.எம்.எஸ்.



"CSK down. 23 runs. We win." என்றது.



ஆடியபாதம் வெறிகொண்டு கையை ஓங்கி உசத்தி "Yessss !!" என்று கத்தினார். ஸ்ரீநிவாஸன் சிரித்துக்கொண்டிருந்தார்.

No comments: