Tuesday, December 24, 2013

ஓராயிரம் வார்த்தைகள்

இந்தக் கடவுள்கள் எல்லாம் காலையை எப்படித்தான் கழிக்கிறார்களோ, தெரியவில்லை.. ஆனால், மனிதர்கள் எல்லாம் விஜய் டி.வி யைப் போட்டு பக்தி வெள்ளத்தில் பகவானை தெளியவைத்துத் தெளியவைத்து மூழ்கடிக்கிறார்கள். பக்திப்பரவசத்தில் காதில் பால் ஊற்றினால் ஒரு நிமிடத்திற்குள் தயிர் ஆகும் அளவுக்குப் புளிக்கிறது. புரானக் கதை சொல்பவர், தன் இஷ்டத்துக்கு தான் நல்லது என்று நினைப்பதையெல்லாம் பகவான் சொன்னதாகவும், உணர்த்துவதாகவும் சொல்கிறார். தெருவுக்குப் பத்து கோயில் இருக்கும் தமிழகத்தில் சென்ஸஸ் கணக்குப்படி ஒரு பதினைந்து லட்சம் கடவுள்கள் இருப்பார்கள். இவர்களையெல்லாம் விட்டு விட்டு புரந்தரதாசரை "பம்பாய் நடிகை" கணக்காய் நம்மூருக்கு இட்டாந்து பாண்டுரங்க பஜனை பாடிக்கொண்டிருப்பார்கள். இதிலே இந்த பஜனை பாட சங்கீத ஞானமோ, குரல் வளமோ தேவையில்லை போலும். "விட்டலா !!!" என்று டோலக்குக்குப்போட்டியாக ரிதம் போட்டுப் பாடினால், ஆடியன்ஸில் ஒரு மாமி சீட்டுக்கு வெளியே வந்து முதுகிலிருந்து திருப்பாச்சி அருவாள் எடுப்பதுபோல, இரண்டு கோல்களை எடுத்து  நயமாக (கொஞ்சம் பயமாகவும்) ஆடுகிறார். போட்டிக்கு ஒரு மாமா, இருந்த இடத்தில் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு எம்பி எம்பி குதித்து தன்னைப் பாண்டுரங்கஸ்வரூபமாக எண்ணிக்கொண்டு ஆடுகிறார். இதெல்லாம் உண்மையான பக்திதானோ என்னவோ.. போகிற போக்கில் பகவானே நாத்திகனானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனக்கு மட்டும் சேனலை அவசரமாக மாற்றவேண்டும் என்ற சிந்தையுள் நின்றததனால் , அவனருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சேனலை மாற்றினேன்.

2 comments:

Unknown said...

As usual, the words and sense of humour is amazing.

Madhu said...

Plz post in your timeline