Sunday, April 27, 2008

மா !


[போட்டோ - வேளச்சேரி பாலசுப்ரமணியன்]

மாம்பழ சீஸன் ஆரம்பித்து இரு வாரமாகிவிட்டது. ஆபீஸில் "க்ரீம்ஸ் ரோட்டின் பழக்கடை" (ஹெ ஹெ ! Fruit shop on Greams Road) போட்டுத்தரும் கெட்டியான மேங்கோ மில்க் ஷேக்தான் என்னுடைய லேட்டஸ்ட் அடிக்ஷன். பங்கனம்பள்ளி மாம்பழம் பழுத்துவரும் நாளுக்காக, காத்திருக்கிறேன்.

நான் ஸ்ரீரங்கத்தில் ஆறுமாதம் தங்கி வேலை செய்த நாட்கள், நல்ல வேளையாக மாம்பழ ஸீஸனை உள்ளடக்கியது.

அதிகாலை நான்கரை மணிக்கு விழித்து ராஜகோபுரத்தை தரிசித்துக்கொண்டே, முரளி கடையில் காப்பி குடிப்பது பழக்கம். முரளி காப்பி கடை வெகு பிரசித்தம். காபி டிகாஷன் போடும் பெர்குலேட்டர்கள் எட்டு சைஸில் இருக்கும்.

பிஜேபி பெரிய மனிதர்கள் அரை டிராயருடன் பேப்பர் வாசித்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டே காபி சாப்பிடுவார்கள். பெரும்பாலும் நாற்பது வருடத்துக்கு மேல் காபியை இரசிப்பவர்கள்தான் இக்கடைக்கு வருவார்கள். பில்டர் காபியின் தெய்வாம்ஸங்களை இருபது வயதிலேயே உணர்ந்து ஞானியாகிய(!) நானும் அவர்கள் லீகில் சேர்ந்து கொண்டேன்.

காபி அருந்திவிட்டு, வீட்டுக்குச் சென்று நியூஸ் கேட்டுக்கொண்டே குளித்து விட்டு, ஆபிஸ் கிளம்பிவிடுவேன். வழியில் சாத்தார வீதியில் பூ வாங்கி இரண்டாகப் பிரித்துக்கொள்வேன். ஒன்று ராகவேந்திர மடத்திற்கு; மற்றொன்று ஆபிஸில் பாண்டிச்சேரி மதரை வழிபடும் மோகன்தாஸ் என்றவருக்கு.

சாத்தார வீதி தெரியாதவர்களுக்கு - இங்கு உலகத்தில் உள்ள அத்தனை மலர்களும் கிடைக்கும். கொட்டிக் கொட்டிக் கிடக்கும். விலை மலிவாகக் கிடைக்கும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்தத் தெருவில் நடந்து சென்றால் "வளமை" என்ற சொல்லுக்கு பொருள் தெரியும். பத்து ரூபாய்க்கு சரவணா ஸ்டோர்ஸ் பை அளவுக்கு ரோஜாப்பூ வாங்கலாம்.

எல்லாம் வாங்கிவிட்டு, ராகவேந்திர மடத்துக்குச் சென்றால் - அமைதி காத்திருக்கும். கொஞ்சம் சுற்று சுற்றிவிட்டு நேரே வெளியே வந்து கண்டோன்மென்ட் பஸ் ஏறிவிடுவேன்.

அம்மாமண்டபம் வந்தவுடன், நாசித்துவாரங்களை சுத்தம் செய்ய ஆரம்பிபேன். ஓரிரண்டு முறை ஆழமாக சுவாசித்துப் பார்த்து தயாராக ஜன்னலுக்கு அருகில் முகம் வைத்துக்கொள்வேன்.

மாம்பழச்சாலை வரும்.

தாத்தாச்சாரியார் மாம்பழக்கடை என்று ஆரம்பித்து ஒரு சில பல கடைகள் மாம்பழக் கனியை விற்க ஆரம்பித்திருப்பார்கள். அந்த வாசனை இருக்கிறதே !! ஆஹா ! வாழ்க்கையில் சின்னச்சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க ஒரு குடுப்பினை வேண்டும்.

மாவடுவில் ஆரம்பித்து, புளிப்பு மாங்கா, கிளி மூக்கு மாங்கா, பழுத்தும் பழுக்காத அசட்டுப் புளிப்பு மாங்கா என்று மாங்காவின் ரேம்ப் வாக் முடிந்தவுடன், கம்பீரமாக பங்கனம் பள்ளி வருவார். கத்தியால் வெட்டினால் வழுக்கிக்கொண்டு ஒரு கதுப்பு பொளுக் என்று விழும். அவ்வளவு கெட்டியாகவும், திகட்டாத மணத்துடன் "The perfect sweetness"ஸுடன் இருக்கும். ஆரம்பத்தில் வரும் பங்கனம்பள்ளியின் விலை அதிகம். அப்புறம் காம்பெடிஷனுக்கு ருமானி வந்த பிறகு, பங்கனம்பள்ளி விலை குறையும். ருமானி கொஞ்சம் மிடில் வெரைட்டி. இட் இஸ் எ சர்ப்ரைஸ் பேக்கேஜ். திடீரென்று சில பழங்கள் அபாரமாக இனிக்கும். சில பழங்கள் அழுகிப் புளித்து முகம் சுளிக்க வைக்கும்.

இளம்பிராயத்தில் குறிப்பாக பங்கனம்பள்ளி சீஸனில், வீட்டுக்கு விருந்தாளி வந்தால் சாப்பிடும்போது மாம்பழம் நறுக்கி இலையிலிடுவர். நண்டு சிண்டுகளுக்கு கொட்டையில் ஒட்டியிருப்பதைப் போட்டுவிடுவர். எப்பேற்பட்ட அநியாயம் ! இருந்தாலும் விடாமல் கொட்டையின் நரம்புகள் தெரியும்வரை அதை வறட்சியடைய விட்டுவிட்டுத்தான் தூக்கிப்போடுவோம். ஒரு தடவை கொட்டையை மண்ணில் புதைத்து தண்ணீர் எல்லாம் விட்டு வளர்க்கத் திட்டமிட்டோம். மூன்று நாட்களில் மறுபடியும் தோண்டிவிட்டு ஸ்டேடஸ் கால் நடத்தியதில் டிஸ்ஸப்பாயிண்ட் ஆகி அப்படியே டிராப் செய்துவிட்டோம்.

பங்கனம்பள்ளி, செந்தூரா, அல்ஃபோன்ஸா எல்லாம் சென்றபின் மாங்கா மாம்பழம் சில இடங்களில் கிடைக்கும். கடைசியாக செந்தூரா. நார் நாராக இருக்கும் இந்தப் பழம் துக்க சம்பாவனை. "மாம்பழ சீஸன் முடியப் போகிறது... என்னை நீங்கள் கடைசியாகக் காணப்போகும் வடிவம் இதுவே.. அடுத்த வருடம் சந்திப்போம்" என்று விசும்பலுடன் விடைபெறும் மாம்பழம் செந்தூரா. செந்தூராவில் கொட்டைக்கும் தோலுக்கும் நடுவே பேருக்குத்தான் பழம் இருக்கும். இருந்தாலும் ஒரு ஆறுதல்.

வாரா வாரம் திருச்சியிலிருந்து சென்னை வரும்போதும் மாம்பழம் வாங்கிச் செல்வதுண்டு. மாம்பழம்.. மாம்பழ ஜூஸ், மில்க் ஷேக், மாங்கா தொக்கு (ஸ்ஸ்ஸ்ஸ் !), மாங்கா சாம்பார், மாங்கா பச்சிடி, மாவடு, மாங்கா ஊருகாய் (தொக்கு வேறு.. ஊறுகாய் வேறு), வெந்தைய மாங்காய் என்று வெளுத்து வாங்கிவிட வேண்டும்.

மாம்பழம் சர்வம் ஜகத் !

4 comments:

Narayanan Venkitu said...

கீர்த்தி

போட்டோ வேறு போட்டு
ஏன் ஐயா வயிற்று எரிச்சலை
கொட்டிக் கொள்கிறீர் ?

உலகில் பல மாங்கனிகள் இருக்கலாம்!
நம்ம ஊரு பங்கனபள்ளிக்கு முன்
எல்லாம் - ஜுஜுபீ!

Chakra said...

Thanks for this post Keerthi. Read it so many times as I have lived through this experience for 3 yrs..

Will read it few more times trying to relive the past. :)

Anonymous said...

Hi

I too from Srirangam. But you missed a Srirangam / Trichy special Himampasand (develped by Thathachariar Garden). It is a unique taste. We can see the tons of Himampasand sorting for seeling behind melur road (after Ragavendra madam).

Recently I went and enjoyed so much....

Shobana said...

How did u miss the best ever Malgova maambalam?????