Thursday, January 07, 2010

குளிர்

டேலஸ் நகரில் குளிர் வாட்டி எடுக்கிறது, குறைந்தபட்சம் என்னை. அவஸ்தை என்பதை விட, போர் அடிக்கிறது என்றே சொல்லவேண்டும். சுளீர் என்று வெய்யில் பார்த்து ரொம்ப நாளாகிறது. இதை டைப் செய்யும்போது வெளியே -14 டிகிரி... வெளியே சென்று லேப்டாப்பை வைத்தால், குளிரில் தானாக டைப் அடித்துக்கொள்ளும். இந்த ஊரில் எல்லாரும் ஃபாரன்ஹீட் கணக்கில் டிகிரியை குறிக்கிறார்கள். அப்படிச் சொன்னால் எனக்கு உறைக்க மாட்டேன் என்கிறது. 7 டிகிரி ஃபாரென்ஹீட் என்பதைவிட -14 டிகிரி செல்சியஸ் தான் உண்மை நிலையை குறிப்பதுபோல உணர்கிறேன்.

சும்மானாச்சும் வெளியே போய்விட்டுவந்தால், முகம் சில்லிட்டுக்கிடக்கிறது. சிரிக்க முடியவில்லை.. வாய் திறக்கமுடியவில்லை... இப்பொழுதெல்லாம் வெளியே பனியில் போய்விட்டுவந்தால், கண்ணாடிமுன் நின்று பார்த்து எல்லா ரியாக்ஷன்களும் வேலை செய்கின்றனவா என்று ஊர்ஜிதப்படுத்திக்கொள்கிறேன்.

இந்த ஊர்க்காரர்களுக்கு இது பழக்கமான விஷயம் என்றாலும், இந்த வருடம் போல் எப்போதும் இருப்பதில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள். "செ ! இந்த வருஷம் வெய்யில் பிளக்குது.. போன வருஷத்தைவிட இப்பொ ஜாஸ்தி" என்று மே மாதத்தின் வெகுஜன டையலாக் நினைவு வந்தது.

பனியன், ஜட்டி, சட்டை, பேன்ட், ஸ்வெட்டர், ஜெர்க்கின், ஸ்கார்ஃப், க்லவுஸ், குல்லா... எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு, நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் நடந்தது போல ரோட்டில் நடந்து செல்கிறேன். அந்த ரோட்டில் பெரும்பாலும் யாரும் நடந்து செல்வதில்லை.. இந்த ஊரிலேயே பொதுவாக நடப்பதில்லை... ஆபீஸ் வந்துவிட்டால் ப்ரச்சனையில்லை.. உள்ளே கதகதப்பாக இருக்க ஹீட்டர் முழுவீச்சில் ஓடும்.

எப்படியோ, இன்றைய சீதோஷ்ணத்திற்கு ரோட்டில் ஐஸ் தேங்கிக் கிடக்கிறது என்பதால் அலுவலகம் செல்லப்போவதில்லை. இன்னுமொரு போரிங் டே !

No comments: