Sunday, June 29, 2014

சுபஜனனம்

"சார்.. இன்ஷூரன்ஸ் க்ளியர் ஆயிடுச்சா.."
"ஸ்ரீலக்ஷ்மி தானே... பாத்துட்டு இருக்கோம் சார்.. உங்கள்துதான்.. கொஞ்சம் லேட்டாவும்.. ரூமுக்குப் போங்க.. ஃபோன் பண்ணி சொல்லறோம்."
"தாங்க்ஸ்.. கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுருங்களேன்.. !"
"பாத்துட்டுதானே இருக்கோம். இந்த சாரைப் பாருங்க"
ஒரு அவஸ்தையான முகத்துடன் உட்கார்ந்திருந்த ஒருவரை நோக்கி கை காட்டினார்.
"இவரு, நேத்திலேந்து வெய்ட்டிங். சிஸ்டம்ல அப்ரூவல் வந்துருச்சுன்னா உடனே டிஸ்சார்ஜ் பண்ணிரலாம்."


சனிக்கிழமை வேறு. இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆனாப்லதான் என்று ரூமுக்கு வந்தேன். மணி ரெண்டேகால்.

மூன்று நாட்களுக்கு முன்னால் டெலிவரி. நினைவில் இன்னும் நுணுக்கமாய் ஞாபகம் வருகிறது.

நானும் பல சினிமாக்கள் பார்த்து, லேபர் வார்டுக்கு வெளியில் குறுக்கவும் நெடுக்கவும் வாள்நுதல் நெற்றியில் கீற்றாய் ஒரு வியர்வைத் துளியுமாய் நடப்பதுதான் தந்தையாகப்போகிறவனின் முதல் கடமை என்று நம்பியிருந்தேன். The first step as a father is the several steps outside the delivery room. ஆனால், அந்த சமயம் என்று வரும்போது, வயிற்றில் தானாய்ப் பட்டாம்பூச்சி பறந்தது. பட்டாம்பூச்சியா அது ? பதினைந்து பருந்துகள் மாதிரியல்லவா இருந்தன. நிலையாக உட்கார முடியவில்லை. எழுந்து நடப்போம் என்று என்னைக்கேட்காமலேயே வாலன்டரி ரிஃப்ளெக்ஸாக எழுந்து நடப்"கங்ராட்ஸ். அப்பா ஆயாச்சு." என்றார் நர்ஸ்.

நான் பார்க்கவே பார்திறாத, பழகாத, தெரியாத ஒரு உயிருக்காக அனிச்சையாக கண்ணீர் மல்கியது. சுற்றியிருந்தவரெல்லாம் கை கொடுத்தனர். தன் மகனைத் தந்தை எனக்கேட்ட தாயாக என் அம்மா அடைந்த சந்தோஷத்தை வார்த்தையில் விவரிக்க முடியாது. "அய்யனாரப்பா !" என்று கை கூப்பி நன்றி சொன்னார் என் அப்பா. யாரும் வீணை வாசிக்காமலே, அந்தக் கூச்சல்களெல்லாம் ஒரு மங்கள இசையாக என் காதிலும், என் நினைவுகளிலும் இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன. ஒன்பதரை மாதம் சுமந்த கரு வெளியில்வந்து தன்னைப் பார்த்து "தோ, வந்துட்டேன்" என்று சொல்லாமல் சொல்லும் அந்தப் பார்வை அவளுக்கு அந்த வலியிலும் எத்தனை மகிழ்ச்சி அளித்திருக்கும் !

 "சார், உங்க குழந்தைக்கு போஸ்ட் பெய்ட் கனெக்ஷன் வாங்கிக்கிறீங்களா ?" என்று ஏர்டெல்காரர்களுக்கே தெரிய்மளவுக்கு செல்போன்களில் செய்திகள் பறந்தன. அடையார் ஆனந்த பவனில் லட்டு பிடிக்க ஆரம்பித்தனர். குழந்தைக்குத் தேவையான சமாச்சாரங்கள் விற்கும் கடையை "இன்னிக்கு நல்ல கிராக்கி வரும்" என்ற நம்பிக்கையோடு ஒருவன் திறந்து கொண்டிருந்தான். பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது. புதன்கிழமை காலையில் பையன் கிடைச்சுது. ஸீமந்தோன்னயனத்தில் முள்ளம்பன்றியின் கூரிய முள்ளால் வகிடெடுத்து வாறி, ஆல மரக்கிளையைப் பிழிந்து மூக்கில் மூன்று துளிகள் விட்டு "பும்ஸவனம் !" என்று அவள் சொல்ல சீமந்த புத்திரன் பிறக்கவேணுமென பிரார்த்தித்து "பூர் புவ ஸ்வஹ் இதம் அனந்தாய இதம் ந மம:!" என்று சொல்லியதற்கேர்ப புருஷோத்தமன் பிறந்த ரோஹிணி நட்சத்திரத்தில் சுபஜனனம்.

மணியடித்தது. இரண்டரைதான் ஆகியிருந்தது.
"சார். கீழே வர்ரீங்களா ? இன்சூரன்ஸ் அப்ப்ரூவல் வந்துட்டு. சீக்கிரம் வந்தீங்கன்ன எவ்வளவு பேமென்டுன்னு சொல்லிருவேன்".

மூணு பத்துக்கு வெளியில் வந்தாகிவிட்டது.

எனது கார் கூடையானது. நான் வசுதேவனானேன். பின்னால் வந்த கார்கள் அனைத்தும் ஹாரனடித்து மங்களகோஷம் எழுப்பினர் (அவ்வளவு மெதுவாக ஓட்டினால், அடிக்காமல் என்ன செய்வர்).  அதுவரை பளிச்சென இருந்த மேகம் இருள ஆரம்பித்தது. புயல் போல காற்றடித்து சாலையெல்லாம் சுத்தமானது.  (சனிக்கிழமை மதியம் சாலையில் சென்றவர்களுக்கு நான் சொல்வது உண்மையெனப் புரியும்).

ஆதம்பாக்கத்தில், மாமனார் வீட்டுக்குச் செல்லும் தெரு திரும்பும்வரை இருண்டிருந்த மேகம், சடாரென மழையாகப் பொழிந்து சாலைக்கு தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தியது. வீட்டு வாசலில் கார் நின்றபோது, ஒரு கடலே வானத்திலிருந்து கீழ் விழுந்ததுபோல கனமழை. கதவு திறக்காமல் வெகு நேரம் வாசலிலேயே நின்றது காரும், காருக்குள் நாங்களும். பொறுக்க முடியாமல், ஆதிசேஷனாய் மாமனார் குடைபிடிக்க கொட்டும் மழையில், ஒரு துளி அவன் பாதம் பட்டு அவனை உள்ளே அழைத்துச் சென்றேன்.

திரும்பவும் காருக்கு குடையுடன் வந்து மனைவி, அப்பா, அம்மாவை வீட்டுக்குள் கொண்டுவருவதற்குள் தொப்பமாய் நனைந்து, பேண்ட் ஷர்ட் எல்லாம் கழற்றி, வேட்டி அங்கவஸ்திரம் தரித்து, பத்து மாச தாடியுடன் மகாபாரதத்தில் காண்பித்த அதே வசுதேவராட்டமே இருந்தேன். (கொஞ்சம் பூசிய வசுதேவர்).

எல்லாமே சாதாரண சம்பவங்கள்தான். இருந்தாலும், நம் கற்பனையில் கதை கட்டிக்கொள்ள நமக்கு உரிமை உண்டுதானே.

"உங்க பையன் மெட்ராஸுக்கு மழையைக் கொண்டுவந்துருக்கான் !" என்று சிலர் உசுப்பிவிட "இவன் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்று சிலாகித்தேன்.  குழந்தையைத் தூங்கவைத்து வாஞ்சையாய் முத்தமிட்டு வில்லிவாக்கம் திரும்பினேன். பிருந்தாவனத்தில் மூன்று மாதம் மகன் வளர (மாமியார் பெயர் பிருந்தா, தெரியுமோ ?!) ஆரம்பித்திருக்கிறான்.

4 comments:

ramani/rvsir/vrsir said...

continue the unding episode,plase

kamakshi said...

Good narration of your life event

யாத்ரீகன் said...

:-) இதைவிட பெரிய புன்முறுவல் இதை படிக்கும்போது..

பையன் பேரு கிருஷ்ணந்தானே ? :-)

வாழ்த்துக்கள்

Unknown said...

Amazing, Amazing!! what a writing :-)